2010-09-29 16:08:29

மங்கோலிய நாட்டில் விதைக்கப்பட்ட விசுவாச விதைகள் வளர்வதற்கு உதவ வேண்டும் - குவஹாத்தி பேராயர்


செப்.29,2010. மறைசாட்சிகளின் இரத்தத்தால் மங்கோலிய நாட்டில் விதைக்கப்பட்ட விசுவாச விதைகள் வளர்வதற்கு உதவ வேண்டும் என்று இந்திய ஆயர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிய ஆயர்கள் பேரவையின் சார்பில் மணிலா ஆயர் வென்செஸ்லாஸ் படில்லா விடுத்த அழைப்பை ஏற்று, கடந்த மாதம் மங்கோலியாவுக்குச் சென்று திரும்பிய குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில், ஆசியச்செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
வரலாற்றுப் புகழ் பெற்ற பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மங்கோலியா, இரஷ்யக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின், புது எண்ணங்களை வரவேற்கத் தயாராக இருப்பதைத் தன்னால் உணர முடிந்ததென பேராயர் கூறினார்.
25 லட்சம் மக்களைக் கொண்டுள்ள இந்த நாட்டில், 1992ம் ஆண்டு ஒரு கத்தோலிக்கரும் இல்லாத நிலையில், மணிலா ஆயர் படில்லாவின் உழைப்பால் இன்று ஏறத்தாழ 1000 கத்தோலிக்கர்கள் அங்கிருப்பது நம்பிக்கையூட்டும் ஒரு நிலை என்று பேராயர் மேலும் கூறினார்.மங்கோலியாவும் வட கிழக்கு இந்தியாவும் பல வகையில் தொடர்புள்ளதென்பதால், மங்கோலியாவில் கத்தோலிக்க விசுவாசத்தை வளர்க்க வட கிழக்கு இந்தியத் திருச்சபை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.