2010-09-27 15:27:19

உலக முதியோர் தினம்


செப்.27,2010. இரண்டு நாட்களுக்கு முன்னர் உரோமையில் ஒரு தமிழ்க் குடும்பத்திற்குச் நாங்கள் மூவர் சென்றிருந்தோம். எங்களுடன் எழுபது வயது பெரியவர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது வந்த அந்த இல்லத்து 22 வயது செல்ல மகள் அந்தப் பெரியவர் முன்பாக மண்டியிட்டு ஆசீர் கேட்டாள். அதைப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஐரோப்பிய நுகர்வுக் கலாச்சாரத்தில் வளரும் இளம்பெண், மூத்தோர் மீது கொண்டிருக்கும் மரியாதையை நினைத்து எனக்குள்ளே புளங்காகிதம் அடைந்தேன். பல முதியோர் இல்லங்களைத் திறந்து பணம் பண்ணும் இந்தச் சமூகத்தில், அநாதரவாய்ச் பேருந்துகளில் பயணிக்கும் முதியோரைப் பார்க்கும் இந்த நாட்டில் இப்படியும் தமிழ்ப்பெண் என்று மகிழ்ச்சியடைந்தேன். இந்த மாநகரில் சில முதியோர் நம்மைப் பார்த்து கைநீட்டும் நேரங்களில் நெஞ்சு கிழிக்கப்படுவது போன்ற உணர்வு ஏற்படும். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி இன்று உலகில் பத்துக்கு ஒருவர் அறுபது வயதை அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள். 2050ம் ஆண்டுக்குள் ஐந்துக்கு ஒருவர் அறுபது வயதை அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டுவார்கள். 2150ம் ஆண்டுக்குள் இது மூன்றுக்கு ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும். தற்போது உலகில் சுமார் 58 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை 2020ம் ஆண்டளவில் 100 கோடியாக அதிகரிக்கலாம், இவர்களில் 70 கோடிக்கு மேற்பட்டோர் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என நம்பப்படுகிறது.

ற்போது பல நாடுகளில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது ஓய்வூதியம் தொடர்பான பெரிய நிதிப் பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால், 1960ல் பிறந்த ஒருவர், 52 வயது வரை வாழுவார் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை இருந்தது. அதுவே இந்த வருடம் பிறக்கின்ற ஒரு குழந்தை, 69 வயது வரை வாழும் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ முன்னேற்றங்களால் மனிதர்களின் ஆயுட்காலம் கூடிவருவது ஒரு புறம் நடக்கும் நிலையில், மக்கள் குழந்தை பிறப்பும் குறைந்து வருகிறது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கையில், ஒரு நாடு முதுமை அடைந்து வருகிறது என்று சொல்லலாம். இந்தப் பிரச்சனை பணக்கார நாடுகளுக்குத்தான் என்றில்லை. ஏனெனில் வளருமுக நாடுகளிலும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்காக நகரங்களை நோக்கிச் சென்றுவரும் நிலையில், கிராமங்களில் தங்கிவிட்ட முதியவர்களை அவர்கள் பராமரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்துவருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை தபால்நிலைய ஊழியர்கள் கையாடியிருக்கின்றனர், இவர்களில் பலருக்கு சரிவர அத்தொகை போய்ச் சேருவதில்லை, தபால் ஊழியர்கள் தாங்களாகவே கையெழுத்திட்டு அத்தொகையினை அபகரித்துக் கொள்கின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் 400 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் வேலை வாய்ப்பு, வாழ்க்கை வசதிகள் போன்றவற்றால் வயதான பெற்றோர் பலர் பலவாறு புறக்கணிக்கப்படுகின்றனர். சிங்கப்பூரில் தனது தாய்க்குத் தான் செய்த கொடுமையை அந்த மகனே சொல்லியிருக்கின்றார். இது ஓர் உண்மைச் சம்பவம்

