2010-09-19 15:49:59

திருத்தந்தையின் பிரிட்டனுக்கான திருப்பயணத்தின் இறுதி கட்ட நிகழ்ச்சிகள் குறித்த விளக்கம்


செப். 19, 2010. ஒரு நாட்டின் அரசுத்தலைவர் என்ற முறையில் பிரிட்டனில் தன் திருப்பயணத்தை நிறைவேற்றிவரும் திருத்தந்தை, எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகவே மக்களின் வரவேற்பைப் பெற்றுவருகிறார் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சிறார் மீதான பாலியல் நடவடிக்கைகளால் திருச்சபை பெரும் வேதனைகளை அனுபவித்துவரும் இவ்வேளையில், மக்கள் பெரும் கூட்டமாக திருத்தந்தையின் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்மையிலேயே ஆறுதல் தரும் ஒன்றாகவும் திருத்தந்தையுடன் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் உள்ளது எனக் கூறலாம்.
திருத்தந்தை பிரிட்டனில் நிகழ்த்தி வரும் நான்கு நாள் திருப்பயணத்தின் மூன்றாம் நாளாகிய சனியன்று, மாலை உள்ளூர் நேரம் 5 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 9.30 மணிக்கு ஏழைகளின் சிறிய சகோதரிகள் என்ற கத்தோலிக்கப் பெண் துறவு சபை நடத்தும் முதியோர் இல்லத்தைக் காணச்சென்றார். இலண்டனின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் St. Peter's Residence என்ற இந்த முதியோர் இல்லத்தில் 76 முதியோர்களை இக்கன்னியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த முதியோருள் 9 பேர் குருக்கள் மற்றும் துறவறத்தார்.
இவ்வில்லத்தில் முதலில் திருத்தந்தையை Southwark பேராயர் Peter Smith, ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை தலமை சகோதரி Maria Claire ஆகியோர் வரவேற்று அழைத்துச்சென்றனர். முதியோர்களுக்கான ஜெப வழிபாட்டில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆசீரும் வழங்கிய திருத்தந்தை, அவ்வில்லத்திற்கென கொடை ஒன்றை வழங்க, இல்ல முதியோர்களும் ஒன்றிணைந்து பரிசு ஒன்றை திருத்தந்தைக்கு அளித்தனர்.
திருத்தந்தை முதியோருக்கு வழங்கிய உரையை முடித்தபின் அனைவருக்கும் ஆசீர் வழங்கி, முக்கிய விருந்தாளிகளுக்கு என வைத்திருக்கும் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார் பாப்பிறை.
புனித பீட்டர் முதியோர் இல்லத்தில் முதியோருக்கு உரை நிகழ்த்திய பின்னர் இளையோர் மற்றும் சிறார் பாதுகாப்புக்காக உழைக்கும் தன்னார்வப் பணியாளர்கள் குழுவையும் சந்தித்தார் திருத்தந்தை.
சிறு பிள்ளைகளை அரவணைத்தக் கிறிஸ்துவின் பாசமான எடுத்துக்காட்டைப் பின்பற்றித் திருச்சபையும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களைப் பராமரிப்பதில் நீண்டகால மரபைக் கொண்டுள்ளது. இந்த நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் சிறார் மற்றும் இளையோரின் பாதுகாப்பிற்குத் திருச்சபை எடுத்து வரும் முயற்சிகள், குறிப்பாகக் கடந்த பத்து ஆண்டுகளின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்., கடவுளின் விலைமதிப்பற்ற கொடைகளாகிய சிறாரின் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தைப் புதுப்பிக்கவும் நம்பிக்கையான சூழலை மீண்டும் வலுப்படுத்தவும் உங்களது தாராளப்பணி உதவும் என அவர்களிடம் கூறினார்.

