2010-09-16 15:40:29

பஞ்சாப் மாநிலத்தில் தாக்கப்பட்ட கோவில் ஒன்றை புதுப்பிக்கும் பணியில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்


செப்டம்பர் 16, 2010 கடந்த ஞாயிறன்று பஞ்சாப் மாநிலத்தில் தாக்கப்பட்ட கோவில் ஒன்றை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குரான் எரிக்கப்பட்டதாக எழுந்த ஒரு வதந்தியால், பஞ்சாப் மாநிலத்தில் மலெர்கோட்லா (Malerkotla) என்ற இடத்தில் வட இந்திய கிறிஸ்தவ சபையின் கோவில் ஒன்று கடந்த ஞாயிறன்று தாக்கப்பட்டது.
அக்கோவிலில் இச்செவ்வாயன்று இஸ்லாமியர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு செப வழிபாட்டை கத்தோலிக்க குரு மரிய செல்வதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தச் செபவழிப்பாட்டிற்கு பின், அந்தப் பகுதி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து அக்கோவிலுக்குத் தேவையான கதவுகள், மின் விசிறிகள் இருக்கைகள் என அனைத்தையும் அளித்ததோடு, அக்கோவிலை மீண்டும் வெள்ளை அடித்துப் புதுப்பிக்க உதவிகள் செய்தனர் என்று ஜலந்தர் மறைமாவட்டத்தின் சார்பில் பேசிய அருள்தந்தை பீட்டர் காவும்புரம் (Peter Kavumpuram) கூறினார்.1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினை நேரத்தில் பல இடங்களில் கலவரங்கள் வெடித்த போதும், மலெர்கோட்லாவில் எந்த ஒரு இஸ்லாமியரும் தாக்கப்படவில்லை என்ற வரலாறு படைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.