செப்.18,2010. பிரிட்டன் நாடு இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கில் பிரிட்டானி (Brittany) என்ற மாநிலப் பகுதி இருப்பதால்,
இந்தப் பிரிட்டன் நாட்டை கிரேட் பிரிட்டன் என்று குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. வட
அயர்லாந்தும், உலகில் இன்னும் பிற பகுதிகளும் இந்த பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டதாக
இருக்கின்றன. இந்த பிரிட்டன் நாட்டின் ஸ்காட்லாந்தில் இவ்வியாழனன்று திருப்பயண நிகழ்ச்சிகளை
நிறைவு செய்த திருத்தந்தை அன்று இரவு இங்கிலாந்து பகுதியிலுள்ள இலண்டன் சென்றடைந்தார்.
பிரிட்டனின் தலைநகரமான இலண்டன் மாநகரில் இவ்வெள்ளி மாலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வரலாறு
படைத்தார் என்று ஊடகங்கள் ஒருசேரப் புகழ்கின்றன. இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை நான்கு
மணிக்கு, இலண்டன் லாம்பத் மாளிகையில் நுழைந்த முதல் திருத்தந்தையாக, திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் தனது காலடிகளைப் பதித்து பற்றியே இவ்வாறு நிருபர்கள் பாராட்டியுள்ளனர்.
இலண்டனிலுள்ள
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த லாம்பத் மாளிகை, தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில்
பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டிலிருந்து
கான்டர்பரி பேராயர்களின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்து வருகிறது. இங்கிலாந்தின்
மிகப் பழமையான நூலகங்களில் ஒன்று இங்குள்ளது. 12 இலட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்களைக்
கொண்ட இந்த நூலகம் இவ்வாண்டில் அது நிறுவப்பட்டதன் நானூறாம் ஆண்டைச் சிறப்பிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க லாம்பத் மாளிகைக்குச் சென்ற திருத்தந்தையை இங்கிலாந்து ஆங்லிக்கன்
சபையின் தலைவரான பேராயர் ரோவன் வில்லியம்ஸ் வரவேற்றார். அச்சமயத்தில் யார்க் பேராயர்
ஜான் செந்தாமு, வேல்ஸ் பேராயர் பேரி மோர்கன் போன்ற சிலர் அங்கு இருந்தனர். ஆங்லிக்கன்
பேராயர் வில்லியம்ஸ் திருத்தந்தையை லாம்பத் மாளிகையின் பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்.
இவ்விரு தலைவர்களும் அவ்வறையில் நுழைந்த போது ஆயர்கள் பலத்த கைதட்டி வரவேற்றனர். திருத்தந்தை
அனைவருக்கும் கை அசைத்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டே சென்றார். முதலில் ஆங்லிக்கன் பேராயர்
வில்லியம்ஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருத்தந்தையே, நற்செய்தியின் வார்த்தையைப்
புதுமையுடன் எமக்குக் கொண்டு வந்திருக்கும் இவ்வரலாற்று சிறப்புமிக்க உமது திருப்பயணம்
இவ்விரு கிறிஸ்தவ சபைகளும் பகிர்ந்து வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ள அருளின் நேரமாக இருக்கின்றது.
இந்த நாட்டின் உரோமன் கத்தோலிக்க ஆயர்களும் ஆங்லிக்கன் சபைகளின் ஆயர்களும் சேர்ந்து கூடியிருப்பது
கிறிஸ்துவின் திருச்சபைக்கும் பிரிட்டன் சமுதாயத்துக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கும் என்று எல்லாரும் நம்புகிறோம். இந்தப் பயணமானது இவ்விரு சபைகளும்
சேர்ந்து உழைப்பதற்கு புத்துணர்ச்சியைத் தரும் என்பதே எமது எதிர்பார்ப்பு. சமயத்தைப்
புண்படுத்துவோருக்கு எதிராக உழைப்பதற்குக் கிறிஸ்தவத் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஆங்லிக்கன் பேராயர் வில்லயம்ஸின் வரவேற்புரைக்குப் பின்னர் திருத்தந்தையும் உரை
நிகழ்த்தினார்.
