2010-09-18 16:54:49

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
நான்கு நாட்களுக்கு முன் நாளுமொரு நல்லெண்ணத்தில் செப்டம்பர் 15 அனைத்துலக மக்களாட்சி நாள் என்றும், மக்களாட்சிக்கு நல்லதொரு இலக்கணம் சொன்னவர் ஆபிரகாம் லிங்கன் என்றும் சிந்தித்தோம். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தைக் குறிப்பிட்டதும், லிங்கன் சொன்ன வேறொரு கூற்று உள்ளத்தில் பளிச்சிட்டது. சொல்லப் போனால், மனக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது. அப்படி வந்த கூற்று இதுதான்:


எல்லாரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது என்று லிங்கன் சொல்லிச் சென்றது இன்று பொய்யாகிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கும் பண சக்தியை, பணத்தைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் வாதிகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் எல்லாரும் எல்லா நேரங்களிலும் எமாற்றப்படுகிறோமோ என்ற ஆழ்ந்த கவலை மனதை அழுத்துகிறது.

அரசியலை, அரசியல் வாதிகளை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டும் போது, மற்ற விரல்கள் என்னைக் குத்திக் காட்டுவதை உணர்கிறேன். அரசியல் வாதிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அல்லது, அவர்களையும் மிஞ்சிவிடும் அளவு நாம் வாழும் இந்த சமுதாயம் ஏமாற்றி வருகிறது. பாலில் நீரைக் கலந்து, அரிசியில் கல்லைக் கலந்து ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இன்று மருந்துகளில் கலப்படம் செய்யப்பட்டு மனித உயிர்கள் பலியாகியுள்ளன. பத்திரத்தாள் மோசடி, சீட்டுக் கம்பெனிகள், அயல் நாட்டு வேலைகள், அசலைப் போல போலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், கள்ள நோட்டுகளை அச்சடித்தல், திருமண சந்தைகள் என்று எமாற்றுவது ஒரு முழு நேர வியாபாரமாகி விட்டது.

ஒவ்வொரு ஏமாற்றுச் செய்தியும் வெளி வரும் போது, பின்னது முன்னதை விஞ்சும் அளவுக்கு திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. திட்டமிட்டு ஏமாற்றுவதை ஆமோஸ் இறைவாக்கினர் இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகத்தில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்:
ஆமோஸ் 8 : 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். 
ஏமாற்றுவதை ஒரு தொழிலாக எடுத்து நடத்தி வருபவர்களைக் கண்டு வேதனை, கோபம் இவைகள் அதிகம் எழுந்தாலும், கூடவே வியப்பும், பிரமிப்பும் மனதில் எழுகின்றன. இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்களே என்ற வியப்பு. இந்த வியப்புதான் இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு கூறிய உவமைகளிலேயே புரிந்து கொள்வதற்கு வெகு கடினமான உவமை லூக்கா நற்செய்தி 16ம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள இந்த ‘வீட்டுப் பொறுப்பாளர்’ உவமை. வழக்கமாக, இயேசுவின் உவமைகளில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நாலு பேருக்குப் பாடமாக, முன் உதாரணமாக இருப்பார்கள். இன்று இயேசு கூறும் இந்த உவமையின் நாயகன் நேர்மையற்ற, ஏமாற்றுகிற வீட்டுப் பொறுப்பாளர். இவரது ஏமாற்றும் திறன் கண்டு இயேசு வியந்து போகிறார்.
வீட்டு உரிமையாளரின் செல்வத்தைப் பாழாக்கியதால், வேலையை விட்டு நீக்கப்பட இருந்த இந்த manager, தன் வீட்டுத் தலைவரிடம் கடன் பட்டவர்களை வரவழைத்து, அவர்களைத் தப்புக் கணக்குகள் எழுதச் சொல்லி, தன் எதிர்காலத்தைப் பாது காத்துக் கொள்கிறார். கதையின் முடிவில், நேர்மையற்ற அந்தப் பொறுப்பாளர் பாராட்டுகளைப் பெறுவது நம்மை வியக்கச் செய்கிறது.

ஒளியின் மக்களையும் இந்த உலக மக்களையும் ஒப்புமைப் படுத்தி, உலக மக்களின் முன் மதியை பாராட்டுகிறார். இந்த பாராட்டுடன் இயேசு நிறுத்தவில்லை. தன் கருத்துக்களைத் தொடர்கிறார். முன் மதியுடன் சேர்த்து வைக்கும் செல்வத்தை என்ன செய்வது? இன்று இயேசு தரும் அறிவுரை இதுதான்: லூக்கா 16 : 9
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். ஏழைகள் விண்ணரசின் உரிமையாளர்கள் என்பது இயேசுவின் நம்பிக்கை. (மத்தேயு 5 : 3; லூக்கா 6 : 20அ) எனவே, அழிந்து போகும் செல்வங்களைக் கொண்டு இந்த ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வது முன் மதியுடன் நடந்து கொள்ளும் ஒரு செயல். அப்படி செய்து கொண்டால், விண்ணரசில் நமக்கும் இடம் கிடைக்கும் என்று தெளிவு படுத்துகிறார் இயேசு. ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.







All the contents on this site are copyrighted ©.