2010-10-09 15:59:24

நாளுமொரு நல்லெண்ணத்துடன் இணைந்து வரும் ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
எண்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்... எண்கள் நம் மனங்களில் எழுப்பும் எண்ணங்கள் ஏராளம். மதங்களிலும் எண்களுக்குத் தனி இடம் உண்டு. எடுத்துக்காட்டாக, விவிலியத்தில் 7, 12, 40 போன்ற எண்களுக்குத் தனி இடமும், பொருளும் தரப்பட்டுள்ளன. 2000, 2001 ஆகிய ஆண்டுகளுடன் புதிய மில்லேன்னியம் ஆரம்பித்தபோது, நம்மில் எத்தனை எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன. நல்லவைகளும், அழிவுகளும் நடக்கும் என்று எத்தனை கதைகள் சொன்னோம்.
எண்களைப் பொறுத்தவரை, இந்த ஞாயிறு ஒரு தனி சிறப்பைப் பெறுகிறது. 10 10 10 என்ற இந்த எண் பலருக்கும் பலவித எண்ணங்களை, உணர்வுகளை எழுப்பியுள்ளன. 10 என்பதே ஒரு முழுமையான எண் என்று கருதி வரும் நாம் 10 10 10 என்று மூன்று முறை வரும் இந்த நாளை அலட்சியப்படுத்துவோமா?
கடந்த ஒன்பது ஆண்டுகள் இதே போல் சிறப்பான நாட்கள் வந்து போயின. 2001ம் ஆண்டு சனவரி முதல் தேதி 01 01 01 என்ற எண்ணுடன் ஆரம்பமான இந்த சிறப்பு நாட்கள் கடந்த ஆண்டு செப்டெம்பரில் வந்த 09 09 09 வரை ஒவ்வொரு மாதமும் சிறப்பு நாட்களாகக் கருதப்பட்டன. இந்தச் சிறப்பு நாட்களில் பல நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
எடுத்துக்காட்டாக, 08 08 08 அதாவது, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி இரவு 8 மணி 8 நிமிடம் 8 நொடிகளுக்கு சீனாவில் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா ஆரம்பமானது. அதே நேரம், உலகத்தின் வேப்பமயமாதலைத் தடுக்கும் ஒரு முயற்சியாக உலகின் பல இடங்களில் எட்டு நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விளக்குகள் அணைக்கப்பட்டன. சென்ற ஆண்டும் 2009ல் செப்டம்பர் 9 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விளக்குகள் அணைக்கப்பட்டன.

2010ம் ஆண்டு அக்டோபர் 10 இஞ்ஞாயிறன்று சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக, பருவநிலை மாற்றங்களில் ஏற்பட்டு வரும் ஆபத்தான போக்குகளைத் தடுப்பதற்காக, இயற்கையை மேம்படுத்தும், வளப்படுத்தும் எண்ணங்களை விதைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜப்பானில் சுமோ வீரர்கள் தங்கள் பயிற்சி நிலையங்களுக்கு இஞ்ஞாயிறன்று செல்லும்போது, சைக்கிளில் செல்லத் தீர்மானித்துள்ளனர். Croatia, Russia ஆகிய நாடுகளில் 10,000 பள்ளிகளில் மாணவ, மாணவியர் மரங்களை நடுகின்றனர். நெதர்லாந்தில் தொலைக் காட்சியை மக்கள் இந்நாள் முழுவதும் இயக்குவதில்லை என்று தீர்மானித்துள்ளனர். (இது ஒரு புதுமை இல்லையா?) பிரிட்டனில் தாவர வகை உணவையே இந்நாளில் உண்பதென்று முடிவெடுத்துள்ளனர். இந்தியாவிலும், மாலத் தீவுகளிலும் பல முக்கியத் தலைவர்களின் இல்லங்களில் சூரிய ஒளியால் சக்திபெறும் தகடுகளை இந்நாளில் பொருத்தத் தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறு, உலகின் பல நாடுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 101010 ஒரு ஞாயிறாக அமைந்ததை நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாக நாம் பார்க்கலாம். சுற்றுச் சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கு, பருவநிலை மாற்றங்களின் பயங்கரங்களைக் குறைப்பதற்கு இறை சந்நிதியில் இந்த ஞாயிறன்று நாம் கூடும் போது, நம்மை வழிநடத்த வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுவோம்.

