2010-09-21 15:39:40

ஆஸ்திரேலிய ஆயர் ஒருவர் அந்நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறும் மக்கள் மீதான அரசின் கொள்கையைக் குறை கூறுகின்றார்


செப்.21,2010. ஆஸ்திரேலியாவில் முறையான ஆவணங்களின்றி குடியேற வரும் மக்களை அடைத்து வைக்கும் அரசின் கொள்கை கோழைத்தனமானது என்று அதனைக் குறை கூறியுள்ளார் ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் சமூக நீதி பணிக்குழுத் தலைவர் ஆயர் கிறிஸ்டோபர் சான்டெர்ஸ்.

ஆஸ்திரேலியாவின் இரு முக்கிய கட்சிகளும், அந்நாடு சட்டத்துக்குப் புறம்பேயான குடியேற்றதாரர்களால் நிரம்பி வழிகின்றது என்ற பொய்யைப் பரப்பி மக்களில் பயத்தை உருவாக்கி அதில் விளையாடுகின்றன என்று ஆயர் சான்டெர்ஸ் மேலும் கூறினார்.

இம்மாதம் 17ம் தேதி சட்டத்துக்குப் புறம்பே படகில் வந்த 95 பேர் கிறிஸ்மஸ் தீவை அடைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் கேள்விகளால் இடைமறிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 4,900த்தை எட்டியுள்ளது என்றார்.

1950 களில் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியக் குடியேற்றதாரருக்கும், 1970 களில் படகில் வந்து சேர்ந்த வியட்நாம் மக்களுக்கும் இதுதான் நடந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த மக்கள் சில ஆபத்தான வழிகளில் வருவதால் வழியில் எத்தனைபேர் மூழ்கிப்போயுள்ளனர் என்பதை கடவுள் மட்டுமே அறிவார் என்றுரைத்த ஆயர் சான்டெர்ஸ், ஆஸ்திரேலியா ஆண்டுக்கு 14 ஆயிரம் அகதிகளை ஏற்க வேண்டுமென்ற நியதி, உலகில் அகதிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது மிகவும் குறைவு என்றார்.








All the contents on this site are copyrighted ©.