குடிமக்களின் நலன்கள் முழுவதுமாக நிறைவேற்றப்படுவதற்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்
- பேராயர் மம்பர்த்தி
செப்.30,2010. ஒவ்வொரு நாடும் தனது ஒவ்வொரு குடிமகனின் பொருளாதார மற்றும் ஆன்மீக நலன்கள்
முழுவதுமாக நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு காக்கப்படுமாறு
பேராயர் தொமினிக் மம்பர்த்தி (Dominique Mamberti) ஐ.நா.வில் கேட்டுக் கொண்டார். அமைதி,
ஒட்டுமொத்த பாதுகாப்பு, ஆயுதக்களைவு, மனித உரிமைகள், வளர்ச்சி, ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு போன்ற உலகின் பொது விவகாரங்கள் குறித்த ஐ.நா.வின் 65 வது பொது அமர்வில் இப்புதனன்று
உரையாற்றிய திருப்பீடத்துடன் தொடர்புடைய நாடுகளுக்கான செயலர் பேராயர் மம்பர்த்தி இவ்வாறு
கூறினார். கடந்த ஆகஸ்ட் முதல் தேதி உலகில் அமலுக்கு வந்த கொத்து வெடி குண்டுகள் தடை
ஒப்பந்தம் குறித்தத் திருப்பீடத்தின் பாராட்டைத் தெரிவித்த பேராயர், அணு ஆயுதங்கள் அற்ற
இடமாக மத்திய கிழக்குப் பகுதியை அமைப்பதற்கும் பிற ஆயுதங்களை அழிப்பதற்குமென 2012ம் ஆண்டில்
கருத்தரங்கு நடைபெறுவதற்கான ஐ.நா. தீர்மானத்தையும் புகழ்ந்து பேசினார். பாகிஸ்தானுக்குச்
செய்யப்பட்ட மனிதாபிமான உதவிகளைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே
நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கு நேர்மையான உரையாடலும் நம்பிக்கையும் தாராள உள்ளமும் தேவை
என்பதையும் வலியுறுத்தினார்.