2010-10-04 08:58:36

அக்டோபர் 04 நாளும் ஒரு நல்லெண்ணம்


“இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும். வெறுப்புள்ள இடத்தில் அன்பையும், காயம்பட்ட இடத்தில் மன்னிப்பையும், ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும், தளர்ச்சியுற்ற இடத்தில் நம்பிக்கையையும், இருள் உள்ள இடத்தில் ஒளியையும், வருத்தமுள்ள இடத்தில் மகிழ்ச்சியையும் பரப்ப என்னைப் பயன்படுத்தும். ஓ! விண்ணகப் போதகரே, நான் தேற்றப்படுவதைவிட தேற்றவும், புரிந்து கொள்ளப்படுவதைவிட புரிந்து கொள்ளவும், அன்பு கூரப்படுவதைவிட அன்புகூரவும் வரம் அருளும். ஏனெனில் கொடுப்பதில்தான் பெறுகிறோம். மன்னிப்பதில்தான் மன்னிக்கப்படுகின்றோம். இறப்பதில்தான் நித்திய வாழ்வுக்குப் பிறக்கிறோம்”.

இவ்வாறு செபித்தவர் அசிசி நகர் புனித பிரான்சிஸ். இயற்கையில், பறவைகளில், விலங்குகளில், நிலவில், சூரியனில் என அனைத்திலும் இறைவனைக் கண்டார். இவையனைத்தோடும் இணைந்து இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே இருந்தார். ஒரு கிறிஸ்தவனுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அல்லேலூயா புகழ் பாடல்தான். பேய்கள்தான் வாடிய முகத்தோடு இருக்க வேண்டும் என்று இவர் சொல்லியிருக்கிறார். இந்தப் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவைத் திருச்சபை அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கின்றது. இதே நாள் உலக வனவிலங்குகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் அசிசி நகரில் 1182ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ் அத்தனை வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர். 1202ல் அசிசி நகர், பெருஜியாவுக்கு எதிராகப் போர் தொடுத்த போது அதில் சண்டையிட்டு ஓராண்டு சிறையில் இருந்தவர். பின்னர் கடும் நோயினால் தாக்கப்பட்டு குணம் அடைந்தார். 1205ல் பாப்பிறைப் படைகளுடன் சேர்ந்து இரண்டாம் ஃப்ரெட்ரிக் மன்னனை அப்புல்யாவில் எதிர்க்கச் சென்ற சமயம் ஸ்போலெத்தோ என்ற ஊரில் அவருக்கு ஒரு காட்சி கிடைத்தது. அதனால் போரிடாமல் அசிசி திரும்பினார். அப்பொழுதிலிருந்து பிரான்சிசின் வாழ்வும் மாறியது. கடவுள் அவருக்கென வைத்திருக்கும் விருப்பத்தை அறிவதற்குத் தனிமையிலும் செபத்திலும் நாட்களைச் செலவழித்தார். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தம் வாழ்வு என உணர்ந்தார். இயற்கை இறைவனின் கண்ணாடி எனக் கருதினார். இவர் 1226ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தனது 44வது வயதில் இறந்தார்.அதற்கு அடுத்த நாள் நல்லடக்கம் செய்யப்பட்டார். இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்து காய வரம் பெற்றார்.








All the contents on this site are copyrighted ©.