2010-09-27 15:14:24

கிறிஸ்தவ வாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்பை வெளிப்படுத்தும் இடங்களாக திருத்தலங்கள் அமைகின்றன - திருத்தந்தை


செப்.27,2010. பக்தி, மதிப்பு மற்றும் முன்னுரிமையை ஏற்படுத்தும் புனித இடங்களாகத் திருத்தலங்கள் இருக்கின்றன என்பதைத் திருப்பயணிகளில் ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

ஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவில் இத்திங்களன்று தொடங்கிய திருத்தலங்கள் குறித்த இரண்டாவது உலக மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்

“எனவே அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்” (லூக். 24 :29 ) என்ற நற்செய்தி வசனத்தைத் தலைப்பாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்பை வெளிப்படுத்தும் இடங்களாக திருத்தலங்கள் அமைகின்றன என்பதை இம்மாநாட்டினர் ஆழமாகச் சிந்தித்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவிற்குத் தான் விரைவில் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையும் மற்ற திருப்பயணிகள் போலவே தானும் உலகின் பல இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருப்பயணிகளை வரவேற்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுமாறும், திருத்தலங்கள், பிறரன்புப் பணிகளுக்கான கலங்கரை விளக்கு இடங்களாக மட்டுமல்லாமல், ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி திருநற்கருணை ஆகியவற்றைப் பயணிகள் பெறுவதிலும் அக்கறை காட்டும் இடங்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.