2010-10-04 16:17:37

புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் அத்தியாவசியத் தேவை குறித்து பிரசில் ஆயர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.


அக் 04, 2010. இறைமகனின் மண விருந்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை அனைவரும் ஏற்கவேண்டும் என ஆவல் கொள்ளும் இயேசுவின் அன்பு நிறை இதயத்திலிருந்தே நற்செய்தி அறிவிப்பிற்கான ஆவல் பிறக்கின்றது என இத்திங்களன்று தன்னைத் திருப்பீடத்தில் சந்தித்த பிரசில் நாட்டு ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உண்மையில் பார்க்கப்போனால், நற்செய்தி உண்மையை உள்வாங்கும் மனித மனம் அதனால் மாற்றம் பெற்று, அன்பின் சுடராக பெருமளவில் வெளியேறுவதே நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற பாப்பிறை, இது தனிப்பட்ட ஒரு குழுவினருக்கு மட்டும் உரியதல்ல, திருமுழுக்கு பெற்ற அனைவருக்குமான கடமை என்றார். நற்செய்தி அறிவிப்புப்பணியில் புதுபுது வழிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தத் திருத்தந்தை, கிறிஸ்துவில் புது வாழ்வை அனுபவிக்கும்படி ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதே திருச்சபையின் பணி எனவும் தெரிவித்தார். நற்செய்தி அறிவிப்பிற்கான உள்மன ஆர்வம் வெளி உலகில் நாம் எதிர்நோக்கும் தடைகளாலும், குறைபாடுகளாலும் குன்றிப்போய்விடக்கூடாது என்ற அழைப்பையும் பிரசில் ஆயர்களிடம் முன்வைத்தார் பாப்பிறை. நற்செய்தி அறிவிப்பிற்கான பலம் எப்போதும் திருநற்கருணையிலிருந்தே பெறப்படவேண்டும் என்ற அழைப்பும் அவரால் முன்வைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.