2010-09-22 16:04:06

பல துறைகளிலும் அதிகமாய்ப் பரவி வரும் ஊழலை ஒழிக்க ஒவ்வொரு நாட்டின் அரசும் அதிகம் முயல வேண்டும் - கர்தினால் Turkson


செப்.22, 2010. வளர்ச்சி அடைந்துள்ள, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வணிகம், பொருளாதாரம் ஆகிய பல துறைகளிலும் அதிகமாய்ப் பரவி வரும் ஊழலை ஒழிக்க ஒவ்வொரு நாட்டின் அரசும் அதிகம் முயல வேண்டும் என்று கத்தோலிக்க கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
இத்திங்கள் முதல் புதன் வரை நியூயார்க் நகரில் நடைபெற்ற மில்லென்னிய இலக்குகள் குறித்த உச்சி மாநாட்டில் பேசிய வத்திக்கானின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவர் கர்தினால் Peter Kodwo Appiah Turkson இவ்வாறு கூறினார்.
தான் ஆப்ரிக்க நாட்டைச் சார்ந்தவர் என்பதால், அங்கு சகாராப் பகுதிகளில் மில்லேன்னிய இலக்குகள் இன்னும் பல வழிகளில் நிறைவேற்றப்படாமல் இருப்பதைக் கர்தினால் Turkson சுட்டிக் காட்டிப் பேசினார்.
இன்றைய உலகில் தேவைக்கதிகமான ஆனால் குறுகிய நாட்டுணர்வு, பன்னாட்டு நிறுவனங்களைக் காக்கும் முயற்சிகள், சுயநலப் போக்குகளை வலியுறுத்தும் வாழ்வு முறை ஆகியவைகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது வறியோரே என்பதைத் தெளிவுபடுத்தினார் கர்தினால் Turkson.பிறரன்பை மையப்படுத்திய முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ள திருத்தந்தையின் Caritas in Veritate சுற்று மடலின் எண்ணங்களையும் தன் உரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார் கர்தினால் Turkson.







All the contents on this site are copyrighted ©.