2010-10-11 16:46:42

மனநலம், மனித நேயம்


அக்.11,2010. மனிதா! நீ மகத்தான பணிகள் செய்யப் பிறந்திருக்கிறாய் என்று விவேகானந்தர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் பற்ற வைத்த ஆர்வத்தீ இந்நாட்களில் இந்தியாவில் பற்றி எரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். சோதனை இல்லாமல் சாதனை இல்லை என்பது போல் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கு முன்னர் எத்தனையோ எதிர்ப்புகள், கேலிப்பேச்சுகள்... ஆனால் இவையனைத்திற்கும் மத்தியில் உலகமே வியப்படையும் வண்ணம் கோலாகாலமாய் விளையாட்டைத் தொடங்கியது. தொடர்ந்து பதக்கங்களையும் குவித்து வருகின்றது. இஞ்ஞாயிறன்று மட்டும் 5 தங்கங்கள். இத்திங்கள் காலை நிலவரப்படி 73 பதக்கங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது இந்தியா. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இஞ்ஞாயிறன்று 14 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சின் தெண்டுல்கர் பெற்றுள்ளார். இன்னும், கரூர், வையாபுரி நகரில் வாழும் மூன்று வயது சுட்டிக்குழந்தை இனியா மூன்று நிமிடத்தில் இருநூறு நாடுகளின் தேசியக் கொடிகளைத் தடையின்றி சுட்டிக்காட்டியிருக்கிறாள். உலக வரைபடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளையும் சரியாக சுட்டிக்காட்டுகிறாளாம்.

இவ்வாறு உலகில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் இடத்தில் மனிதன் சாதனை சிகரத்தை எட்டி வருகிறான். சீனாவில் சிறையில் இருக்கும் ஜனநாயக மற்றும் மனித உரிமை ஆர்வலர் லியு ஜியாபோ (Liu Xiaobo) வுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உன்னத மனிதர்களின் வீர வாழ்வு அவர்களுக்குள் இருக்கும் மகாசக்தியை நினைத்து வியப்படைய வைக்கிறது. ‘த பவர்’ (The Power) அதாவது சக்தி என்ற தலைப்பில் அண்மையில் வெளியாகியுள்ள புத்தகத்தில் அந்த நூலின் ஆசிரியர் ரோண்டா பைர்ன், நமக்குள் இருக்கும் மகாசக்தியைப் பற்றிப் பேசுகிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமானப் பலன்களைப் பெறமுடியும் என்கிறார். இன்றுவரை இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், மற்றும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவைதான் என்கிறார். சராசரி மனித மனத்தில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உள்ளன. அவற்றின் விகிதம் மாறலாமே தவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது என்றும் சொல்கிறார்.

ஆயினும் இந்த மகாசக்தி, நம்மில் வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைத்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே செல்ல நமக்குத் துணைபுரிகிறது. இருந்த போதிலும் இந்தச் சக்திகளை அடையாளம் கண்டு நாம் அவற்றை எப்படி வெளிக்கொண்டுவருவது? அதற்கும் அவர் வழி சொல்கிறார். அன்புச் சாவி, நன்றிச் சாவி, விளையாட்டுச் சாவி என்ற மூன்று திறவுகோல்களை வழிகளாக முன்வைக்கிறார்.

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம். ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டை மட்டும் அன்பு செய்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மனித குலத்தையும் அன்பு செய்யப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும். நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் அன்பு செய்கின்றீர்கள் என்று மனதுக்குள் ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள். அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும் என்கிறார் அந்த ஆசிரியர்.

இரண்டாவதாக அவர் சொல்வது : வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விடயங்களுக்காகவும் மனதார நன்றி சொல்லிப் பழகுங்கள். மனதுக்குளே அதை உணர்ந்தாலே போதும். நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித் தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் அன்பு செய்யும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள் என்கிறார்.

