2010-09-30 16:25:25

மதத் தொடர்புடைய சேவை அமைப்புக்களின் உதவிகளை புறக்கணிக்கும் வியட்நாம் அரசு


செப்.30,2010. வியட்நாமில் HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டு அரசு பிறநாட்டு சேவை அமைப்புக்களின் உதவிகளைத் தேடி வருகின்றது.
AIDS நோயைக் கட்டுப்படுத்த வியட்நாம் அரசு எடுக்கத் தவறிய முயற்சிகளால் மக்கள் அரசின் மீது பெரிதும் நம்பிக்கை இழந்து உள்ளனர் என்றும், பிற நாட்டு சேவை அமைப்புக்களின் உதவிகளை நாடும் அரசு, அவ்வமைப்புக்கள் எவ்வித மதத் தொடர்புகளும் இல்லாதிருக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறதென்றும் கூறப்படுகிறது.
AIDS நோய்க்குத் தகுந்த சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் அளிப்பதில்லை என்றும், இந்த நோயினால் துன்புறுவோர் சமுதாயத்திலிருந்து புறந்தள்ளப்படுகின்றனர் என்றும் கிறிஸ்தவ சமூக ஆர்வலர் ஒருவர் ஆசிய செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.
இந்நோயினால் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப் பட்டுள்ள எழுபதாயிரம் சிறுவர் சிறுமிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சமுதாயத்தாலும் அரசாலும் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்று இச்சமூக ஆர்வலர் மேலும் கூறினார்.இன்றைய நிலவரப்படி, வியட்நாமில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 24,000 பேர் இந்நோயினால் மடிகின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.