2010-10-11 16:36:34

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்களது சாட்சிய வாழ்வால் தங்களின் பிரசன்னத்தை வலுப்படுத்த முடியும் - பேராயர் எத்ரோவிச்


அக்.11,2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கான இரண்டு வார சிறப்பு ஆயர் மாமன்றம் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில், கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி (Leonardo Sandri) தலைமையில் இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியது.

கர்தினால் சாந்திரியின் வரவேற்புரையுடன் தொடங்கிய இத்திங்கள் காலை அமர்வில் உலக ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் (Nicola Eterovic) நீண்ட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

இந்த மாமன்றம் நடப்பதற்கான முதல் அறிவிப்பு, இதற்கானத் தயாரிப்புகள் நடைபெற்ற விதம், மத்திய கிழக்கு நாடுகளில் கத்தோலிக்கர் குறித்த புள்ளி விபரங்கள், பிற கிறிஸ்தவ சபைகள், யூதர்கள் மற்றும் முஸ்லீம்களுடன் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டுள்ள உறவு எனப் பல விபரங்களைத் தனது அறிக்கையில் சமர்ப்பித்தார் பேராயர் எத்ரோவிச்.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் இவ்வறிக்கையில் முன்வைத்த பேராயர், தற்போதைய நிலைமைகள் இன்னல்களையும் கவலைகளையும் ஏற்படுத்தினாலும் நற்செய்தியால் வழிநடத்தப்பட்டு தூயஆவியின் சக்தியைக் கொண்டு இறைபராமரிப்பில் பிள்ளைக்குரிய நம்பிக்கை வைத்துச் செயல்பட அழைப்பு விடுத்தார்.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையெனினும் நமது செயல்களும் சாட்சிய வாழ்வும் நமது பிரசன்னத்தை எடுத்துரைப்பதாய் இருக்கச் செய்ய முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

“மத்திய கிழக்கில் கத்தோலிக்கத் திருச்சபை : ஐக்கியமும் சான்றும்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இவ்வாயர் மாமன்றம் இம்மாதம் 24ம் தேதியன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.