2010-09-27 15:15:09

சிலி நாட்டில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க புதிய முயற்சி


செப்.27, 2010. சிலி நாட்டில் பூமிக்கு அடியில் சுரங்கம் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சிக்குண்டிருக்கும் முப்பத்து மூன்று சுரங்க ஊழியர்களை மீட்கும் பணியில் பயன்படுத்துவதற்காக தனிப்பட்ட வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இரும்புக் கூண்டு, தற்போது தோண்டப்பட்டு வருகின்ற குழியின் வாயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த இரும்புக் கூண்டைப் பயன்படுத்திதான் சிக்குண்டுள்ள நபர்களை ஒவ்வொருவராக மேலே கொண்டு வர இருக்கிறார்கள். நீளமான மற்றும் குறுகலான இந்த எஃகுக் கூண்டுக்கு ‘ஃபீனிக்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் பல நாட்களாகச் சிக்கித் தவிக்கும் சுரங்க ஊழியர்களை மேலே கொண்டுவந்து அவர்களுக்கு இந்தக் கூண்டு புத்துயிர் அளிக்கும் என்று இதனை வடிவமைத்தவர்கள் நம்புவதால், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவையென கிரேக்கப் புராணங்களில் இடம் பெறும் ‘ஃபீனிக்ஸ்’ பறவையின் பெயரை இந்தக் கூண்டுக்கு அவர்கள் சூட்டியுள்ளனர்.

மீட்புக்கான ஆழ்கிணற்றை சரியான அகலத்தில் தோண்டி முடிக்க வாரக்கணக்கில் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்திய சிலியின் சுரங்க அமைச்சர் லாரன்ஸ் கொல்போர்ன், (Laurence Golborne) கீழே இருக்கக்கூடிய பாறைகள் மிகவும் கடினமானவை, அதனால் தோண்டும் போது பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், நவம்பர் மாத ஆரம்பத்தில்தான் சுரங்க ஊழியர்களை மீட்க முடியும் என்று தாம் கருதுவதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.