2010-10-05 16:24:04

விவிலியத் தேடல்


RealAudioMP3
"அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."... 23ம் திருப்பாடலின் இரண்டாம் வரியைச் சிந்தித்து வருகிறோம். நமது உயிருக்கு அதாரம் என்று நாம் குடிக்கும் தண்ணீர் சில சமயங்களில் நம் உயிரைக் குடித்து விடுவதால், தண்ணீரைக் குறித்து நமது பயங்கள் ஆழ் மனதில் புதைந்துள்ளன. அவற்றை இன்று சிறிது அலசுவோம்.
David Blaine, Tom Sietas, Nicola Putignano, Peter Colat, என்ற இளைஞர்களைப் பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். இவர்கள் அனைவரும் தண்ணீருக்குள் மூச்சை அடக்கி நின்றதில் கடந்த மூன்று ஆண்டுகள் உலகச் சாதனைகள் செய்துள்ளனர். இவர்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Peter Colat இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி 19 நிமிடம் 21 நொடிகள் மூச்சை அடக்கி நின்று சாதனை செய்துள்ளார்.

அன்பர்களே, இந்த விவரங்களை உங்கள் பொது அறிவு வளர்ச்சிக்காக நான் பகிர்ந்து கொண்டேன். மற்றபடி தண்ணீருக்குள் மூச்சைப் பிடித்து நிற்கும் சாதனைகள் என்ற விஷப் பரிட்சைகளில் ஈடுபட வேண்டாம். என்னால் கட்டாயம் தண்ணீருக்குள் பத்து அல்லது பதினைந்து நொடிகள் கூட இருக்க முடியாது. அவ்வளவு பயம் எனக்குத் தண்ணீரைக் கண்டு. இந்த பயம் இல்லையெனில் ஒரு வேளை ஒரு நிமிடம் தண்ணீருக்குள் மூச்சடைத்து இருக்க முடியும் என்று நினைக்கிறேன். பயமின்றி தண்ணீரை நாடுவது ஒரு தனிக் கலை. எல்லாராலும் இது முடியாது. என்னால் கட்டாயம் முடியாது.
தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் உடலைப் பரிசோதிக்கும் போது, பலமுறை ஓர் உண்மை வெளியாகிறது. தண்ணீரில் மூழ்குபவர்களில் பலர் இறப்பதற்குக் காரணம்... பயம். அந்தப் பயத்தின் விளைவாக இதயத் துடிப்பு நிற்பதுதான் இந்த மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணம்.
ஒரு கோணத்தில் பார்க்கும் போது, இது புதிராகத் தெரிகிறது. தாயின் உதரத்தில் தண்ணீரில் உருவாகி, பத்து மாத அளவு தண்ணீரிலேயே நமது உடல் உருபெற்றது என்றாலும், தாயின் உதரத்தை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் தண்ணீருக்குள் நம்மால் வாழ முடிவதில்லை. தரையில் வாழும் நம்மைத் தண்ணீர் சூழ்ந்தால், கூடவே பயமும் சூழ்ந்து விடுகிறது. இந்த பயத்திற்குக் காரணம்... தண்ணீரின் அழிக்கும் சக்தி. உயிரளிக்கும் ஊற்றான தண்ணீர் உயிரை அழிக்கவும் முடியும்.

