2010-09-28 15:33:58

விவிலியத் தேடல்


RealAudioMP3
"அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்" - திருப்பாடல் 23ன் இந்த வரியில் நம் சிந்தனைகளை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இன்றும் தொடர்கிறோம். நாம் கருவில் உருவானது முதல், கல்லறையில் உறங்குவது வரை தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறோம். கடல், நதிகள், நிலத்தடி நீர், நீராவி, மேகம், மழை, காற்றில் கலந்துள்ள ஈரம் என்று பல வகைகளிலும் தண்ணீர் நம்மைச் சூழ்ந்து காத்து வருகிறது. நீரின்றி இவ்வுலகம் உயிர் வாழாது... இவைகளையெல்லாம் எண்ணி, இறைவனுக்கு நன்றி சொன்னோம். இன்று உலகின் பல மதங்களிலும் விவிலியத்திலும் தண்ணீர் குறித்த சிந்தனைகள் என்ன என்று சிறிது ஆராய்வோம்.

உலகின் பழம்பெரும் மதங்கள் அனைத்திலும் தண்ணீருக்குத் தனிப்பட்ட, உயர்ந்ததொரு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு சிந்திப்போம்.
புத்த மதத்தில் சடங்குகள், அடையாளங்கள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிவோம். இருந்தாலும், தண்ணீருக்கு அங்கு தனி மதிப்பு உண்டு. புத்தத் துறவிகளில் ஒருவர் மரணம் அடைந்தால், தண்ணீரை மையப்படுத்தி ஓர் அழகிய பழக்கம் பின்பற்றப் படுகிறது. இறந்தவர் உடலுக்கருகே ஒரு கிண்ணம் வைக்கப்படும். அக்கிண்ணத்தில் நீர் ஊற்றப்படும். கிண்ணம் நிறைந்து வழிந்தாலும், நீர் தொடர்ந்து ஊற்றப்படும். அவ்வேளையில், இறந்தவர் உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற துறவிகள் பின் வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்: "வானிலிருந்து விழும் மழை, ஆற்று நீராய் நிறைந்து கடலில் கலப்பது போல, இங்கு ஊற்றப்படும் தண்ணீரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த ஆன்மாவுடன் கலப்பதாக."
இந்திய மண்ணில் வேரூன்றி வளர்ந்துள்ள இந்து மதத்தில் தண்ணீர் வகிக்கும் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். நமது நதிகள் அனைத்தையும் புனிதம் என்று கருதுகிறோம். ஒரு சில நதிகள் மிகவும் புனிதமானவை. அந்நதிகளின் கரைகளில் புனிதத் தலங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, கங்கை நதிக் கரையில் இறந்து, அந்நதியோடு சங்கமமாவது வான்வீட்டின் வாயிலைத் திறந்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஏறத்தாழ எல்லா இந்துமதச் சடங்குகளிலும் தண்ணீர் ஓர் இன்றியமையாத அம்சம்.
இறைவனின் பிரசன்னத்தில் நுழைவதற்கு தூய்மை மிக அவசியம் என்பதால் இஸ்லாமியர்களும் தண்ணீரைத் தங்கள் வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். "தொழுகைக்குத் தயாரிக்கும் போது, உன் முகம், கைகளைக் கழுவ வேண்டும்." என்பது திருக்குர்ஆன் கூறும் விதிமுறை. திருக்குரானைத் தொடுவதற்கு முன் கைகளைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகள் இல்லாத இஸ்லாமியத் தொழுகைக் கூடங்கள் இல்லை என்று சொல்லலாம்.
ஜப்பானியர்கள் பின்பற்றும் ஷின்டோ மதத்தில் இயற்கையின் பல வடிவங்களில் கடவுள் உறைவதாக நம்பிக்கை உண்டு. வழிந்தோடும் அருவிகள் புனிதம் என்பதும், அருவியில் குளிப்பதாலோ, அதனருகே நிற்பதாலோ நாமும் தூய்மை அடைகிறோம் என்பதும் இம்மதத்தின் நம்பிக்கை.
Zoroastrian மதத்தில் கடல்களில் காணப்படும் உப்பு நீருக்கு அவர்கள் வழங்கும் விளக்கம் இது. படைப்பின் துவக்கத்தில், உலகெங்கும் உப்பு கலக்காத நல்ல தண்ணீர் மட்டுமே இருந்தது. Angra Mainyu என்ற தீய ஆவி இந்த உலகத்தைத் தாக்கியபோது, நல்ல நீரை உப்பு நீராக்கியது என்று சொல்லப்படுகிறது. எனவே, இம்மதத்தைப் பொறுத்தவரை, இயற்கை நீரை, முக்கியமாக ஆற்று நீரை மாசு படுத்தும் எந்த முயற்சியும் பாவமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு, உலகின் மாபெரும் மதங்கள் அனைத்திலுமே உயிரளிப்பது, கறைகளை நீக்குவது என்ற இரு அம்சங்களின் அடிப்படையில் தண்ணீர் தனியொரு, புனிதமான, இடம் பெற்றுள்ளது.

கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், அதன் முன்னோடியான யூத பாரம்பரியத்திலும் தண்ணீரின் தனித்துவம் பற்றி அறிய விவிலியப் பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். அதற்கு முன், விவிலியப் பக்கங்கள் உருவான யூதேயா பகுதிகளை, மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில், பல நாடுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் நான்கு வகை பருவக் காலங்களைப் பார்க்கலாம். வசந்தம், கோடை, குளிர்காலம், இலையுதிர் காலம் என்று நான்கு தெளிவாகப் பிரிக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் இரண்டே காலங்கள் - ஆறு மாதங்கள் மழை அல்லது குளிர்க் காலம், ஆறு மாதங்கள் வறட்சிக் காலம்.
இவ்விரு காலங்கள் பற்றி Harold Kushner தன் புத்தகத்தில் விவரிக்கும் போது, ஒரு வினோதமான குறிப்பைச் சொல்கிறார். இப்பகுதியில் உள்ள தொலைக் காட்சி, வானொலி ஆகியவற்றில் மே மாதம் முதல் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு வானிலை அறிக்கை இருக்காது. காரணம், அந்த ஆறு மாதங்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல், வானம் தெளிவாக, சூரிய ஒளியுடன், வெப்பமாக இருக்கும். வானம் தெளிவாக இருக்கும் அந்த நாள் வெப்பமாக இருக்கும் என்பதை எத்தனை முறை சொல்வது என்று, வானிலை அறிக்கையே நிறுத்தப்படும். இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு மழை என்பது ஒரு பரபரப்பான செய்தியாகி விடும். அதுவும் வறண்ட ஆறு மாதங்களில் மழை என்பது தலைப்புச் செய்தியாகி விடும். இந்தியாவிலும் இது போன்று பல பகுதிகள் உள்ளன என்பதை அறிவோம்.
இந்தப் பின்னணியில் எழுதப்பட்டது நமது விவிலியம். விவிலியத்தில் வறட்சி, பஞ்சம், பட்டினி இவைகளைப் பற்றி பல முறை கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு என்று தொடக்க நூலில் ஆரம்பித்து, தாவீது காலம் தாண்டி, இஸ்ராயேலின் பல சந்ததியினர் பஞ்சம் பட்டினியில் துன்புற்றனர் என்பதை விவிலியம் அடிக்கடி கூறியுள்ளது. இதோ, ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

தொடக்கநூல் 12 : 10 அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
தொடக்கநூல் 26 : 1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
சாமுவேல் - இரண்டாம் நூல் 21 : 1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார். கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது என்றார் ஆண்டவர்.
அரசர்கள் முதல் நூல் 18 : 1-2 பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன் என்று கூறினார். அவ்வாறே எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.
அரசர்கள் இரண்டாம் நூல் 25 : 3 அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.

இதுபோல் பழைய ஏற்பாட்டில் மட்டும் ஏறத்தாழ 20 இடங்களில் பஞ்சம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

யூத குலத்தின் தலைவனாய் இருந்த தாவீது இந்த எண்ணங்களை எல்லாம் மனதில் வைத்து 23ம் திருப்பாடலை எழுதும் போது, அதிலும் சிறப்பாக, "ஆண்டவர் என் ஆயன். நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்வார்." என்ற வரியை சொல்லும் போது, தாகம் தணிப்பதை மட்டும் மனதில் கொண்டு இவ்வரியை எழுதியிருக்க மாட்டார். தாகம் தணிப்பதைத் தாண்டி, தன் குலத்தவரை பஞ்சம், பட்டினி இவைகளிலிருந்து காத்து ஒரு நாடாகத் தங்களை உருவாக்க ஆதாரமாகத் தண்ணீர் இருந்ததை எண்ணி, அந்த நீர் ஊற்றுக்களைத் தங்களுக்குத் தந்த இறைவனை எண்ணி, இவ்வரியை எழுதியிருப்பார்.
 உயிரளிக்கும் ஊற்றான தண்ணீர், பல வேளைகளில் உயிரை அழித்து விடுகிறதே. தேவையான அளவு நீர் படைப்பைப் பேணிக் காக்கும். தேவைக்கும் அதிகமாகப் பெருகும் நீர் படைப்பை அழிக்கும். அனைத்து உயிர்களும் தண்ணீரில்தான் உருவாயின என்றாலும், நமது பரிணாம வளர்ச்சியில் (படிப்படியான உயிர் மலர்ச்சி) மனித உயிர்கள் தண்ணீரிலிருந்து வந்தவர்கள்தாம் என்றாலும், நம்மைப் பொறுத்த வரை தண்ணீரை விட, தரையில் காலூன்றி நிற்பதையே நாம் பாதுகாப்பு எனக் கருதுகிறோம். தண்ணீர் குறித்த நம் பயங்களைப் பரிசீலனை செய்வோம் அடுத்த விவிலியத் தேடலில்.







All the contents on this site are copyrighted ©.