திருத்தந்தையின் உரை முடிந்ததும் இவ்விரு தலைவர்களும் பரிசுகளைப்
பரிமாறிக் கொண்டனர். பேராயர் வில்லியம்ஸ், 12ம் நூற்றாண்டு லாம்பத் விவிலியத்தைக் கொடுத்தார்.
தோலாலான இதன் இருபக்க அட்டைகளில் விவிலியத்தின் தொடக்க நூல் முதல் கிறிஸ்து மற்றும் திருச்சபை
பற்றிய வரலாறு இடம் பெற்றிருக்கின்றது. பண்டைய உரோமானிய பாணியிலான இவ்விவிலியம், 1150க்கும்
1170க்கும் இடைப்பட்ட காலத்தில் கான்டர்பரியில் எழுதப்பட்டு விவரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
திருத்தந்தையும், 2009ல் புனித பவுல் ஆண்டுக் கொண்டாடப்பட்ட போது உரோமையில் தயாரிக்கப்பட்ட
“Codex Pauli” என்ற நூலின் நகலைக் கொடுத்தார். இதில் பேராயர் வில்லியம்ஸ் எழுதிய ஒரு
கட்டுரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி இரண்டாவது
மனைவியைக் கொண்டிருப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் 1533ம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையை
விட்டுப் பிரிந்ததே இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையாகும்.
இனிதான நட்பை வெளிப்படுத்திய
இச்சந்திப்பை முடித்து, திறந்த காரில் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை சென்றார் திருத்தந்தை.
வெஸ்ட்மின்ஸ்டர் என்றாலே மேற்கு துறவுமடம் என்று பொருள். புனித ஸ்டீபன் வாயில் வழியாக
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குத் திறந்த காரில் சென்ற ஒரு கிலோ மீட்டர் தூரததிற்கு மக்கள்
வெள்ளமென கூடி நின்று கைதட்டி ஆரவாரித்தனர். வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையிலுள்ள மிகப் பழமையான
இந்த ஹால் சுமார் ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது. அரசர்களின் முடிசூட்டு விழாக்கள்
மற்றும்பிற அரச விழாக்களுக்கென 1099ல் இது கட்டப்பட்டது. 1178ல் இது அரச நீதிமன்றமாக
மாறியது. இங்கிலாந்தில் பாராளுமன்ற பேச்சாளராக இருந்த, அரசியல்வாதிகளின் பாதுகாவலரான
புனித தாமஸ் மூர் 1535ல் இந்த ஹாலில்தான் மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். தற்போது
பிரிட்டனின் இரு சபைகளும் இங்கு உள்ளன. பிரிட்டன் பாராளுமன்றப் பேச்சாளர் ஜான் பெர்க்கவ்
திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு பிரிட்டனின் நான்கு முன்னாள்
பிரதமர்கள், பல்சமயத் தலைவர்கள், அரசியல், கலாச்சார, வர்த்தக, தூதரக, எனப் பல பிரமுகர்கள்
கூடியிருந்தனர். திருத்தந்தை உள்ளே நுழைந்ததும் மத்தளச் சப்தங்கள் முழங்கின.
முதலில்
திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய பாராளுமன்றப் பேச்சாளர் ஜான் பெர்க்கவ், புனித பேதுருவின்
வழிவருபவரான ஒரு திருத்தந்தை பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வருகை தருவது இதுவே முதன்முறை.
எனவே இது தன்னிலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தனிச்சிறப்புடையது என்றார்.
அடுத்துத்
திருத்தந்தையின் உரையும் இடம் பெற்றது. இங்கு அரசியல்வாதிகள் திருத்தந்தைக்கு இவ்வளவு
இனிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என்று யாரும் யூகித்திருக்கமாட்டார்கள், திருத்தந்தையின்
உரையும் காலத்திற்கேற்றது என்று அருள்திரு கிறிஸ்டோபர் ஜேமிசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்
நிகழ்ச்சியை முடித்து வெஸ்ட்மின்ஸ்டர் ஆங்லிக்கன் கிறிஸ்தவப் பேராலயம் சென்றார் திருத்தந்தை.
அங்கு திருவழிபாடு தொடங்கியது.
