2010-10-04 15:50:14

நல்லதைக் கேட்டு நல்லதேயே செய்தால்


அக்.04,2010. வார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் இரசித்தேன், காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும். ஆனால்.... நான் உலகைக் காணத் தொடங்கிய பின்னர்.... என்று அந்த வரிகளை எழுதியவர் வெறும் பக்கத்தை மற்றவரின் யூகத்துக்கு விட்டுள்ளார். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளக்கத்தைச் சொல்கிறது. இந்த வாழ்க்கையின் நிதர்சனம் பற்றிப் பல உண்மைகளை உணர்ந்து கொள்கிறோம். இது பற்றி ஒரு சுவாமிஜி சொன்ன கதை அன்பர்களே, உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். தெரிந்தால் என்ன மீண்டும் கேட்போமே!

அந்தக் கிராமத்துச் சிறுவன் ஒருவன் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றான். அங்கு என்னைக் காப்பாற்றுங்களேன், என்னைக் காப்பாற்றுங்களேன் என்று அலறல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆற்றுத் தண்ணீரில் மீன்பிடி வலையில் வசமாக மாட்டிக் கொண்ட ஒரு முதலைதான் இப்படிப் பரிதாபமாக அந்தச் சிறுவனைப் பார்த்துக் கத்தியது. அந்தச் சிறுவன் அந்த முதலையிடம், “உன்னைக் காப்பாற்றினால் நீ என்னை விழுங்கி விடுவாய்” என்று சொன்னான். ஆனால் முதலையோ, “இல்லை, உன்னை நிச்சயமாக சாப்பிடமாட்டேன், இது என் பிள்ளைகள் மேல் சத்தியம்” என்றது. முதலையின் பேச்சை நம்பி சிறுவன் அது சிக்கிக் கொண்டிருந்த வலையை அறுக்கத் தொடங்கினான். உடனேயே முதலை அவனின் காலை இறுகப் பிடித்துக் கொண்டது. உடனே சிறுவன், “அடப்பாவி, இது நியாயமா?” என்றான். அதற்கு முதலை, “அதற்கு நான் என்ன செய்வது? இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு சிறுவனை மெதுவாக விழுங்கத் தொடங்கியது. அந்தச் சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால் நன்றிகெட்ட அந்த முதலையின் சித்தாந்தம்தான் அவனுக்குப் புதிராக இருந்தது. முதலையின் வாய்க்குள் சென்று கொண்டிருந்த சிறுவன் பக்கத்து மரங்களிலிருந்த பறவைகளிடம் நியாயம் கேட்டான். அப்போது அவைகள், “முதலை செய்வது சரிதான். ஏனெனில் நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு மரத்தின் உச்சியில் போய்ப் பாதுகாப்பாகக் கூடுகட்டி முட்டையிடுகிறோம். ஆனால் பாம்புகள் அதை எளிதாகக் குடித்து விடுகின்றன” என்றன. பின்னர் அங்கு நின்ற கழுதையிடமும் நியாயம் கேட்டான் சிறுவன். அதுவும் முதலையின் செயலை நியாயப்படுத்தியது “நான் இளமையாக இருந்த காலத்தில் எனது எஜமான் சக்கையாய் வேலை வாங்கினான். வயதாகி எனக்கு ஒன்றும் செய்ய முடியாத காலத்தில் என்னை விரட்டி விட்டுவிட்டான். எனவே இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொன்னது. கடைசியாக அவ்விடத்தில் நின்ற ஒரு முயலைப் பார்த்து நியாயம் கேட்டான் சிறுவன்.

