2010-09-29 16:05:19

2011ம் ஆண்டின் உலகச் சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள்


செப்.29,2010. “டிஜிட்டல் உலகத்தில் உண்மை, அறிவிப்பு மற்றும் வாழ்க்கையின் நம்பகநிலை” என்பது 2011ம் ஆண்டின் 45வது உலகச் சமூகத் தொடர்பு நாளுக்கானத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பு குறித்து கருத்து தெரிவித்தத் திருப்பீடம், எல்லாவிதமான தொடர்புச் சாதனங்களில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டியது.
புதிய தொழிற்நுட்பங்களால் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப்படும் மற்றும் சிலவேளைகளில் வரையறுக்கப்படும் இக்காலத்திலும்கூட ஒருவரின் வாழ்வுச் சாட்சியத்தின் மதிப்பு மிகவும் முக்கியம் என்பதையும் இத்தலைப்பு வலியுறுத்துகிறது என்றும் திருப்பீடம் கூறியது.
உண்மை, புதிய தகவல் தொழிற்நுட்பங்களில் உறுதியான மற்றும் மாறாத கூறாக இருக்க வேண்டும் என்றும், உண்மை மீதான ஈடுபாடே ஊடகத்துறையில் வேலை செய்யும் எல்லாருக்கும் அடிப்படைத் தளமாக அமைகின்றது என்றும் இத்தலைப்பு வலியுறுத்துகிறது.இந்த 45வது உலகச் சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தி, 2011ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ஊடகவியலாரின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படும் என்றும் திருப்பீடம் இப்புதனன்று அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.