எனது தாய்க்கு ஒரு கண் மட்டுமே உண்டு. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் என் அம்மா என்னைப் பார்ப்பதற்குப் பள்ளிக்கூடம் வருவாள். சாப்பாடு கொண்டு வருவாள். எனது ஒற்றைக்கண் தாயைப் பார்த்து என் சகப் பள்ளித் தோழர்கள் எள்ளி நகையாடுவார்கள். அப்பொழுதெல்லாம் எனது தாய்மீது அப்படியொரு கோபம் வரும். எரிச்சல்படுவேன். நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்பேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் நீ செத்துப் போயேன், உன்னால் எனக்குப் பெருத்த அவமானம் என்று சொன்னேன். என் தாய் பதில் எதுவுமே சொல்லவில்லை. எப்படியாவது தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அதனால் வெறித்தனமாகப் படித்தேன். நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பை முடித்தேன். வெளியூர் சென்று படித்து பட்டம் வாங்கி நல்ல வேலையிலும் சேர்ந்தேன். ஊரைவிட்டுச் சென்ற பின்னர் எனது தாயைப் பார்க்கவே இல்லை. எனக்குத் திருமணமும் முடிந்து குழந்தைகளும் பிறந்தன. வசதியாக வாழ்ந்தேன். எனது தாய்ப் பற்றி எனது பிள்ளைகளிடம் எதுவுமே நான் சொல்லவில்லை. ஒருநாள் நான் இருக்கும் முகவரியைக் கண்டுபிடித்து எனது வீடுதேடி வந்தாள் என் தாய். ஒற்றைக் கண்ணுடன் பரிதாபக் கோலத்தில் அவளைப் பார்த்ததும் என் பிள்ளைகள் நக்கலாகச் சிரித்தார்கள். அப்பொழுதும் நான் எரிச்சலடைந்து வீட்டை விட்டுத் துரத்தினேன். மன்னிக்கவும், முகவரி தவறி வந்துவிட்டேன் என்று சொல்லி பவ்யமாக அங்கிருந்து சென்று விட்டாள். இப்படியிருக்க ஒருநாள் என் பள்ளி நண்பர்கள், பழைய மாணவர்கள் சங்க விழாவுக்காக அழைத்திருந்தார்கள். நானும் சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனது நண்பர்கள், உனது தாய் இறந்து விட்டாள். இந்தக் கடிதத்தை உன்னிடம் கொடுக்கச் சொன்னாள் என்று சொல்லி அதைக் கொடுத்தார்கள். அதைப் பிரித்துப் படித்தேன்

மகனே, நீ சிங்கப்பூர் வருவதாய் அறிந்தேன். உன்னை வந்து பார்ப்பதற்கு கொள்ளை ஆசை. ஆனால் என்னால் எழும்ப முடியாது. அன்று உன் வீட்டில் உன் பிள்ளைகளுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக வருந்துகிறேன். நீ சிறுவனாக இருந்த போது ஒரு விபத்தில் சி்க்கி உனது ஒரு கண்ணை இழந்து விட்டாய். உன்னை ஒற்றைக் கண்ணனாய்ப் பார்ப்பதற்கு இந்தப் பெற்ற மனம் சகிக்கவில்லை. எனவே எனது ஒரு கண்ணை உனக்குப் பொருத்தினேன். நீ என்றும் நன்றாக வளத்தோடு இரு. இப்படிக்கு உன் அன்புத் தாய்

அன்பர்களே, மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் முதியோர் ஒவ்வொரு சமூகத்திலும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த விரும்பிய ஐக்கிய நாடுகள் நிறுவனம், அதன் பொது அவையில் 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை அனைத்துலக முதியோர் தினமாகக் கடைபிடிக்க அழைப்பு விடுத்தது. இத்தீர்மானத்தின்படி 1991ம் ஆண்டு முதன் முதலாக அனைத்துலக முதியோர் தினம் உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டது. அதுமுதல் ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, அறுபது வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்படுகின்றனர். அதனை மூன்றாம்நிலை வயது எனவும் சொல்கின்றனர். இருந்தாலும்கூட, முதுமை என்பது ஒருவரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்கிறார்கள். ஒரு குழந்தை வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியாத நிலையாகும். முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை அறிவியல் ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. 60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறையத் தொடங்குவதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. தோல்சுருக்கம், தசைஎடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத்தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் எனப் பல்வேறு முறைகளில் உடலியல் செயல்பாடு பாதிக்கப்படுவதால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விடயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

