2010-10-09 15:45:27

திருத்தந்தை - எல்லாக் கீழைரீதி திருச்சபைகளும், தங்களது பொதுவானப் பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டியக் கடமையைக் கொண்டுள்ளன


அக்.09,2010. மேலும், கீழைரீதி திருச்சபை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு அச்சட்டம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களையும் இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.

எல்லாக் கீழைரீதி திருச்சபைகளும், தங்களது பொதுவானப் பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டியக் கடமையைக் கொண்டுள்ளன என்று அக்கூட்டத்தினரிடம் கூறினார் திருத்தந்தை.

கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகள், கத்தோலிக்கத் திருச்சபையோடு ஐக்கியமாக இருப்பது எந்த விதத்திலும் அவைகள் தங்களது மரபுகளுக்கு விசுவாசமாக இருப்பதைப் புறக்கணிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய கீழைரீதி திருச்சபைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ள பழங்காலத் திருச்சபையின் புனிதச் சட்டங்கள், எல்லாக் கீழைரீதி திருச்சபைகளும் தங்களது தனித்துவத்தைத் தொடர்ந்து காப்பதற்கு உதவுவதாய் இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை.

இந்த இருபதாம் ஆண்டையொட்டிய நிறைவு அதனைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்லாமல் அச்சட்டங்கள் குறித்துப் பரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.