2010-09-20 15:35:02

முத்திபேறு பெற்ற கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் ஒரு புனிதராக உயர்த்தப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன


செப். 20, 2010. முத்திபேறு பெற்றவராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால் அறிவிக்கப்பட்ட கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் ஒரு புனிதராகவும் திருச்சபையின் மறைவல்லுனராகவும் உயர்த்தப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று திருப்பீடத்தின் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.

இஞ்ஞாயிறன்று, பர்மிங்காமில் கர்தினால் நியூமன் திருத்தந்தையால் முத்திபேறு பெற்றவராக அறிவிக்கப்பட்ட திருப்பலிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை லொம்பாதி இவ்வாறு கூறினார்.

வழக்கத்திற்கு மாறாக, திருத்தந்தையாலேயே முத்திபேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ள கர்தினால் நியூமன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்றும், இதனால் அவரது பரிந்துரைக்காகப் பலரும் இவரிடம் விண்ணப்பம் செய்வது அதிகமாகும் என்றும் இக்காரணங்களால் இவர் புனிதராகும் வாய்ப்புக்களும் அதிகமாகும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.

முத்திபேறு பெற்ற கர்தினால் நியூமனின் ஆழ்ந்த எண்ணங்கள் திருத்தந்தை உட்பட பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதால், இவர் புனிதராக உயர்த்தப்படும் போது, திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதை திருத்தந்தையே கூறியதாக, அருள்தந்தை லொம்பார்தி திருத்தந்தையுடன் ரோமைக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.