2010-09-29 16:34:24

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


செப் 29, 2010. உரோம் நகரில் குளிர் காலம் மெதுவாக தன் முகத்தைக் காட்டி வருகின்றபோதிலும், இப்புதனன்று அந்நகரின் காலநிலையானது சிறிது வெப்பமாக, இதமாக இருக்க, உரோம் நகருக்கு வந்திருந்த விசுவாசிகள் மற்றும் திருப்பயணிகளைப் புனித பேதுரு பேராலய வளாகத்தில் சந்தித்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். ஜெர்மன் நாட்டின் தென்கிழக்கு மாநிலமான Saxony ன் Helfta என்ற துறவுமடத்தில் வாழ்ந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த Hackeborn ன் புனிதை மெட்டில்டா குறித்து இப்புதன் மறைபோதகத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

மிகச்சிறிய வயதிலேயே துறவுமடத்தில் புகுந்த இப்புனிதை, துவக்ககால திருச்சபை முதுவர் ஏடு சார்ந்த பாரம்பரியம், திருவழிபாடு, மற்றும் புனித விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட அழமான ஆன்மீக மற்றும் அறிவுசார் சூழலில் உருவாக்கப்பட்டார். இச்சூழலும், தியானயோகம் வழி இவர் பெற்ற தெய்வீக ஒளி எனும் கொடையும் இப்புனிதை எண்ணற்ற ஜெபங்களை இயற்றவும், பலருக்கு ஆலோசகராகவும் ஆறுதலாகவும் இருக்கவும் உதவியுள்ளன. தன் தாழ்ச்சியாலும் அறிவாலும், இறைவனோடும் புனிதர்களோடும் கொண்டிருந்த ஆழமான உறவாலும், மேன்மைப் பெற்றிருந்த புனித மெட்டில்டா, தன் துறவு மடத்தின் நவக்கன்னியர்களுக்கான, பாடற்குழுவுக்கான, பள்ளிக்கான இயக்குனராக விளங்கினார். இவ்வழிகள் மூலம், புனிதை மெட்டில்டா, ஜெர்மனியின் பிறிதொரு முக்கிய துறவியான புனிதை Gertrudeன் ஆன்மீக வழிகாட்டியாகவும் மாறினார். புனித விவிலியத்தால் வழிகாட்டப்பட்டு, திருநற்கருணையால் ஊட்டம் பெற்ற புனித மெட்டில்டாவின் ஜெப வாழ்வு, திருஇதயத்தின் மீதான அவளின் பக்தியில் வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவுடன் ஆன மிக நெருங்கிய ஐக்கியத்திற்கு அவரை வழிநடத்திச் சென்றது. இப்புனிதையின் பரிந்துரையின் வல்லமை வழி, நாமும் அதே பக்தி வழிகளில் வளர்வோமாக என தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, நைஜீரியாவின் வடபகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு, தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏறத்தாழ 20 இலட்சம் மக்களின் நிலை குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இம்மிகப்பெரும் மனிதகுல நெருக்கடி வேளையில் இம்மக்களுடன் ஆன்மீக நெருக்கத்தை வெளிப்படுத்துவதுடன், அவர்களுக்கான தன் ஜெப உறுதிப்பாட்டை வழங்குவதாகவும் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.