2010-10-07 16:09:43

திருச்சபை எப்பொழுதும் சிலே மக்களின் பொதுநலனுக்காக உழைத்து வருகிறது - திருத்தந்தை


அக்.07,2010. இவ்வியாழனன்று, திருப்பீடத்துக்கான சிலே நாட்டுப் புதிய தூதுவர் Fernando Zegers Santa Cruz டமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, நிலநடுக்கம் போன்ற துன்பங்களை சிலே நாடு எதிர்கொள்ளும் போது அந்நாட்டினர் எல்லாரும் ஒன்றிணைந்து உதவி செய்வதைப் பாராட்டினார்.
சிலே நாடு சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டு இவ்வாண்டில் சிறப்பிக்கப்பட்ட வேளை, புனிதம், பிறரன்பு, மனித வளர்ச்சி அமைதி மற்றும் ஒன்றிணைந்து வாவ்வதற்கானத் தொடர் தேடல் போன்ற நற்செய்தியின் கனிகளால் நாடு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.
தலத்திருச்சபையும் அரசும் தனித்தனியே செயல்பட்டாலும் நாட்டு மக்களின் தனிப்பட்ட மற்றும் சமூக நலவாழ்வுக்கு இவ்விரண்டும் சேர்ந்தே செயல்பட வேண்டும் என்றார் அவர்.
போர்கள், பஞ்சம், கடும் ஏழ்மை, மனித வாழ்வு தாயின் கர்ப்பப்பை முதல் இயல்பான மரணம் அடையும்வரைக் காப்பாற்றப்படுதல், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான திருமணப்பந்தத்தில் அமைக்கப்படும் குடும்பம், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றிற்காகத் திருச்சபை குரல் கொடுக்கும் போது அதில் தன்னல நோக்கம் கிடையாது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.திருச்சபை எப்பொழுதும் சிலே மக்களின் பொதுநலனுக்காக உழைத்து வருகிறது என்றும் உரைத்த திருத்தந்தை அந்நாட்டினருக்கானத் தனது செபத்தையும் ஆசீரையும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.