2010-09-20 16:01:29

திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பயணம் - ஓர் அலசல்


செப்.20,2010. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்திலுள்ள அமைதி மணி ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி ஒலித்து உலக அமைதி நாளை நினைவுபடுத்தி வருகிறது. போரும் வன்முறையும் வேண்டாம், சகிப்புத்தன்மை தேவை என்பதை இந்நாள் உலகோர்க்கு உணர்த்துகின்றது இத்திங்களன்றுகூட உரோமை மாநகரம் ஒன்றிணைந்த இத்தாலியின் தலைநகராக மாறியதன் 140ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. திருத்தந்தை 9ம் பத்திநாதரின் படைகள் சரணடைந்ததை முன்னிட்டு இந்நிகழ்வு நடைபெற்றது. எனவே வரலாற்றில் அமைதி என்பது பல கட்டங்களில் பலரால் முயற்சிக்கப்பட்டு வருகிறது. மாறிவரும் இன்றைய உலகின் எதிர்மறை விளைவுகளில் இளையோர் அதிகம் சிக்குகின்றனர். தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் சக்திகளும் அவர்களை அச்சுறுத்துகின்றன என்று பல தலைவர்கள் கவலைப்படுகின்றனர். இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்படும் ஐ.நா.வின் உலக அமைதி நாளும் இளையோருக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமைதி விலைமதிப்பற்றது. இது பேணி பாதுகாக்கப்பட வேண்டும், இதில் இளையோருக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே இவர்கள் உலகில் நிம்மதியாய் வாழ்வதற்கு நாடுகள் ஆவன செய்யுமாறு இந்நாளில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையும் உலகின் இளையோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று நிறைவு செய்துள்ள பிரிட்டனுக்கான நான்கு நாள் திருப்பயணமும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அவர் இலண்டன் ஹைட் பூங்காவில் நிகழ்த்திய மாலை திருவழிபாட்டின் போது இளையோர்க்கெனச் சிறப்பாகப் பேசினார். திருத்தந்தை பிரிட்டன் செல்லுமுன்னர் அவரின் திருப்பயணத்திற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அவையனைத்தும் புஷ்வானமாகியுள்ளன.

பிரிட்டனுக்கான இந்த நான்கு நாட்கள் திருப்பயணத்தை இஞ்ஞாயிறு மாலை நிறைவு செய்து உரோமைக்குத் திரும்பிய போது தம்மை அந்நாட்டிற்கு அழைத்து இனிய வரவேற்பு அளித்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நன்றி கலந்த தந்திச் செய்தியும் அனுப்பினார் திருத்தந்தை. பர்மிங்காம் சர்வதேச விமான நிலையத்தில் இஞ்ஞாயிறு மாலை உள்ளூர் நேரம் 6 மணியளவில் இடம் பெற்ற பிரியாவிடை நிகழ்விலும் திருத்தந்தை அரசிக்கும் அரசு மற்றும் திருச்சபை அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். RealAudioMP3

இந்நிகழ்வில் பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் நிகழ்த்திய நன்றியுரையில் இந்நாட்களில் திருத்தந்தை ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்களை அங்கீகரித்து உறுதிப்படுத்தினார்.

RealAudioMP3 இந்த நான்கு நாட்களும் நம்பமுடியாத வகையில் எல்லாரின் உள்ளத்தையும் நெகிழச் செய்துள்ளது. பிரிட்டனுக்கான உண்மையிலேயே வரலாற்றுத்தன்மை மிக்க இந்த முதல் அதிகாரப்பூர்வ பயணத்தில் திருத்தந்தையே, நீவீர் பிரிட்டனின் 60 இலட்சம் கத்தோலிக்கருக்கரிடம் பேசினீர்கள். ஆனால் அது நாட்டின் ஆறு கோடிக்கு மேற்பட்ட குடிமக்களாலும் உலகின் பல இலட்சக்கணக்கான மக்களாலும் கேட்கப்பட்டது. நாட்டினர் எல்லாரும் அமர்ந்து யோசிப்பதற்கு நீர் உண்மையிலே சவால் விடுத்துள்ளீர். இதுதான் நல்லதும்கூட. ஏனெனில் பொது நலனுக்காக நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இதில் ஒவ்வொருவருக்கும் அறநெறி ரீதியானத் தார்மீகக் கடமை உள்ளது என்று உமது செய்தி கூறுகிறது. பொருளாதார நெருக்கடி நேரங்களில்கூட கடும் ஏழைகளுக்கு நாம் தொடர்ந்து உதவ வேண்டுமென்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். எம் நாடு இதில் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றும்.

திருத்தந்தையின் இத்திருப்பயணத்தால் நாடே ஈர்க்கப்பட்டுள்ளது என்பதற்குப் பிரிட்டன் பிரதமர் காமரூனின் உரையே ஒரு சான்றாகும். இந்த நான்கு நாட்களும் திருத்தந்தையோடு சென்ற திருப்பீடப் பேச்சாளர் அருட்திரு லொம்பார்தி, இப்பயணம் பிரிட்டன் மக்களுக்கு ஓர் ஆன்மீக வெற்றி என்று குறிப்பிடுகிறார். இப்பயணத்தின் இறுதியில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களிடம் பேசிய திருத்தந்தை, பிரித்தானியர்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மீது அளவற்ற தாகம் கொண்டிருப்பதை உணர முடிந்தது, எனவே ஆயர்கள் இம்மக்களுக்கு நற்செய்தியின் உயிருள்ள தண்ணீரைக் கொடுப்பதற்கு அழைப்பு பெற்றுள்ளார்கள் என்றார்.

28 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனுக்கு ஒரு திருத்தந்தை மேற்கொண்ட இப்பயணம் அந்நாட்டினரில் உண்மையிலேயே புதுவிதச் சிந்தனையைத் தூண்டியுள்ளது என்று சொல்லலாம். வாழ்க்கையின் பொருள் என்ன? கடவுள் இருக்கிறாரா? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பயணம் பதில் தருகின்றது, கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து வருவதற்குப் பாதை திறந்துள்ளது என்று நம்பலாம் அல்லவா








All the contents on this site are copyrighted ©.