மூன்றாவதாக, வாழ்க்கை என்பது சீரியஸான விடயம் அல்ல. மனம்விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘சும்மா பூந்து விளையாடுங்க!’ என்கிறார். இன்றைய அவசர உலகத்தில் பலர் மனநிம்மதியை இழந்து வாழ்வதை உணர்ந்துதான் இவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. வேலை முடிந்து வீடு வந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கணணியைத் தட்டினால் அவையும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியை குலைத்து விடுகின்றன! உலகிலேயே இளம்வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு இலட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் அவர்கள் தெரிவித்தனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவிலுள்ள 10 கோடி இளம்பருவ மாணவ-மாணவிகளை மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்ற நோய்கள் தாக்கியுள்ளன. மேலை நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு 2 மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு இரண்டு மனநல மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் நான்கு பேருக்கு ஒருவர் வீதம் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒருகட்டத்தில் மனத்தளர்ச்சி நோயினால் துன்புறுகின்றனர். இஞ்ஞாயிறன்று உலகம் கடைபிடித்த மனநலம் நாள் நிகழ்வுகளிலும் இக்காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சரியான விதத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. உலக நலவாழ்வு நிறுவனம் இதற்காகப் புதிய சிகிச்சைமுறைகளை வெளியிட்டுள்ளது. நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, மனச்சோர்வு இப்படி பல்வேறு பாதிப்புக்களால் இலட்சக்கணக்கான மக்கள் மனநலம் குன்றியுள்ளனர்.

அண்மையில் காளையார்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று அலைந்த கர்ப்பிணிப் பெண் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். மனித நேயம் கொண்ட மூதாட்டி ஒருவர் அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் ஆதரவாக இருக்கின்றார். கடந்த வாரத்தில் வெளியான பத்திரிகை ஒன்றில், “மகனைத் துவைத்த தாய்” என்ற செய்தியை வாசிக்க நேர்ந்தது. கேரளாவின் ஆலப்புழா காவல்துறையிடம் சுமா என்ற பெண் நேரிடையாகச் சென்று “நான் எனது மகனை வாஷிங்மெஷின் தண்ணிரீல் முக்கிக் கொன்று போட்டேன்” என்று சர்வசாதாரணமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். காவல்துறை சுமாவின் வீடு சென்று வாஷிங்மெஷினைத் திறந்து பார்த்த போது நிரம்பி வழிந்த தண்ணீருக்குள் கவிழ்ந்த நிலையில் எட்டு மாதக் குழந்தை இறந்து கிடந்ததைக் கண்டனர். சுமாவுக்கு அடிக்கடி மனநிலை தடுமாறி விடும், என்ன செய்கிறேன் என்பது தெரியாமல் செயல்படுவாள், எவ்வளவோ சிகிச்சை கொடுத்தும் பலனில்லை என்று உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதே ஆலப்புழா அருகில் புன்னப்புறா பகுதியைச் சேர்ந்த மது என்ற மீனவர், தனது பிஞ்சு மகனின் காலைப் பிடித்துச் சுத்தித் தரையில் ஓங்கி அடிக்க மண்டை பிளந்து இரத்தமும் சதையுமாகத் தெறித்துள்ளது. தென்னாப்ரிக்கத் தாய்மாரில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் குழந்தை பிறந்த பின்னர் ஒருவகையில் மனநலம் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது.

