2010-10-11 16:36:20

மத்திய கிழக்குப் பகுதியில் நிலைத்த அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமுதாயத்திற்குத் திருத்தந்தை அழைப்பு


அக்.11,2010. மேலும், இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தைத் தொடங்கி வைத்தத் திருத்தந்தை, அப்பகுதியில் நிரந்தரமாக அமைதி ஏற்பட உலக சமுதாயம் ஆவன செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

கர்தினால்கள், கீழைரீதி திருச்சபைகளின் முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள் என 177 மாமன்றத் தந்தையர் மற்றும் 69 அருட்பணியாளர்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, மீட்பு வரலாற்றில் அப்பகுதியின் பங்கு பற்றிக் குறிப்பிட்டு அப்பகுதியில் அமைதியும் நீதியும் ஏற்பட எல்லாருக்கும் விண்ணப்பித்தார்.

இது மத்திய கிழக்கு நாடுகளுக்கென இடம் பெறும் முதல் ஆயர் மாமன்றம் என்பதைக் குறிப்பிட்ட அவர், புனித பூமியிலும் மத்திய கிழக்கிலும் வாழும் இறைமக்கள் மீது அகிலத் திருச்சபையும் கொண்டிருக்கும் அன்பை இச்சிறப்பு மாமன்றம் வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.

அடிக்கடி துன்பங்களையும் இடர்நிறைந்த சம்பவங்களையும் அப்பகுதி மகக்ள் எதிர்நோக்கினாலும் இயேசுவின் காலத்திலிருந்து தொடர்ந்து அங்குக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவது குறித்தத் தனது நன்றியையும் தெரிவித்தார்.

பத்துத் தொழுநோயாளர் குணமடைந்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, இதற்கும் இந்த மாமன்றத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் மீட்பு உலகளாவியத் தன்மை கொண்டது என்ற சிந்தனையை இந்நற்செய்தி வாசகம் தருகின்றது என்றும் கூறினார்.

இம்மாமன்றம் மத்திய கிழக்குப் பகுதியில் திருச்சபையின் பணி பற்றிக் கவனம் செலுத்தும் எனவும், யூதர்கள் மற்றும் முஸ்லீம்களுடனான ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு ஏற்ற வாய்ப்பாக அமையும் எனவும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.