பத்து என்ற எண்ணைப் பல வழிகளிலும் சிந்திக்கும் வேளையில், இன்றைய நற்செய்தியும் இந்த எண்ணைப் பற்றிக் கூறியுள்ளது பொருத்தமாகத் தெரிகிறது. பத்துத் தொழு நோயாளிகளை இயேசு குணமாக்கிய புதுமை இன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தொழு நோய் குறித்து, தொழு நோயாளர்களை இயேசு குணமாக்கியது குறித்து சிந்திக்கும் போது பல சவால்கள் நமக்கு முன் எழுகின்றன. சுற்றுச் சூழலையும், சுற்றியுள்ள பிற உயிரினங்களையும் பேணிக் காப்பதற்கு நாம் தரும் கவனத்தை பிற மனிதப் பிறவிகளுக்குத் தருகிறோமா என்பது நமக்கு முன் உள்ள முதல் சவால்.
இயற்கைத் தொடர்பான இயக்கங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. அதேபோல், பிற உயிரினங்களைக் காக்க எத்தனையோ இயக்கங்கள் உள்ளன. கடல் பாசியைக் காக்க ஓர் அமைப்பு, டால்பின், திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களைக் காக்க, மிருகங்களைக் காக்க, என்று பல ஆயிரம் இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களின் செயல்பாடுகளும் தீவிரமாய் உள்ளன. மனித உயிர்களைக் காக்க... கருவில் உருவாவது முதல் முதுமை எய்தி, கல்லறையில் உறங்கச் செல்வது வரை மனித உயிர்களைக் காக்க எத்தனை இயக்கங்கள் உள்ளன? அப்படி உள்ள அமைப்புக்களும் எவ்வகையில் செயல்படுகின்றன? அவைகளுக்கு அரசுகள் அளிக்கும் ஆதரவு என்ன? சங்கடப்படுத்தும் கேள்விகள் இவை.
சங்கடப்படுத்தும் ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். இயற்கை அல்லது உயிரினப் பாதுகாப்பு அமைப்புக்களில் தலைவர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்களில் பலர் சிறிது வசதி படைத்தவர்கள். இவர்கள் இல்லங்களில் பணி செய்யும் பணியாளர்கள் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள்? அந்தப் பெரிய இல்லங்களில் செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும் கவனிப்பு இந்தப் பணியாளர்களுக்குக் கிடைக்குமா? இயற்கையையும், மிருகங்களையும் காப்பற்றவேண்டுமேன்று போராடி வரும் இவர்களது இல்லங்களில் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், உதாரணத்திற்கு தொழு நோயாளிகள், வரவேற்கப்படுவார்களா? சங்கடப்படுத்தும் கேள்விகள் தொடர்கின்றன.