மனிதர்கள் பாவத்தில் அதிகம் வளர்ந்ததைக் கண்ட இறைவன் மனம் வருந்துகிறார். எனவே, தான் படைத்தவைகளை அழிக்கவும் முடிவெடுக்கிறார், நோவா குடும்பத்தினரைத் தவிர. இந்த அழிவுக்கு அவர் பயன்படுத்திய கருவி... தண்ணீர். தொடக்க நூல் சொல்வதைக் கேட்போம்:
தொடக்க நூல் 6: 5-8
மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்என்றார். ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.
தொடக்க நூல் 7: 17, 19-24
நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது... மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின. மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது. நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன... நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர். நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று. 
உலகம் தண்ணீரால் அழிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விவிலியத்தில் மட்டுமல்ல, பல கலாச்சரங்களிலும், பல மதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்துமத வேதநூல்களில் மனு சந்தித்தப் பெருவெள்ளம், கிரேக்கப் பாரம்பரியத்தில் தேயுக்காலியோன் (Deucalion) சந்தித்தப் பெருவெள்ளம், மேசப்போட்டமியா பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ள கில்காமேஷ் என்ற காவியம் (Epic of Gilgamesh) என்று பல பாரம்பரியங்களில் மனித குலம் தண்ணீரால் அழிக்கப்பட்டச் சம்பவம் கூறப்பட்டுள்ளது. இந்த அழிவிலிருந்து ஒருவர் காப்பற்றப்பட்டதும் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் பேரழிவுகளை உண்டாக்கினாலும், தண்ணீர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பது உலக நியதி. திருவள்ளுவர் ‘கடவுள் வாழ்த்து’ என்ற முதல் பத்து குறள்களுக்கு அடுத்ததாக, ‘வான் சிறப்பு’ என்று நீரின், மழையின் சிறப்பை உணர்த்தும் பத்துக் குறள்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்பது இக்குறளின் கருத்து.
நம் நாட்டில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகப் பல ஆண்டுகள் போராடி வரும் பசுமைப் புரட்சி வீரர், 83 வயதான சுந்தர்லால் பகுகுணா சென்ற ஆண்டு கூறிய ஓர் எச்சரிக்கை இது: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசைப் பசியால் உருவானது. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." நீரில்லையேல் உலகில் ஒழுக்கம் இருக்காது என்று வள்ளுவர் சொன்னதை பகுகுணா இவ்வாறு கூறியுள்ளார்.
தண்ணீரில் மூழ்கி இவ்வுலகம் அழிந்துவிடும் என்பது நம் முன்னோரின் பயமாக இருந்தது. தண்ணீர் குறைந்து வருவதால் போர் உருவாகலாம் அதனால் உலகம் அழியலாம் என்பது நமது இன்றைய மிகப் பெரும் பயம். தண்ணீரால் உலகப் போர் உருவாகுமா? உருவாகும். தண்ணீர் எப்போது தனியார் சொத்தாக, ஒரு விற்பனைப் பொருளாக மாறியதோ, அப்போதே இந்த அபாயமும் உருவாகி விட்டது. இறைவன் மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் ஒரு கொடை தண்ணீர். இந்தக் கொடையைத் தனியார் உடைமையாக்கி, தண்ணீரை ‘நீலத் தங்கமாய்’ (Blue Gold) மாற்றும் முயற்சிகள் பற்றி இணைய தளத்தில் தமிழரங்கம் என்ற முகவரியில் நான் கண்ட அருமையான ஒரு கட்டுரை:

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்! உயிரின் அழிவுக்குத் தண்ணீர் வியாபாரம்!
தயவு செய்து நேரம் எடுத்து, சிறிது முயற்சியும் எடுத்து இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்க்கவும். இந்தக் கட்டுரையின் ஒரு சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்த முதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை. புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணீரை வழங்குகிறது...
இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. அது எந்தவொரு தேசத்தின் தனிச் சொத்துமல்ல; உலகின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காகத் தனிஉடைமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி! சமூக விரோத, மக்கள் விரோதக் கொடுஞ்செயல்!
 