இன்றைய பரபரப்பான உலகில் காணப்படும் மன அழுத்தம், அதனால் ஏற்படும் விளைவுகள், பதட்டம், மனச்சிதைவு, ஏக்கம் உள்ளிட்ட மனநோய்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். மூட நம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக இதனை அணுக வேண்டும். உரிய மருத்துவரின் ஆலோசனைகளுடன் சரியான மருந்துகளை உட்கொண்டால் மனநலம் பாதித்தவர்களை குணப்படுத்த முடியும், மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் திரைப்படங்கள் சரியான கோணத்தில் சித்தரிக்க வேண்டும் என்று மருத்துவர் சாரதா மேனன் சொல்கிறார். மனநோயாளிகளுக்குச் சரியான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் தேவை," என்கிறார் அபிராமி ராமநாதன். மனநலம் தொடர்பான விழிப்பு உணர்வுச் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்கிறார் தமிழகப் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் ரவீந்திரன். ஒருவர் ஒருநாளில் சராசரியாக ஐந்து நிமிடங்கள் இயற்கையுடன் இணைந்துசெய்யும் செயலிலும், வேலையிலுமே சீரான மனநலனைப் பெற்றுவிடுகிறார்கள் என்று இங்கிலாந்தில் எடுத்த ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அண்மையில் தமிழகம் கொண்டாடிய ஆயிரம் ஆண்டு ஆலயத்தைக் கட்டிய மன்னன் இராஜராஜனைக் காண்பதற்காக அவரின் ஆன்மிக குரு கருவூர்த்தேவர் சென்றிருந்தார். இவர் வருகை தருகிறார் என்றால் ஏதாவது பெரிய விடயம் இருக்கும் என்பது மன்னனுக்குத் தெரியும். அவர் வந்திருந்த நாளில்தான் இராஜராஜன், தன் தூதனை மதிக்காமல் சிறையில் அடைத்த சேர மன்னன் ரவிவர்மனைக் காந்தளூரில் போரிட்டு வெற்றி கண்டுவிட்டு கேரளாந்தகன் என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டு வந்திருந்தான். மாபெரும் வெற்றியேயானாலும் ஏதோ ஒரு சிந்தனை அவனைத் தாக்கியிருந்தது. களைப்பு கலந்த சிந்தனை. அப்படியொரு எண்ணவோட்டத்தில் இருந்தபோதுதான் கருவூர்த்தேவர் வந்திருக்கிறார் என்றதும் சோர்வையும் பார்க்காமல் ஓடோடி வந்தான். குருதேவரை வணங்கினான். ‘‘என்ன மன்னா, வெற்றி மேல் வெற்றி பெறுகிறாய் போலிருக்கிறதே. சேரன், பாண்டியன், வேங்கிநாட்டார் என்று அனைவரையும் வென்று விட்டாய். கடல் கடந்து ஈழ மண்டலம், இலட்சத்தீவு, மாலத்தீவு என்றும் உன் புலிக்கொடியை நாட்டி விட்டாய். மண்ணாசை தீர்ந்துவிட்டதா?’’ என்றார் கருவூரார். மன்னன் மௌனமாக இருந்தான். ‘‘போரெல்லாம் போதும். அமைதிதான் மக்களைக் காக்கும். எதிரிகளையும் மன்னித்து அரவணைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் உன் மனவோட்டம் இருக்குமே?’’ என்றார் முக்காலமும் அறிந்த கருவூர்தேவர். ‘‘ஆம். குருதேவா. அப்படித்தான் ஒரு சிந்தனை என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை போர்கள். எத்தனை உயிர்கள். எல்லாம் போதும் என்று தோன்றுகிறது’’ என்றாராம் இராஜராஜன்.

அன்பர்களே, இக்கால மனிதனுக்குத் தேவை மனநிம்மதி, மனஅமைதி. மனநலம். ‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது விவிலியம். நமக்குள் ஓர் அற்புதமான சக்தி இருக்கின்றது என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மனஅழுத்தம் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் காற்றாய்ப் பரந்துவிடும் என்கிறார் தி பவர் நூல் ஆசிரியர். 'கோழைத்தனத்தின் உச்சகட்டமே தற்கொலை. எனவே எந்த நிலையிலும், எதையும் எதிர்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், நம்மை இயக்கும் மகாசக்தியாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டால் எதற்கும் கலங்கத் தேவையில்லை. எப்பொழுதும் மனநலத்துடனும் வாழமுடியும்.








All the contents on this site are copyrighted ©.