2010-10-02 10:34:59

அக்டோபர் 02. நாளும் ஒரு நல்லெண்ணம்


ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் . நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் நீ விரும்பினால் உனக்கு அது கிட்டும்” இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை என்று சொன்னார்.

வெற்றிக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுபவர்கள் தேவைப்படுகின்றனர். அதுவும், இளைய தலைமுறைக்குள்ளிருந்தே.

பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமையான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் நம் ஒவ்வொருவரின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும்.

இளைய பருவம் மாற்றத்தை எளிதில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலன்களை அறுவடை செய்பவர்களாக நோக்கப்படாமல், மாற்றத்திற்கான விதைகளைக் கொணர்பவர்களாக நோக்கப்பட வேண்டும்.

ஒரு தடவை சுவாமி விவேகானந்தர், “சக்தி மிகுந்த இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சமூகத்தின் தேவையாகிறது.








All the contents on this site are copyrighted ©.