2010-10-02 15:47:58

அக்டோபர் 03, நாளும் ஒரு நல்லெண்ணம்


சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் சந்தித்தப் பொருளாதாரச் சரிவிலிருந்து பணம் படைத்த நிறுவனங்களைக் காப்பாற்ற, அமெரிக்க அரசு 70,000 கோடி டாலர்கள், அதாவது 30 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நிதியை ஒதுக்கி, அந்நிறுவனங்களை மீட்டது. அன்று அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் இந்த அரசாணையில் 2008ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி கையொப்பமிட்டார். பணக்கார நிறுவனங்களைக் காப்பாற்ற ஒதுக்கப்பட்டத் தொகையில் பத்தில் ஒரு பங்கு போதும் உலகில் உள்ள வறியோரை ஓரளவாகிலும் காப்பாற்ற. அதை ஒதுக்க எந்த அரசும் முன் வருவதில்லையே. ஏன்?
கொடுப்பது பற்றி கலீல் கிப்ரான் என்ற கவிஞர் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:

உன்னிடம் உள்ளவைகளிலிருந்து நீ கொடுக்கும் போது, சிறிதளவே கொடுக்கிறாய்.
உன்னையே கொடுக்கும் போதுதான் உண்மையில் கொடுக்கிறாய்.
முகர்வதற்கு யாரும் இல்லையெனினும், தோட்டத்து மலர்கள் மணம் தர மறுப்பதில்லையே.
உண்பதற்கு யாரும் இல்லையெனினும், மரங்கள் பழம் தர மறுப்பதில்லையே.
தங்கள் கொடைகள் தங்களுக்கு மட்டுமே என்று இவை மறைத்து வைத்தால், மடிந்து விடும்.
கொடுப்பதால் மட்டுமே இவை உயிர் வாழ முடியும்.
 கொடுப்பது, அல்லது பகிர்வது என்றால் என்னவென்று இயற்கையிடமிருந்து என்று நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம்? கொடுக்கும் இயற்கையையும் நம் அறிவியல் ஆய்வுகள் கெடுத்து வருவது ஏன்?







All the contents on this site are copyrighted ©.