2010-09-22 15:32:02

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


செப்.22,2010. இத்தாலியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திருத்தந்தையும் இப்புதனன்று தனது வழக்கமான மறைபோதகத்தை மீண்டும் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தொடங்கினார். இங்கு இப்புதன் காலை சுமார் பத்தாயிரம் பயணிகள் கூடியிருக்க அவர்களிடம் தான் இஞ்ஞாயிறன்று நிறைவு செய்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்க்கானத் திருப்பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களுக்குத் தெரிந்திருப்பது போல், பிரிட்டனுக்கான எனது முதல் RealAudioMP3 அப்போஸ்தலிக்கத் திருப்பயணத்தை அண்மையில்தான் நிறைவு செய்து திரும்பியுள்ளேன். அந்த நான்கு நாட்களில் அங்கு நான் சந்தித்த மற்றும் ஊடகங்கள் வழியாக இந்தப் பயணத்திற்காகச் சேவை செய்த எல்லாருக்கும் எனது பாசத்துடன்கூடிய வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறேன். திருப்பீடத்துக்கும் பிரிட்டனுக்குமிடையேயான நீண்ட கால உறவுகளில் இந்தப் பயண நாட்கள் புதிய மற்றும் முக்கிய காலக்கட்டத்தைத் தொடங்கியுள்ளன. கடந்த வியாழனன்று ஸ்காட்லாந்தின் வரலாற்றுத் தலைநகரமான எடின்பர்கில் அரசியும் எடின்பர்க் பிரபுவும் கொடுத்த இனிய வரவேற்பால் கௌரவிக்கப்பட்டேன். அதேநாளின் மாலைப் பொழுதில் கதிரவன் அழகாக மறைந்து கொண்டிருந்த நேரத்தில் கிளாஸ்கோ பெல்லாஹவுஸ்டன் பூங்காவில் பல ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பெருமளவான விசுவாசிகள் முன்னிலையில் திருப்பலி நிகழ்த்தினேன். இதே இடத்தில்தான் 28 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முந்தைய திருத்தந்தை ஸ்காட்லாந்து விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்தினார்.

இலண்டனுக்குச் சென்றவுடன் மிகவும் மகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானக் கத்தோலிக்க மாணவர்கள் மற்றும் பள்ளிச் சிறாரைச் சந்தித்தேன். பிரிட்டன் முழுவதும் கத்தோலிக்கப் பள்ளிகளும் ஆசிரியர்களும் செய்து வரும் நேர்த்தியான மற்றும் முக்கிய பணியை நம் எல்லாருக்கும் நினைவுபடுத்துவதாக அது இருக்கின்றது. அதன்பின்னர் பல்வேறு மதங்களின் குருத்துவ மற்றும் பொதுநிலைப் பிரிதிநிதிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். அச்சந்திப்பில் எல்லாருக்கும் பொதுவான புனிதம் பற்றிய தேடல் குறித்து கலந்து பேசினோம். பின்னர், உரோமையில் என்னைச் சந்திப்பதற்காகப் பல தருணங்களில் வந்த கான்டர்பரி பேராயரைச் சந்தித்தேன். லாம்பத் மாளிகையில் ஆங்லிக்கன் திருச்சபை ஆயர்கள் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பு மிகவும் இனியதாகவும் சகோதரத்துவம் கொண்டதாகவும் இருந்தது. பின்னர் ஆற்றைக் கடந்து வெஸ்ட்மின்ஸ்ட்டர் சென்றேன். அங்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் ஹாலில் கூடியிருந்த பாராளுமன்றத்தின் இரு சபையினருக்கும் உரையாற்றுகின்ற, இதுவரைக் கிடைத்திராத அரிய வாய்ப்பு கிட்டியது. இன்றைய நமது நாட்கள் போலவே புனித தாமஸ் மூர் காலத்திலும் ஏற்றதாய் இருந்த தலைப்பான விசுவாசத்திற்கும் அறிவுக்கும் இடையேயான பலனுள்ள உரையாடலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினேன். அந்நாளின் இறுதியில் வெஸ்ட்மின்ஸ்ட்டர் திருமடத்தில் புனித எட்வர்ட்டின் கல்லறையில் கான்டர்பரி பேராயருடன் இணைந்து மண்டியிட்டுச் செபித்து கடவுளுக்கு நன்றி கூறினேன். இதில் ஸ்காட்லாந்து திருச்சபையின் தலைவர் மற்றும் பிற பிரிட்டன் கிறிஸ்தவத் தலைவர்களும் இணைந்து நமது கிறிஸ்தவத் தோழமையை மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்குவதற்கான நமது முயற்சிகள் மீது கடவுள் பொழிந்துள்ள பல ஆசீர்களுக்கு நன்றி கூறினார்கள்.

