2010-10-06 16:33:37

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி


அக்.06,2010 ஊகோலினோ (Ugolino) என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை 9ம் கிரகரி 1145ம் ஆண்டில் இத்தாலியின் Anagni ல் பிறந்தவர். பாரிஸ் மற்றும் பொலஞ்ஞஞோ பல்கலைக்கழகங்களில் பயின்றவர். திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட்டின் மருமகனான இவரிடம், அத்திருத்தந்தை பதவிக்கு வந்ததும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் தலைமைக்குரு உட்பட சில முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. 1216ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட் இறந்த பின்னர், இரண்டே நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை மூன்றாம் ஹொனோரியுஸின் பாப்பிறைத் தேர்தலில் முக்கிய கருவியாகவும் இருந்தவர் ஊகோலினோ. இத்திருத்தந்தையும் ஊகோலினோ விடம் லொம்பார்தி மற்றும் துஷியா பகுதிகளுக்கான மேலான அதிகாரத்தை வழங்கினார். அத்துடன் அப்பகுதிகளிலும் மத்திய மற்றும் வடக்கு இத்தாலியிலும் சிலுவைப்போர் குறித்து போதிப்பதற்குப் பணித்தார். 1227ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி திருத்தந்தை மூன்றாம் ஹொனோரியுஸ் இறந்தார். அதன் பின்னர் கர்தினால்கள் எல்லாராலும் ஏகமனதாய்ப் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஊகோலினோ. இவர் திருத்தந்தை 9ம் கிரகரி என்ற பெயரையும் ஏற்றார். அப்போது இவர் 80 வயதைத் தாண்டி இருந்தார். இதனால் இப்பொறுப்பை ஏற்பதற்கு மிகவும் தயங்கினார்.

1220ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி உரோமையில் மன்னர் இரண்டாம் பெடரிக் பேரரசராக முடிசூட்டப்பட்டார். அச்சமயம் அப்பேரரசர் ஊகோலினோவின் சிலுவையைப் பிடித்துக் கொண்டு புனித பூமியை மீட்பதற்காக அங்குச் செல்வதென வாக்குறுதி அளித்தார். திருத்தந்தை 9ம் கிரகரி பாப்பிறையாவதற்கு முன்னர் வகித்த முக்கியமான அரசியல் பொறுப்புக்களால் அவருக்கு ஐரோப்பாவின் அரசியல் நிலைமை, குறிப்பாக பேரரசர் இரண்டாம் பெடரிக்கின் நேர்மையற்ற தந்திர யுக்திகள் நன்றாகவே தெரிந்திருந்தன. ஆதலால் அப்பேரரசர் புனித பூமியைக் காப்பதற்காக அங்குச் செல்வதற்கான உறுதிமொழியை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார். பாப்பிறைக்குக் கீழ்ப்படிவதாகக் காட்டிக் கொண்டு கடற்பயணம் மேற்கொண்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் திரும்பி வந்துவிட்டார் அப்பேரரசர். இதுபோல் எட்டு அல்லது ஒன்பது முறைகள் பேரரசர் ஏமாற்றி விட்டார். எனவே பேரரசரின் நேர்மையின்மையில் கசந்து போன திருத்தந்தை 9ம் கிரகரி, 1228ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அவரைத் திருச்சபையிலிருந்து விலக்கி வைப்பதாக புனித பேதுரு பசிலிக்காவில் அறிவித்தார். பேரரசரும் திருத்தந்தைக்கு விரோதமான அறிக்கைகளை வெளியிட்டார். அச்சமயத்தில் ஒரு கும்பலால் கேவலப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பாப்பிறை முதலில் வித்தெர்போவுக்கும் பின்னர் பெருஜியாவுக்கும் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.