“அந்த முதலை சொல்வதை என்னால் ஏற்க முடியாது, அது பிதற்றுகின்றது” என்று முயல் சொன்னதும் சிறுவனுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் முதலைக்கோ கடும் கோபம். அது சிறுவனின் காலைக் கவ்வியபடியே முயலோடு வாதாடத் தொடங்கியது. அப்போது முயல், “நீ சிறுவனைக் கவ்வியபடியே பேசுவதால் நீ பேசுவது எனக்குச் சரியாகப் புரியவில்லை” என்றதும், “நான் விட்டால் அவன் ஓடி விடுவான்” என்றது முதலை. “என்ன! நீ, உனது வால் பலத்தை நம்பாமல் பேசுகிறாய்” என்று முயல் சொன்னதும் அது சிறுவனை விட்டது. உடனே முயல் சிறுவனிடம் ஓடிவிடு, ஒரு நிமிடம்கூட இங்கு நிற்காதே என்றது. சிறுவன் ஓடியபோது அவனை அடிக்க வாலை உயர்த்தியது முதலை. ஆனால் முடியவில்லை. வலையில் சிக்கியிருந்த வால் பகுதியையும் சிறுவன் அறுக்கு முன்னே தான் அவனை விழுங்கத் தொடங்கியிருந்தது அப்போதுதான் முதலைக்கு நினைவுக்கு வந்தது. அப்போது முயல் முதலையிடம், இப்போது புரிகிறதா? இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று பதிலுக்குச் சித்தாந்தம் பேசியது. சிறுவன் ஓடிச்சென்று கிராமத்தினரை அழைத்து வந்தான். அவர்கள் அந்த முதலையைக் கொன்று போட்டனர். அப்போது சிறுவனோடு வந்த நாய் ஒன்று அந்த புத்திசாலி முயலைத் துரத்திக் கொன்றது. அப்போது சிறுவன், “இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அன்பர்களே, இந்த நமது வாழ்க்கையின் பல புதிர்களை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பது எவ்வளவு உண்மை.

இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடு செலவழிக்க வேண்டுமெனில் அந்தந்த நிமிடத்தில் வாழுங்கள் என்று சொல்கிறார்கள். நாளை நாளை என்றோ அல்லது நேற்று நேற்று என்றோ இந்தக் கணப்பொழுதில் வாழ்ந்தால் அந்த நேரத்து நிகழ்வை அனுபவிக்காமல் போய்விட நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். இது உண்மைதானே. ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இன்று அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த போது வழியில் வராந்தாவில் இருவரை எதிர்கொண்டேன். காலை வணக்கம் என்று சொன்னேன். அவர்களும் வணக்கம் என்று பதில் சொல்லிவிட்டு காப்பி குடிக்கச் சென்றார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இருவரில் ஒருவர் வேலை செய்யும் அறையில் என்னைப் பார்த்த போது காலை வணக்கம் என்றார். சிறிது நேரத்திற்கு முன்னர்தானே வணக்கம் சொன்னேன் என்று கேட்ட போது, ஓ! அப்படியா, நான் கவனிக்கவில்லை என்றார். இது இன்று மட்டும் நடந்ததல்ல. இப்படிப் பல நேரங்களில் நடந்ததுண்டு.



சில உளவியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டிகள் தங்களிடம் வருவோர்க்கு ஒன்றை மட்டும் மறக்காமல் சொல்கிறார்கள். அதாவது உன் வாழ்க்கையில் நடந்த நேர்மறை நிகழ்வுகளை, நீ வாழ்ந்த மகிழ்ச்சியான நேரங்களை, உன்னைப் பாதித்த நல்ல மனிதர்களை நினைத்துப் பார் என்கிறார்கள். அத்தகையச் சிந்தனைகள் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை அள்ளித்தருகின்றன என்பதற்கு எதிர்க் கருத்துக் கிடையாதுதான். தினசரிச் செய்திகளையும் பத்தரிகைகளையும் வாசிக்கும் போதும், பார்க்கும் போதும் அவற்றில் பல செய்திகள் வெட்டுக் குத்து வன்முறை மோசடி ஊழல் என்று இருக்கும். அந்நேரங்களில் என்னில் ஒரு சிந்தனை எழுவதுண்டு. நல்ல செய்திகளையும் நல்ல சிந்தனைகளையும் மட்டும் சிறிது காலத்திற்குக் கேட்டால் என்ன? பார்த்தால் என்ன? நாட்டில் சமூகங்களில் நல்லவை எதுவுமே நடக்கவில்லையா என்று. கடந்த வாரத்தில் மட்டும் எத்தனை நல்ல செய்திகள் வெளியாகின தெரியுமா?

