2010-10-06 16:43:51

உலக இளையோர் மாநாடு வெறும் கொண்டாட்டமாக அமையக்கூடாது – திருத்தந்தையின் ஆவல்


அக்.06, 2010 ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் மாநாடு வெறும் கொண்டாட்டமாக அமையாமல், இளையோரை வழி நடத்தும் ஓர் அரிய வாய்ப்பாக அமைவதையே திருத்தந்தை விரும்புகிறார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெறவிருக்கும் இளையோர் மாநாடு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருப்பீடத்தின் பொதுநிலையினர் அவைத் தலைவரான கர்தினால் Stanislaw Rylko இவ்வாறு கூறினார்.

இளையோர் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியைக் குறித்து தன் கருத்தை வெளியிட்டார் திருப்பீடத்தின் பொதுநிலையினர் அவைச் செயலர் ஆயர் Josef Clemens. நாசி காலத்து ஜெர்மனியில் ஒரு இளைஞனாக வாழ்ந்து வந்த தன் அனுபவத்தை இச்செய்தியில் நினைவுகூரும் திருத்தந்தை, தற்காலத்து இளையோரும் உலகின் நுகர்வு கலாச்சாரம், உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலை போன்ற சிறைகளில் வாடுவதை குறிப்பிட்டுள்ளார் என்று ஆயர் Clemens கூறினார்.

ஸ்பானிய சமுதாயம் கிறிஸ்துவையும் திருச்சபையையும் நெருங்கி வரச் சொல்லி இறைவன் விடுக்கும் ஒரு சிறப்பு அழைப்பு இந்த இளையோர் மாநாடு என்று இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்ரித் பேராயரும் ஸ்பானிய ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் Antonio Maria Rouco Varela கூறினார்.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு ஸ்பானிய அரசும், மத்ரித் நகர அதிகாரிகளும் வழங்கும் ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவு கூர்வதாகச் சொன்ன கர்தினால் Varela, இந்த மாநாட்டிற்காக உழைத்து வரும் 20,000 க்கும் மேற்பட்ட இளையோருக்குத் தனிப்பட்ட நன்றியைக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.