ஏறத்தாழ ஒருமணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புகளுக்குப் பின், 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இலண்டனின் Hyde பூங்கா நோக்கி பயணமானார் பாப்பிறை. 350 ஏக்கரில் அமைந்துள்ள இப்புகழ்வாய்ந்த பூங்காவில், கர்தினால் நியூமனின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாவுக்கு முந்தைய நாளின் திருவிழிப்பு ஜெப வழிபாட்டில் கலந்துகொள்ளச் சென்றார் திருத்தந்தை. வெஸ்ட்மின்ஸ்டர் துறவியர் இல்லத்தின் உடமையாக இருந்த இப்பூங்கா 1536ல் மன்னர் எட்டாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டு அரச குடும்பத்தினர் வேட்டையாடுவதற்கான இடமாக மாற்றப்பட்டது. 1637ல் மன்னர் முதலாம் சார்ல்ஸ் இதனை பொதுமக்களுக்குத் திறந்துவிட்டார்.
இப்பூங்காவில் இடம்பெற்ற திருவிழிப்பு ஜெப வழிபாட்டில் Southwark பேராயரும் பிரிட்டானிய ஆயர் பேரவையின் துணைத்தலைவருமான Peter Smith திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இச்செப வழிபாட்டில் திருத்தந்தை உரை வழங்கினார்.
திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்செபவழிபாட்டில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டதாக எம் நிருபர்கள் தெரிவிக்கின்றனர். இச்செப வழிபாட்டின் இறுதியில் வணக்கத்துக்குரிய கர்தினால் நியூமனின் புகழ்வாய்ந்த பாடலான "Lead Kindly Light" அதாவது 'ஒளியே என்னை அன்போடு வழி நடத்தும்’ என்பது பாடப்பட்டது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் அங்கிருந்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் மாலை 7.45 மணிக்கு அதாவது இந்திய நேரம் சனிக்கிழமை நடுஇரவு 12 மணி 15 நிமிடங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகம் நோக்கிச் சென்றார். அரை மணி நேர பயணத்திற்குப் பின் திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன் அவரின் சனிக்கிழமைக்கான பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இஞ்ஞாயிறு காலை திருத்தந்தையின் திருப்பயணத்திட்டங்கள் உள்ளூர் நேரம் 8 மணிக்கு அதாவது இந்திய நேரம் 11.30 மணிக்குத் துவங்கியது. இலண்டனின் திருப்பீடத்தூதரகத்திலிருந்து விடைபெற்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விம்பிள்ட்டன் பூங்காச் சென்று, அப்பூங்காவிலிருந்து ஹெலிகாப்டரில் 150 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு பர்மிங்காம் சென்றடைந்தார் பாப்பிறை. ஏற்கனவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்துகொள்வதற்கென, மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். திருப்பலி நிறைவேற்ற உள்ள பர்மிங்காமின் Cofton பூங்காவை வந்தடைந்த திருத்தந்தை, முதலில் அங்கு குழுமியிருந்த விசுவாசிகளிடையே காரிலேயே வலம் வந்தார். அங்கு குழுமியிருந்த மக்கள் குழந்தைகளை நீட்ட அக்குழந்தைகளை முத்தமிட்டு ஆசீர்வதித்தார். 70 ஆயிரம் பேர் கொள்ளக்கூடிய இப்பூங்கா நிரம்பிக் காணப்பட்டது என எம் நிருபர்கள் தெரிவித்துள்ளனர். கர்தினால் நியூமனின் கல்லறைக்கு அருகிலுள்ள இப்பூங்காவில் திருப்பலி நிறைவேற்றி கர்தினாலை முத்திப்பேறுபெற்றவராக அறிவிப்பதற்கே திருத்தந்தை அவ்விடம் சென்றுள்ளார். இந்த முத்திப்பேறு பட்டமளிப்பு விழா இத்திருத்தந்தையின் வரலாற்றில் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும். ஏனெனில் இதுதான் அவரின் முதல் முத்திபேறுபட்டமளிக்கும் திருப்பலி. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறையாக பதவியேற்றபின், புனிதர் பட்டமளிப்பு விழாத்திருப்பலிகளை மட்டும் தான் நிறைவேற்றிவிட்டு, முத்திப்பேறு அறிவிப்புத் திருப்பலிகளை கர்தினால்கள் வசம் ஒப்படைத்திருந்தார். தற்போது தான், அதாவது கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். இத்திருப்பலியில் முதலில் பர்மிங்காம் பேராயர் Bernard Longley திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்க, அடுத்து கர்தினால் நியூமனுக்கு முத்திப்பேறுபட்டம் வழங்கும் வழிபாட்டுச் சடங்கு இடம்பெற்றது.

இத்திருப்பலிக்குப்பின் பர்மிங்காமின் புனித பிலிப்பு நேரி இளையோர் மேய்ப்புப்பணி மையம் சென்றார் திருத்தந்தை. கோஃப்டன் பூங்காவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இம்மையம் ஏறத்தாழ 44 ஆண்டுகள் கர்தினால் வாழ்ந்து, தன் கடைசி காலத்தைச் செலவிட்ட இடமாகும். அவரின் அறை தற்போது ஓர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதையும் சென்று பார்வையிட்டடார் நம் திருத்தந்தை. முத்திப்பேறுபெற்ற கர்தினால் நியூமனின் சிறு கோவிலையும் சென்று தரிசித்து சிறிது நேரம் அங்கு ஜெபத்திலும் செலவிட்டார் பாப்பிறை.
அதன் பின்னர் அங்கிருந்து 11 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பர்மிங்காமின் குருமடம் இருக்கும் புனித மரி ஆஸ்காட் கல்லூரிக்குச் சென்ற திருத்தந்தை, அங்கேயே பிரிட்டன் ஆயர்களோடும், தன்னுடன் பயணம் செய்யும் திருப்பீட அதிகாரிகளோடும் மதிய உணவருந்தினார்.அதன் பின்னர் அன்று மாலையே அக்குருமடத்தில் பிரிட்டனின் ஓய்வுபெற்ற ஆயர்கள் உட்பட ஏறத்தாழ 50 ஆயர்களைச் சந்தித்து உரை வழங்கினார் பாப்பிறை. அந்நாட்டின் பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் திருத்தந்தை பங்குபெற்ற இங்கிலாந்திற்கான இறுதி நிகழ்ச்சியாகும் இவ்வாயர்களுடனான இச்சந்திப்பு.







All the contents on this site are copyrighted ©.