பெரும்பாலும் முதுமையில் தாக்கக்கூடிய டிமென்ஷியா எனப்படும் நினைவிழப்பு நோய் இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக உருவாகியிருப்பதாக அல்சைமர் (Alzheimer) நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது. தற்போது உலக அளவில் சுமார் நான்கு கோடிப்பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பராமரிப்பதற்கு இந்த ஆண்டு மட்டும் அறுபதாயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்தியா சீனா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டினரின் ஆயுட்காலத்தைக் கூட்டி வருவதால் இந்த ஞாபகமறதி நோயும் அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சுமையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவ்வுலக அமைப்பு எச்சரித்துள்ளது. உணவு உட்கொள்வது முதல் மலஜலம் கழிப்பதுவரை எல்லாமே பிறர்தான் செய்ய வேண்டும். இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய நோய் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்பது ஆன்றோர் வாக்கு. முதுமை கீறல் விழுந்த இசைத்தட்டாக இருக்கலாம், ஆனால் இவர்கள் தங்கள் உழைப்பைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் தங்களது தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படுகின்றனர். கூட்டுக் குடும்பங்கள் உடைந்து வரும் இக்கால்ததில் முதியோர் அன்பு பாசம் பாரமரிப்பின்றி விடப்படக் கூடாது என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா இராமலிங்கம்.

அன்பர்களே, இவ்வெள்ளியன்று முதியோர் தினத்தைச் சிறப்பிக்கவிருக்கிறோம். நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் செய்த பல தியாகங்களைப் நினைத்துப் பார்க்க இந்நாள் சிறப்பான அழைப்பு விடுக்கிறது. இந்நாளையொட்டி ஒரு தாயும் தந்தையும் தம் மகனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை வாசிக்கிறோம்

அன்பு மகனே, நீ எங்களை வயதாகிப் பார்க்கும் பொழுது எங்கள் மீது பொறுமை காட்டி எங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய். நாங்கள் சாப்பிடும் போது அந்த இடத்தை அசிங்கமாக்கினால், எங்களால் ஆடை உடுத்த முடியாமல் இருந்தால் உனது சிறுவயதில் இவற்றிற்காக நாங்கள் செலவழித்த நேரங்களை நினைத்துப் பார். நாங்கள் உன்னிடம் பேசும் போது சொன்னதையே ஆயிரத்தொரு தடவை சொன்னாலும் இடை மறிக்காதே. நீ சிறுவனாக இருந்த போது நீ தூங்கும்வரை ஆயிரத்தொரு தடவை ஒரே கதையை நாங்கள் வாசிக்க வேண்டியிருந்தது. நாங்கள் குளிக்க விரும்பாவிட்டால் வெட்டகம் வெட்கம் என்று எங்களைத் திட்டாதே. உனது சிறு வயதில் உன்னைக் குளிக்க வைப்பதற்கு உன் பின்னாலே ஓடிவந்து ஆயிரத்தொரு பொய்க் காரணங்களைச் சொல்ல வேண்டியிருந்தது. இந்தப் புதிய கணணி, வலைத்தளம் தொழிற்நுட்பத்தில் எங்களது அறியாமையைக் கண்டு உனது நக்கல் சிரிப்பை உதிர்க்காதே. நீ நன்றாகச் சாப்பிட, நன்றாக உடை உடுத்த, உன் வாழ்வின் சவால்களை எதிர் கொள்ள உனக்கு எத்தனைமுறை கற்றுக் கொடுத்தோம் என்பதை நினைத்துப் பார். நாங்கள் நினைவுகளை இழந்து அவசியமானதைச் செய்ய மறக்கும் போது கோபப்படாதே. பதட்டமடையாதே. நடப்பதற்கு எங்களது கால்கள் சோர்வடையும் போது தாங்கிப் பிடித்து நடக்க உதவி செய். கைத்தடியை கொடுக்க மறக்காதே. நீ முதலில் நடக்கத் தொடங்கிய போது உன்னை நாங்கள் தாங்கியதை நினைவில் கொள். எங்களது தவறுகளின் மத்தியிலும் நீ எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டுமென்று உனக்கு நல்ல வழியைத் தயார் செய்ததை, நேர்த்தியான பொருட்களை நாங்கள் வாங்கியதை நீ ஒருநாள் உணர்வாய். எங்களது கடைசி காலத்தை மாண்போடும் மதிப்போடும் அன்போடும் வாழ உதவி செய். நாங்களும் அளப்பரிய அன்போடும் புன்சிரிப்போடும் அதனைத் திருப்பிக் கொடுப்போம். எங்கள் இதயத்தில் எப்பொழுதும் நீ இருக்கின்றாய்.

இப்படிக்கு உன் அப்பா அம்மா








All the contents on this site are copyrighted ©.