2010-10-08 16:25:16

ப்ரெஞ்ச் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


அக்.08,2010. ப்ரெஞ்ச் அரசுத் தலைவர் நிக்கோலாஸ் சர்கோசியை (Nicolas Sarkozy) இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

33 நிமிடம் தனியே இடம் பெற்ற இச்சந்திப்பில் கடந்த ஆண்டில் திருத்தந்தை பிரான்சுக்கு மேற்கொண்ட வெற்றியுடன் நிறைவடைந்த திருப்பயணம், அச்சமயத்தில் திருத்தந்தை பிரான்ஸ் நாட்டை கிறிஸ்தவத்தின் ஆன்மா என்று குறிப்பிட்டது உட்பட சில முக்கிய தேசிய மற்றும் பன்னாட்டு விடயங்கள் இடம் பெற்றன.

இதற்குப் பின்னர் தன்னுடன் வந்திருந்த பத்துப் பேர் அடங்கிய குழுவுடன் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ப்ரெஞ்ச் அரசுத் தலைவர் சர்கோசி.

கத்தோலிக்க எழுத்தாளர் Francois-Rene' de Chateibriand என்பவரின் முக்கிய பழங்கால நூல்களைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார் சர்கோசி. திருத்தந்தையும் புனித பேதுரு வளாகத்தைக் குறிக்கும் மட்பாண்ட வேலைப்பாடுடன்கூடிய சின்னத்தை அளித்தார். இறுதியில் திருத்தந்தையிடம் ஒரு செபமாலையையும் கேட்டுப் பெற்றார் சர்கோசி







All the contents on this site are copyrighted ©.