2010-10-01 16:02:47

அயோத்தி தீர்ப்பு குறித்து திருச்சபைத் தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு


அக்.01,2010. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தீர்வுக்காகக் காத்திருந்த பிரச்சனைக்குரிய அயோத்தி நிலம் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு, தங்களுக்கு மிகுந்த நிம்மதியைக் கொடுத்திருப்பதாக இந்தியத் திருச்சபைத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

500 ஆண்டுகளாக மசூதி இருந்த பிரச்சனைக்குரிய இடம் குறித்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கும், மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கும் வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் சமய நல்லிணக்கத்திற்கானத் தேசிய இயக்குனர் அருட்பணி எம்.டி.தாமஸ், நாட்டில் உணர்ச்சிப்பூர்வமான நடவடிக்கைகளைக் கிளறிவிடாமல் மிகுந்த கவனத்துடன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

எனினும், பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் ஒரு தேசிய நினைவுச்சின்னத்தை எழுப்பி இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணுமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டிருக்கலாம் என்றும் அக்குரு கருத்து தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.