இந்தியாவை ஒட்டு மொத்தமாக அச்சத்தில் ஆழ்த்திய அயோத்தி தீர்ப்பு இப்பொழுது எல்லாரிலும் ஒரு சபாஷ் போட வைத்திருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு அயோத்தியில்தான் முதலில் மதக் கலவரம் வெடிக்கும் என்று மக்கள் கருதினர். இதனால், பீதியில் ஆழ்ந்து இருந்தனர். ஆனால், தீர்ப்புக்குப் பிறகு ஒரு சிறிய அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. இதனால், நிம்மதி அடைந்துள்ள மக்கள் சுதந்திரமாக வெளியே வர ஆரம்பித்து விட்டனர். அத்துடன், இப்பிரச்சனை தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டாலும் மற்றொருபுறம் சமரசத் தீர்வுகாண இந்து, முஸ்லிம் அமைப்புகள் திடீர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ராமஜென்ம பூமி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான முகமது ஹசீம் அன்சாரி, இந்து அமைப்பைச் சேர்ந்த மகந்த் ஞானி தாஸை இஞ்ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ஹனுமந்த் கோயிலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இப்பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பது குறித்து அப்போது பேசப்பட்டது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

உரோம் மாநகரில் உள்ள புகழ்பெற்ற பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனையில் 15 வயதுச் சிறுவனுக்கு உலகின் முதல் செயற்கை நிரந்தர இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர் அந்தோணியோ அமோதியோ தலைமையிலான குழுவினர் 10 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர்.

பல விமர்சனங்களுக்கு உள்ளான 19வது காமன்வெல்த் போட்டி விளையாட்டுகள் புதுடெல்லியில் உலகமே வியக்கும் வகையில் கோலாகலமாகத் துவங்கியுள்ளன. முதன்முறையாக இரண்டு தலைவர்கள் சேர்ந்து இதனைத் தொடங்கி வைத்துள்ளனர். போட்டிகளுக்காக 12 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில அரங்கங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. மேலும் சில சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டன. 12 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிர உருக்காலை, சுற்றுச் சூழலைக் கடுமையாக மாசுபடுத்துகிறது என்று சொல்லி அது உடனடியாக மூடப்படவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்தத் தாமிர உருக்காலைக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மனு மீதான தீர்ப்பு இப்பொழுது வழங்கப்பட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணங்களுக்காக ஒரு பெரிய ஆலையே மூடப்படவேண்டும் என நீதிமன்றம் உத்திரவிடுவது இதுவே முதல் முறை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், கஜகஸ்தான் நாட்டு ஆஸ்தானாவில் நடைபெற்ற ஆறுநாள் ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இன்னும் அதிகமாக அர்ப்பணிக்க உறுதியளித்துள்ளன.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள கிளைஸ் 581 என்ற புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிவப்புக் குள்ளனாக காட்சி தரும் நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூமியைப் போல் மூன்று அல்லது 4 மடங்கு பெரிய இந்தக் கிரகம் தனது வட்டப்பாதையில் 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக ஓர் அறிவியல் செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரண்டு ஜெர்மனிகளையும் இரண்டாகப் பிரித்த பெர்லின் சுவரை 1962ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி ஒருவர் கடக்க முயன்றார். ஆனால் அவர் கிழக்கு ஜெர்மனி காவல்துறையால் சுடப்பட்டார். வேதனையால் அவர் அலறித் துடித்த போது அவரைக் காப்பாற்ற மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த செஞ்சிலுவை சங்க வாகனம் தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தப் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்த இருபதாம் ஆண்டு விழா இஞ்ஞாயிறன்று வானவேடிக்கைகளுடன் வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்பட்டது.



வானொலி நண்பர்களே, நாடுகளிலும் தனிப்பட்டவர் வாழ்க்கையிலும் இப்படி எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் கேட்ட இந்த ஒருசில நிகழ்வுகளுக்குப் பின்னால் எத்தனையோ பேரின் அரும் வீரதீர தியாக முயற்சிகள் மறைந்து கிடக்கின்றன. இவை வாழ்க்கை மீது ஒரு பிடிப்பை, ஒரு பற்றுதலை, ஒரு நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகின்றன. நம்பு, முயற்சி செய், நல்லது நடக்கும் என்று சொல்கின்றன. இவ்வாழ்க்கையில் கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை. கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதைவிட இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துங்கள். உங்களால் சாதிக்க முடியும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உங்களுடைய முயற்சி நின்றாலும் மரணம்தான். எனவே உங்கள் எண்ணத்தில் எதிர்மறைச் சிந்தனைகளை அகற்றிவிட்டு தினமும் நல்லதையே நினைத்து நல்லதையேச் செய்து பாருங்கள். நல்லதே உன் வாழ்வில் என்றும் நடப்பதை உணர்வீர்கள்.








All the contents on this site are copyrighted ©.