அக்டோபர் 10ம் தேதி இன்னும் இரு வழிகளில் சிறப்புப் பெற்றது. இந்த நாள் அகில உலக மன நலம் பேணும் தினம், மற்றும் அகில உலக மரணதண்டனை ஒழிப்பு தினம். மன நலம், மரணதண்டனை இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு மிகத் தெளிவானது. மன நலம் உருவாக வேண்டியது நம் குடும்பங்களில். குடும்பங்கள் சிதையும் போது, மன நலமும் சிதையும். மன நலக் குறைவால், குழப்பங்கள், குற்றங்கள் பெருகும். குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசுகளுக்குக் கிடைத்த ஓர் எளிய வழி... தண்டனைகள், மரண தண்டனைகள். உலகில் மரண தண்டனை 95 நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 58 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இத்தண்டனை வழங்கப்படுகிறது.
அண்மையில் மின்னஞ்சலில் வந்த ஒரு கேள்வி என் கவனத்தை ஈர்த்தது: Why do we kill people who kill people to show that killing is wrong? கொலை செய்வது குற்றம் என்று காட்டுவதற்கு, கொலை செய்தவர்களை நாம் என் கொலை செய்கிறோம்? வார்த்தை விளையாட்டைப் போல் தெரிந்தாலும், ஆழமான, அர்த்தமுள்ள கேள்வி இது.
மரண தண்டனையை விட கொடுமையான தண்டனைகளும் உண்டு. சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், வேறுக்கப்படுதல், அல்லது செல்வர் இலாசர் உவமையில் இரு வாரங்களுக்கு முன் நாம் சிந்தித்தது போல் மனிதர்களை மனிதப் பிறவிகளாகக் கூட மதிக்காமல் இருத்தல் போன்றவை மரண தண்டனையை விட கொடுமையான தண்டனைகள். இந்தத் தண்டனைகளைப் பெற்ற பத்து தொழு நோயாளிகளை இயேசு குணமாக்குகின்றார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் விவிலியத் தேடலில் பத்து தொழுநோயாளிகளை இயேசு குணமாக்கிய இந்தப் புதுமையைச் சிந்தித்தோம். அச்சிந்தனைகளிளிருந்து ஒரு சில துளிகளை இங்கு மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இயேசு கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்கள், சமாரியர் வாழ்ந்தப் பகுதிகள் அவை. நமது கலாச்சாரப் பின்னணியைக் கொண்டு இதைப் பார்க்க வேண்டுமானால், இப்படி பார்க்கலாம். அக்ரகாரத்தின் வழியாகவும், சேரியின் வழியாகவும் இயேசு நடந்தார். யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்று இயேசு கட்டாயம் சிந்தித்திருப்பார், ஏங்கியிருப்பார்.
அந்த நேரம், பத்து தொழுநோயாளிகள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதர்களா? சமாரியர்களா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளிகள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமூகமும், சமாரிய சமூகமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு அவர்களை இணைத்தது. இதையே ஒரு புதுமையாக பார்க்கலாம். நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது.
இந்த பத்து நோயாளிகளை தொழுநோய் என்ற துன்பம் பாகுபாடுகளை மறக்க வைத்தது. சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும், என்ன நடந்திருக்கும்? அதை இப்படி நினைத்துப் பார்க்கிறேன்.
"அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று." என்று நற்செய்தி கூறுகிறது. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர் உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர். மற்ற ஒன்பது பேரும் யூதர்களாய் இருந்திருக்கலாம். "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். நன்றி பெறவேண்டும் என்பதை விட, அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில் போய்விட்டது.
நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும் சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்த சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்." என்று இயேசு சொன்னதையும் நினைத்துப் பார்த்தனர்.
குருக்களிடம் தாங்கள் போகும் போது, இந்த சமாரியனுக்கு அங்கே என்ன வேலை? இந்த சமாரியனோடு அவர்கள் குருக்களிடம் போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கி வைத்த தொழு நோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே.
இப்படி வேற்றுமைப் படுத்தும் எண்ணங்களில் அவர்கள் இருந்ததை அவர்களின் உஷ்ணப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்க வேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்கு ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளை இட்டாரே... என்ன செய்யலாம்? என்ற கலக்கம். அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம். இந்தத் தெளிவோடு அந்த சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.
திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒரு புறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக் கடன் செலுத்த வந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப் பட்டது, ஒதுக்கப் பட்டது குறித்து இயேசுவுக்கு வேதனை. "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று வாய் விட்டு கேட்டே விடுகிறார். ஒற்றுமையாய் இருந்தவர்கள் எங்கே போனார்கள் என்று இயேசு அன்று கேட்ட கேள்வி இன்றும் தொடர்கிறது. அவர் கேள்விக்கு பதில் இல்லை.

இறுதியாக, நன்றியைப் பற்றி கூற வேண்டும். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கு. நம்முடைய சொந்த வாழ்வையும் ஆராய்ந்து பார்த்தால், அங்கும் இதே கணக்கு தான். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து சொல்கிறேன்.. நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்து வரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களை விட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரம் தாம் அதிகம்.
“The most important prayer in the world is just two words long: Thank you.”- Meister Eckhart. “உலகத்திலேயே மிக முக்கியமான, அவசியமான ஜெபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும். தேங்க் யு.” தமிழில் யோசித்துப் பார்த்தால், ஒரே வார்த்தைதான்: நன்றி.
இன்னொமொரு அழகான கூற்று:
“God has two homes - one in heaven and the other is a humble, thankful heart” - Izaak Walton.
“கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று பணிவும் நன்றியும் நிறைந்த உள்ளம்.” இந்த நன்றி நிறைந்த உள்ளத்தில், இல்லத்தில் எல்லாரையும் வரவேற்போம். நமது பரந்து விரிந்த, நன்றியால் நிறைந்த மனதுக்கு கடவுள் தரும் பத்துக்குப் பத்து மதிப்பெண்கள் பெறுவோம்.







All the contents on this site are copyrighted ©.