இதன் பின்னர் கிறிஸ்தவ உலகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காகப் பேரரசர் புனித பூமிக்குச் சென்றார். அச்சமயம் உரோமில் டைபர் நதியில் வெள்ளம் வந்து நீர் கரைபுரண்டோடியது. இந்த வெள்ளம், திருத்தந்தைக்குத் தாங்கள் செய்த அவமானத்தால் நேர்ந்தது என்று பயந்த மக்கள் அவரிடம் கெஞ்சி அவரை உரோமைக்கு அழைத்து வந்தனர்.. புனித பூமி சென்ற பேரரசர் திரும்பினார். ஒருவழியாய் திருத்தந்தை 9ம் கிரகரிக்கும் பேரரசர் இரண்டாம் பெடரிக்குக்குமிடையே சமாதானம் இடம் பெற்றது. இது நிரந்தரமானதாக இல்லை. பேரரசரின் மேலான அதிகாரத்தில் திருத்தந்தை தலையிடக் கூடாது என இரண்டாம் பெடரிக் விரும்பினார். திருத்தந்தை 9ம் கிரகரியும் கிறிஸ்தவ உலகத்தில் தனக்கிருக்கும் ஆன்மீக வல்லமையைச் சுட்டிக்காட்டி அதில் பேரரசர் தலையிடக் கூடாது என விரும்பினார். எனவே இரண்டாம் பெடரிக் பேரரசராக இருக்கும்வரை தனக்கும் அவருக்குமிடையே சமாதானம் நிலவாது என்பதைப் புரிந்து கொண்டார் திருத்தந்தை 9ம் கிரகரி.

இதனால் ஜெர்மனியில் இரண்டாம் பெடரிக் பேரரசருக்கு எதிராகப் போதிக்குமாறும் புதிய அரசரைத் தேர்ந்தெடுக்குமாறும் கட்டளையிட்டார் பாப்பிறை. இந்தப் பேரரசருக்கு ஆதரவாக இருப்பவர்கள் எல்லாரும் திருச்சபையைவிட்டு விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். ஆயினும் பல ஆயர்களும் இளவரசர்களும் பேரரசருக்கு ஆதரவாக இருந்து திருத்தந்தை 9ம் கிரகரியை அவமானப்படுத்தினர். இதில் மிகவும் ஏமாற்றம் அடைந்த திருத்தந்தை, பொது அவைக்காக கிறிஸ்து உயிர்ப்பு நாளில் எல்லா ஆயர்களும் உரோமையில் கூடுமாறு கட்டளையிட்டார். ஆனால் ஆயர்கள் உரோமைக்கு வருவதைத் தடை செய்தார் பேரரசர். மீறியவர்களைக் கைது செய்தான். மாறாக பேரரசரே உரோமைக்குத் தம் படைகளோடு வந்து தங்கினார். அச்சமயம் திருத்தந்தை 9ம் கிரகரி எதிர்பாராத விதமாக ஏறத்தாழ தமது நூறாவது வயதில் இறந்தார்.

13ம் நூற்றாண்டில் முதல் பாதிப் பகுதியில் வாழ்நத யாசகத் துறவிகள் திருத்தந்தை 9ம் கிரகரியைத் தமது பாதுகாவலர்களாகக் கொண்டாடினார்கள். இத்துறவிகள் தாமாக ஏற்றுக் கொண்ட ஏழ்மை வாழ்வு, அக்காலத்திய கிறிஸ்தவத் திருச்சபையின் ஆடம்பரத்துக்கு எதிர்ச் சாட்சியாக இருப்பதாக அவர் கண்டார். திருச்சபையில் நிலவிய தப்பறைகளை ஒழிப்பதற்கு வல்லமை மிகுந்த ஆயுதங்களாக இத்துறவிகளைப் பார்த்தார். இந்தத் திருத்தந்தை புனித பிரான்சிஸ் அசிசியின் ஏழ்மையைப் பின்பற்றி வெறுங்காலோடு நடந்தார். புனித பிரான்சிசும் திருத்தந்தை 9ம் கிரகரியை தனது தந்தையாக அன்பு செய்தார். அகில உலகின் மற்றும் எல்லா நாடுகளின் தந்தையாகவும் பார்த்தார். புனித பிரான்சிசின் வேண்டுகோளின் பேரில் திருத்தந்தை மூன்றாம் ஹொனோரியுஸ் திருத்தந்தை 9ம் கிரகரியை அச்சபையின் பாதுகாவலராக நியமித்தார். திருத்தந்தை 9ம் கிரகரி, புனித தொமினிக்கின் நண்பருமாவார். இவரது 13 ஆண்டுகள் 4 மாதங்கள் பாப்பிறை பதவிக் காலத்தில் சுமார் 14 கர்தினால்களை நியமித்தார். இவர்களில் பலர் துறவற சபைகளைச் சேர்ந்தவர்கள். தப்பறைக் கொள்கைகளைப் பரப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தவர். இவர் ஓர் அறிவாளி.








All the contents on this site are copyrighted ©.