2010-10-04 16:17:58

வியட்நாமைச் சேர்ந்த கர்தினால் பிரான்சிஸ் சேவியர் வான் துவான் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் முயற்சிகள் இம்மாதம் ஆரம்பமாகும்


அக்.04, 2010 திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த கர்தினால் பிரான்சிஸ் சேவியர் ங்குயேன் வான் துவான் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் முயற்சிகள் இம்மாதம் 22ம் தேதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



வியட்நாமில் 1928ம் ஆண்டு பிறந்த கர்தினால் சேவியர் 1953ம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். திருச்சபை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1967ல் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டார். பதிமூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட ஆயர் 1988ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்பதும் இவரைத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவராக 1998ம் ஆண்டு நியமிக்கப்பட்ட கர்தினால் சேவியர், 2002ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி காலமானார்.



இவரது வாழ்வு குறித்த ஆய்வுகளின் துவக்கக் கூட்டம் இம்மாதம் 22ம் தேதி உரோமையில் உள்ள லாத்தரன் மாளிகையில் நடைபெறும். இக்கூட்டம் உரோமையின் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதி நிதி கர்தினால் Agostino Valliniயின் தலைமையில் நடைபெறும் என்றும், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் இன்றையத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.