தாகம் கொண்டவர்கள் தண்ணீர் கேட்பதும், கேட்டவுடன் தண்ணீர் வழங்கி, தாகம் தீர்க்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வதும் மக்கள் பண்பாடு. இன்றோ, நா வறண்டு தவித்தாலும் பாட்டில் தண்ணீர் வைத்திருப்பவரிடம் கேட்கத் தயங்குகிறோம். கட்டிடத் தொழிலாளர்களும், சாலைப் பணியாளர்களும் அருகிலுள்ள வீடுகளில் "ஒரு செம்பு தண்ணி' கேட்பதும், வீட்டுப் பெண்கள் தயங்காமல் தருவதும் நாமறிந்த பண்பாடு. இன்றோ, குடிநீரை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்போர் கொடுக்கத் தயங்குகிறார்கள். "இல்லை' என்று சொல்லவும் கூசுகிறார்கள். ஆனால், நாளாக நாளாக நமது பண்பாட்டில் ஈரம் உலர்ந்து விடும்; ஆயிரம் குறைகளுக்கும் அப்பாற்பட்டு மனித உறவுகளில் எஞ்சியிருந்த மென்மை இறுகிவிடும்; மனிதாபிமான இழை அறுந்துவிடும்; "இல்லை' என்ற சொல் நம் வாயிலிருந்து தெறித்து விழும்.
"இல்லை' என்ற இந்தச் சொல் தண்ணீருடன் முடிந்து விடாது. சக மனிதனுடன் சகஜமாகப் பழகும் பண்பாடு விலகி, இறுக்கமானதொரு அந்நியம் மனிதர்களுக்குள் புகுந்து விடும். ஒரு வகையான மவுன வன்முறை உருவாகி மனித உறவுகளையும் நமது பண்பாட்டையும் நிரந்தரமாகக் காயப்படுத்தி விடும்.
எனவேதான், தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான பாதகம் என்கிறோம்; அடிப்படையான மனித உரிமைக்கு எதிரான அநீதி என்கிறோம்; இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை என்கிறோம்; உயிரினங்களைப் பூண்டோடு ஒழிக்கும் பயங்கரவாதம் என்கிறோம். எனவேதான், தண்ணீரை எவனுக்கும் தனிவுடைமை ஆக்கக் கூடாது; தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது என்று ஓங்கி ஒலிக்கிறோம்.

சில வாரங்களுக்கு முன், விவிலியத் தேடலில், திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள பசும் புல் வெளியைப் பற்றி நாம் சிந்தித்த போது, அமெரிக்கப் பழங்குடியினர் தலைவன் Seattle தன்னிடமிருந்து நிலத்தை வாங்க நினைத்த அமெரிக்க அரசுத் தலைவனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைக் கேட்டோம். அதை மீண்டும் சிறிது நினைவுக்கு கொண்டு வருவோம்.

வானத்தை, பூமியை எப்படி வாங்கி விற்க முடியும்? அந்த எண்ணமே எங்களுக்கு மிகவும் அந்நியமான, ஏற்றுக் கொள்ள முடியாத எண்ணம். சுத்தமான காற்று, தெளிந்த நீர், அழகிய இந்த பூமி இவைகளை நாம் யாரிடமிருந்து, எங்கிருந்து வாங்கினோம், இப்போது விற்பதற்கு? இவைகளெல்லாம் எங்களுடன் வளர்ந்தவை, எங்களின் ஓர் அங்கம்.  
தண்ணீரைப் பற்றிய நமது பயங்கள் என்று சொல்லும்போது, தண்ணீரில் மூழ்கி, தண்ணீரே நமக்குச் சமாதி ஆகிவிடும் பயம் மட்டுமல்ல... தண்ணீர் தனியுடமையாக, விற்பனைப் பொருளாக மாறி, சாதாரண மக்களுக்கு, ஏழைகளுக்கு எட்டாத தங்கமாக மாறிவிடும் என்பதும் தண்ணீரைப் பற்றிய நம் பயம். உலகில் போரும் பகையும் உருவாகும் வண்ணம் தண்ணீர் என்ற இயற்கைக் கொடை மாறிவிடும் என்று அஞ்சுகிறோம். மாறக்கூடதென விரும்புவோம், வேண்டுவோம்... அதற்காக முயற்சிகள் எடுப்போம். அமைதியான நீர்நிலைகளுக்கு அனைத்து மக்களையும் ஆயன் அழைத்துச் செல்ல வேண்டும். செல்வர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் நீர்நிலைகளுக்கு ஆயன் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நீர்நிலைகளைத் தனி உடைமையாக்க போடப்பட்டுள்ள வேலிகளை நீக்கி, அனைத்து ஆடுகளின் தாகத்தையும் ஆயன் தீர்க்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.