2010-09-22 16:04:52

எண்ணெய், பெட்ரோல் ஆகியவைகளின் பயன்பாட்டைக் குறைக்க பிரித்தானியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பின் முயற்சி


செப்.22, 2010. உலகில் கார்பனின் அளவு ஆபத்தான வகையில் அதிகரிப்பதைக் குறைக்கும் நோக்குடன் அக்டோபர் 3ம் தேதி ஞாயிறன்று 'Operation Noah' என்ற பெயரில், எண்ணெய், பெட்ரோல் ஆகியவைகளின் பயன்பாட்டை ஒரு நாளாகிலும் நிறுத்தும் முயற்சியைப் பிரிட்டானியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு மேற்கொள்கிறது.
பூஜ்யக் கார்பன் பிரிட்டானியாவை 2030ம் ஆண்டுக்குள் உருவாக்கும் நோக்கத்தோடு கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பல முயற்சிகளின் முதல் படியாக இந்த 'Operation Noah' அமையும் என்று கூறப்படுகிறது.
நாம் எவ்வளவு தூரம் நமது சுற்றுச் சூழலைப் பாழாக்கியுள்ளோம் என்பதற்கு மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டானிய பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட விபத்து ஓர் எச்சரிக்கை என்றும், இது போன்ற பேரழிவுகள் வராத வண்ணம் நமது உலகைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் 'Operation Noah' வை ஏற்பாடு செய்து வரும் போதகர் Chris Brice கூறினார்.
உண்ணா நோன்பு என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஒரு அம்சம், எனவே எண்ணெய் உபவாசம் என்ற இந்த முயற்சியும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்குப் புதிதல்ல என்று Chris கூறினார்.அடிமை ஒழிப்பு என்பதை ஒரு மில்லேன்னிய முயற்சியாக 2000மாம் ஆண்டு கிறிஸ்தவ சபைகளும், அமைப்புக்களும் மேற்கொண்டதைப் போல், இப்போது இயற்கை சார்ந்த முயற்சிகளிலும் கிறிஸ்தவ சபைகள் இணைவது முக்கியம் என்று Chris Brice மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.