2010-09-19 13:29:32

செப்டம்பர் 20 - நாளும் ஒரு நல்லெண்ணம்


பேராசை கொண்ட பெரும் செல்வந்தன் ஒருவர் விலைமதிக்க முடியாத அரிய வைரங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
ஒரு நாள் அவரது நண்பர் அந்த வைரங்களைப் பார்க்க விழைந்தார். செல்வந்தர் பெரிதும் தயங்கினார். இருந்தாலும், நண்பர் கேட்டுவிட்டார் என்பதால், துப்பாக்கிகளைத் தாங்கிய நால்வர் புடை சூழ, பலத்தப் பாதுகாப்புடன் அந்த வைரங்களை எடுத்து வந்தார். இருவரும் வைரங்களைச் சிறிது நேரம் பார்த்தனர். மீண்டும் அந்த செல்வந்தர் வைரங்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று பூட்டி வைத்து விட்டு வந்து அமர்ந்தார்.
நண்பர் விடை பெறும் போது, "உமது அரிய வைரங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி." என்றார். உடனே, செல்வந்தர் வெகுண்டெழுந்து, "நான் அவைகளை உம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவைகள் எல்லாமே என்னுடையவை." என்று கத்தினார்."நண்பரே, அந்த வைரங்கள் நமக்கு முன் வைக்கப்பட்டபோது, இருவருமே அந்த வைரங்களை ஆனந்தமாய் பார்த்தோம். நானோ எந்த செலவும் இல்லாமல் இந்த ஆனந்தம் அடைந்தேன். நீரோ அதிக விலை கொடுத்து இதே ஆனந்தம் அடைந்தீர், இன்னும் இதைப் பாதுகாக்க அதிக செலவும் செய்கிறீர். வைரங்களைப் பார்க்கும் போது உண்டான ஆனந்தம் இருவருக்கும் ஒன்றே. அதைத்தான் பகிர்தல் என்றேன்." என்று நண்பர் விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.