2010-09-18 16:27:20

இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் திருத்தந்தையின் உரை.


செப். 18, 2010. இவ்வேளையில் நான், கடந்த பல நூற்றாண்டுகளில் பிரித்தானியத் தலைமுறைகளை நன்முறையில் உருவாக்குவதில் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கிலிருந்து சேவையாற்றிய எண்ணற்ற மனிதர்களை நினைவு கூர்கிறேன். இறைவனுக்கே என் முதல் சேவை என்ற உறுதிப்பாட்டுடன் மன்னரின் கட்டளைகளை நிறைவேற்ற மறுத்த ஆங்கில அறிஞரும் உயர் குடிமகனுமாகிய புனித தாமஸ் மூர் குறித்து சிறப்பான விதத்தில் இங்கு நினைவு கூர்கிறேன். இன்றையச் சமூகச் சூழல்கள் எவ்வளவோ மாறி வந்தாலும், புனித தாமஸ் மூர் கொலைத் தீர்ப்பிடப்பட்டதுத் தொடர்புடையக் கேள்விகள் இன்னும் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றன. எத்தகைய எதிர்பார்ப்புகளை ஓர் அரசு தன் குடிமக்கள் மீது புகுத்த முடியும்? அது எவ்வளவு தூரம் செல்ல முடியும்? ஒழுக்க ரீதிச் சார்ந்த முறையீடுகளுக்கு இறுதி அதிகாரம் படைத்தவர் யார்? இக்கேள்விகள் கேட்கப்படவேண்டியுள்ளன.

சமூக மற்றும் ஒழுக்கரீதிப் பிரச்சனைகளுக்குக் குறுகிய கண்ணோட்டத்தில் அல்லது குறுகியக் காலத்தீர்வு கண்டதன் விளைவை அண்மைக் கால நிதி நெருக்கடிப் பிரச்னைகளில் காண முடிகிறது. இக்காலத்திற்கான மையக்கேள்வி என்னவெனில், அரசியல் நிலைகளுக்கான ஒழுக்கரீதி அடிப்படையை நாம் எங்கே கண்டு கொள்வது என்பதாகும். இறை வெளிப்பாடுகளில் இதனை கண்டுகொள்ளலாம் என்பது கத்தோலிக்கப் பாரம்பரியம் உறுதிப்படுத்திவரும் ஒன்று. அரசியல் விவாதங்களில் விதிகளை வழங்குவது மதத்தின் பங்கு அல்ல, மாறாக ஒழுக்கரீதி விதிகளை கண்டுகொள்வதற்கான பகுத்தறிவு வாதங்களில் ஒளியேற்றுவது மற்றும் அதனை புனிதப்படுத்துவதில் உதவுவதேயாகும். மதத்தின் இப்பங்களிப்பு பல வேளைகளில் வரவேற்கப்படுவதில்லை, ஏனெனில் மதத்திலேயே காணப்படும் பிரிவினை மற்றும் அடிப்படை வாதங்களே தீவிர சமூகப் பிரச்னைகளுக்குக் காரணமாக நோக்கப்படுகின்றன. அதேவேளை, மதமானது தேசிய அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு உயிர்துடிப்பான பங்களிப்பதாக உள்ளது. இத்தகைய ஒரு சூழலில், மதம் என்பது சில சமூகங்களில் ஓரங்கட்டப்படுவது மற்றும் மௌனமாக்கப்படுவது குறித்தும் நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அதே வேளை, அமைதிக்கானப் பணி, சர்வதேச ஆயுத வணிக ஒப்பந்தம், மனித உரிமைகள், ஜனநாயக ஊக்குவிப்பு, வளர்ச்சி, கடன் அகற்றல், நீதியான வியாபாரம், சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு, எழைகளுடன் ஒருமைப்பாடு, உணவு உற்பத்தி, சுத்தக்குடிநீர், வேலை வாய்ப்புகள், கல்வி, குடும்பங்களுக்கு/குடியேற்றதாரர்களுக்கு உதவி, அடிப்படை நல ஆதரவு ஆகியவைகளில் திருச்சபை பல்வேறு அரசுகளுடன் ஒத்துழைத்துச் செயலாற்றி வருவதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.