2010-09-17 16:42:10

ஆஸ்திரேலியா மேலும் வன்முறை மிகுந்த ஒரு சமூகமாக மாறிவருகிறது என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.


செப். 17, 2010. பழங்குடியினர், வீடற்றோர் மற்றும் குடியேற்றதாரர்களின் உரிமைகளை மீறுவதன் மூலம் ஆஸ்திரேலியா மேலும் வன்முறை மிகுந்த ஒரு சமூகமாக மாறிவருகிறது எனக் கவலையை வெளியிட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.

அநீதி மற்றும் போரின் காரணமாக ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி வரும் மக்களின் மாண்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மனிதாபிமானமற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் ஆஸ்திரேலிய சமூகத் தொடர்புத்துறையும் இவ்வன்முறை நிலைகளுக்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளன என்றனர் ஆயர்கள்.

இம்மாதம் 26ந்தேதி சிறப்பிக்கப்பட உள்ள சமூக நீதி ஞாயிறுக்கென அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள ஆயர்கள், ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் உடல்ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது மற்றும் அச்சுறுத்தப்படுவது குறித்தும் தங்கள் கவலையை அதில் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர்கள் மற்றும் சூடான் குடியேற்றதாரர்களுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்தும் வன்மையாகக் கண்டித்துள்ள ஆயர்கள், 1997க்கும் 2007க்கும் இடைப்பட்டக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் வன்முறைகள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.