புனித பேதுரு ஆலயமான இது ஆங்லிக்கன் பேராயரின்
தலைமைப் பேராலயமாகும். இங்கு 1066ம் ஆண்டு முதல் பிரிட்டன் அரசர்களின் பாரம்பரிய முடிசூட்டு
நிகழ்வு நடைபெறுகின்றது. ஆங்லிக்கன் பேராயர் வில்லியம்ஸும் திருத்தந்தையும் அரசர்களின்
முடிசூட்டு நிகழ்வு இடம் பெறும் பீடத்திற்கு நடுப்பாதை வழியாக இணையானவர்களாக நடந்து சென்றனர்.
அங்குள்ள மத்தியகால ஆங்கிலேய அரசரான புனித முதலாம் எட்வர்டின் கல்லறை முன்னர் இருவரும்
செபித்தனர்.
அப்பேராலயத்தில் இடம் பெற்ற வழிபாட்டில் திருத்தந்தை உரை நிகழ்த்தினார்
இத்திருவழிபாட்டின்
இறுதியில் இவ்விரு தலைவர்களும் சேர்ந்து ஆசீர் அளித்தனர். இத்துடன் இவ்வெள்ளிதின நிகழ்வுகள்
முற்றுப்பெற்றன. திருத்தந்தை இந்நிகழ்வுகளை முடித்து வெளியே வந்த போது, திருத்தந்தையே
நாங்கள் உம்மை அன்பு செய்கிறோம், நூறு விழுக்காடு உங்களோடு இருக்கிறோம் என்று மக்கள்
கூட்டம் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது. அல்லேலூயா என்று பாடிக் கொண்டும் இருந்தது.
இதற்கு மத்தியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவி்க்க வந்திருந்த சுமார் முப்பது பேரின் குரல்கள்
அமுங்கிப் போயின என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இலண்டன் திருப்பீடத் தூதரகத்திலிருந்து
12 கிலோ மீட்டரிலிருக்கின்ற இலண்டன் கத்தோலிக்கப் பேராயர் இல்லத்திற்கு இச்சனிக்கிழமை
காலை 9 மணிக்குச் சென்றார். அங்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் வில்லியம் காமரூன், உதவிப்
பிரதமர் நிக் வில்லியம் பீட்டர் கிளக், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஹாரியெட் ஹார்மன்
ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தார். அதன் பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் உள்ளூர்
நேரம் காலை பத்து மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார். இத்திருப்பலியில் ஆங்லிக்கன்
பேராயர் வில்லியம்ஸ், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் அவரது மனைவி ஷெரி உட்பட
பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருப்பலியில் மறையுரை, இளையோர்க்கென வாழ்த்து
என திருத்தந்தை உரைகள் வழங்கினார்.
இளம் கத்தோலிக்கர் சார்பாகப் பேசிய ஓர் இளைஞன்,
இந்தத் திருப்பயணம் ஒரு குடும்ப ஐக்கியமாகவும் மூன்றாம் மில்லெனேயப் புனிதர்களை நினைவுபடுத்துவதாகவும்
இருக்கின்றது என்று பேசினான். பேராயர் வின்சென்ட் நிக்கோல்சும் திருப்பலிக்கு முன்னர்
வரவேற்றுப் பேசினார்.
இத்திருப்பலியின் இறுதியில் மெழுகுதிரியின் அன்னை மரியா
பீடத்தில் செபித்தார் திருத்தந்தை. எல்லாரையும் ஆசீர்வதித்து இலண்டன் திருப்பீடத் தூதரகம்
சென்றார் திருத்தந்தை.
இச்சனிக்கிழமை மாலை இலண்டன் Hyde பூங்காவில் இறையடியார்
ஜான் ஹென்றி நியுமன் திருவிழிப்பு திருவழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வது பயணத்
திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இஞ்ஞாயிறன்று பர்மிங்காமில் ஜான் ஹென்றி நியுமனுக்கு
முத்திப்பேறு பட்டமளிப்புத் திருப்பலி நடைபெறும். பிரிட்டனுக்கான இந்த நான்கு நாட்கள்
பயணத்தை முடித்து ஞாயிறு இரவு உரோம் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.