2010-10-12 15:45:49

அன்னை தெரேசா தன் வாழ்வில் பெரும் தூண்டுதலாக இருந்தார் என்கிறார் காண்டர்பரியின் ஆங்கிலிக்கன் பேராயர்


அக்.12, 2010. அன்னை தெரேசா தன் வாழ்வில் பெரும் தூண்டுதலாக இருந்த காரணத்தாலேயே அவர் வாழ்ந்த இடத்திலிருந்தே தன் இந்தியப் பயணத்தை தற்போது துவங்குவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் காண்டர்பரியின் ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ்.

அன்னை தெரேசாவின் இந்தப் பிறப்பு நூற்றாண்டு விழாவில், அவ்வன்னையின் பிறரன்பு சகோதரிகள் சபை நடத்தும் ஏழைக் குழந்தைகளுக்கான இல்லத்தை சந்திக்கவும் தான் ஆவல் கொண்டுள்ளதாகக் கூறினார் அவர்.

இந்தியாவில் எட்டு நகர்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆங்கிலிக்கன் பேராயர் வில்லியம்ஸ், கல்கத்தாவில் ஆற்றிய உரையில், குழந்தைகளுக்குக் கல்வி அறிவு வழங்கவும், கைவிடப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் ஒவ்வொருவரும் விசுவாசத்தின் துணை கொண்டு சமூகங்களை உருவாக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கல்கத்தாவில் அன்னை தெரேசாவின் கல்லறை, அவர் வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி, பிறரன்பு சகோதரிகள் சபை நடத்தும் சிசு பவன் ஆகியவைகளையும் பார்வையிட்டார் இங்கிலாந்தின் காண்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் வில்லியம்ஸ்.








All the contents on this site are copyrighted ©.