அடுத்த நாள் காலை வெஸ்ட்மின்ஸ்ட்டர் பேராலயத்தில் உரோமன் வழிபாட்டு முறையில் நேர்த்தியான ஆங்கில இசையுடன்கூடிய திருவழிபாட்டை நிகழ்த்துவதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், உதவிப் பிரதமர் நிக் கிளெக், எதிர்க்கட்சித் தலைவர் ஹாரியட் ஹார்மன் ஆகியோரைச் சந்தித்தேன். அந்த நாளின் பிற்பகலில் ஏழைகளின் சிறிய சகோதரிகளும் அவர்கள் பராமரிக்கும் முதியோரும் இனிய நல்வரவேற்பு கொடுத்தனர். அவ்விடத்தில் பிரிட்டனில் சிறார் பாதுகாப்புக்காகப் பணியாற்றுவோரைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறி அவர்களை ஊக்கப்படுத்தினேன். ஞாயிறு காலையில் பர்மிங்காம் சென்று கர்தினால் ஜான் ஹென்றி நியுமனை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தும் திருவழிபாட்டை நிகழ்த்தி மகிழ்ச்சியடைந்தேன். அதே நாளில் பிரிட்டன் ஆயர்களுடன் இனிய மற்றும் சகோதரத்துவச் சந்திப்பை நடத்தினேன். பர்மிங்காம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூன் மிகவும் இனியதொரு உரை வழங்கி வழி அனுப்பி வைத்தார். கத்தோலிக்கத் திருச்சபையுடனும் பிறருடனும் சேர்ந்து வளர்ச்சிப் பணிகளைச் செய்வதற்கான பிரிட்டன் அரசின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டது.

RealAudioMP3 பின்னர் ஞாயிறன்று மாபெரும் ஆங்கிலேய மனிதனின் அருளாளர் நிலையை திருச்சபை கொண்டாடிய போது அது எனக்குச் சொந்த வாழ்வில் மிகுந்த திருப்தி அளித்த நேரமாக இருந்தது. பல ஆண்டுகளாக நான் வியந்த அம்மனிதரின் வாழ்வும் எழுத்துக்களும் அந்நாட்டையும் கடந்து எண்ணற்ற மக்களால் புகழப்படும் நிலைக்கு வந்துள்ளது. பிறரன்பில் உண்மையை அறிந்து வெளிப்படுத்துவதற்கான முத்திப்பேறு பெற்ற ஜான் ஹென்றி நியுமனின் தெளிவானச் சிந்தனையுடனான தேடல், தனது சொந்த வசதிகள், தகுதி இன்னும் நட்புறவுகளையும் விட்டுக் கொடுக்கும் அளவுக்குத் திருச்சபையின் ஒன்றிப்பில் கடவுளை அறிந்து அன்பு செய்வதற்கானத் தூய்மையான ஆவலுக்கு வியத்தகு சான்றாக அமைகின்றது. அவர் நிச்சயமாக நம் எல்லாரையும் தூண்டக்கூடிய ஓர் எடுத்துக்காட்டு.

இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணிகளை வாழ்த்தி எல்லாருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.