2010-09-16 16:18:14

திருத்தந்தையின் 17 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – பிரிட்டனுக்கான முதல் திருபப்யணம்


செப்.16,2010. இதயம் இதயத்தோடு பேசுகிறது. பிரிட்டன் இதயங்களோடு பேசுவதற்காக இவ்வியாழன் உரோம் நேரம் காலை 8.25 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா A320 விமானத்தில் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவரோடு சுமார் முப்பது வத்திக்கான் மூத்த அதிகாரிகளும் பல நிருபர்களும் பயணம் செய்தனர். இந்தப் பயணம் கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு திருத்தந்தை பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் முதல் மேய்ப்புப்பணித் திருப்பயணமாக அமைகின்றது. இதற்கு முன்னர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1982ல் பிரிட்டன் சென்றுள்ளார். வத்திக்கான் மற்றும் பிரிட்டன் நாடுகளின் கொடிகளுடன் புறப்பட்ட விமானம் ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க் சர்வதேச விமான நிலையத்தை அடைந்த போது உள்ளூர் நேரம் சரியாக காலை 10 மணி 30 நிமிடங்களாகும். அப்போது இந்திய நேரம் வியாழன் மாலை 3 மணியாகும். விமானத்தை விட்டு இறங்கிய திருத்தந்தையைப், பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் எடின்பர்க்கின் பிரபுவுமான பிலிப் உட்பட சில அரசு மற்றும் திருச்சபை அதிகாரிகள் வரவேற்றனர். பின் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை சென்றார். அங்கு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் மற்றும் பலர் அவரை வரவேற்றனர். பிரிட்டன் அரசியின் அழைப்பின் பேரில் இத்திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தைக்கு அங்கு அதிகாரப்பூர்வ வரவேற்புகள் நடை பெற்றன.

ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையானது ஸ்காட்லாண்டில் அரசியின் அதிகாரப்பூர்வ தங்குமிடமாகும். பிரிட்டன் மற்றும் வடஅயர்லாந்தின் தலைவியாக இருக்கும் இவர், காமன்வெல்த் அமைப்பிற்கும் தலைவியாவார். 53 காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் 16 நாடுகளுக்கும் இவர்தான் தலைவியாவார். ஆண்டிற்கு ஒருமுறை கோடை காலத்தில் இந்த அரண்மனைக்கு வரும் அரசி பல அதிகாரப்பூர்வச் சந்திப்புக்களையும் இங்கு நடத்துவது வழக்கமாக இருக்கிறது. Rothesay பிரபுவான இளவரசர் சார்லசும் இங்கு கோடையில் ஒரு வாரம் தங்குவது வழக்கும். இந்த ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை ஸ்காட்லாண்ட் கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1128ம் ஆண்டு மன்னர் முதலாம் டேவிட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த ஹோலிரூட்ஹவுஸ் துறவுமடம், நான்கு நூற்றாண்டுகளாக அகுஸ்தீனியன் சபைத் துறவிகளின் இல்லமாக இருந்து வந்தது. தாக்கும் கலைமானின் கொம்புகளுக்கு இடையில் rood அதாவது சிலுவையைக் காட்சியில் இந்த மன்னர் கண்டதாகவும், அதனை ஓர் அடையாளமாக எடுத்துக் கொண்ட மன்னர், அவ்ர் நிறுவிய புதிய துறவு சபைக்கு Holy Rood அதாவது திருச்சிலுவை என்று பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் இந்தத் துறவு மடத்துக்கு அருகில் ஸ்காட்லாண்ட் அரச குடும்பத்திற்கென விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பின்னர் 1501ம் ஆண்டில் இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. இத்துறவுமடம், 1544க்கும் 1547க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயப் படைகளால் முற்றுகையிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இவ்விடம் அரச மாளிகையாக முற்றிலும் மாற்றப்பட்டது.

இந்த ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் திருத்தந்தைக்கு முதலில் ஓர் அரசுத்தலைவருக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் அளிக்கப்பட்டன. பின்னர் திருத்தந்தையும் அரசியும் தனியாகச் சந்தித்துப் பேசினர். பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

RealAudioMP3 திருத்தந்தையின் இத்திருப்பயணம், கத்தோலிக்கத்திற்கும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாண்ட் திருச்சபைகளுக்கும் இடையேயான உறவை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகின்றது என்ற அரசி, உலகில் கடும் வறுமையில் வாடுவோருக்கும் நலிந்தோருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் சிறப்புப் பணிகளைப் பாராட்டினார்.

அடுத்து திருத்தந்தையும் பிரிட்டனுக்கானத் தனது முதல் உரையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி முடிவுற்றதும் அரசி எலிசபெத் திருத்தந்தைக்கு அவ்வரண்மனையைச் சுற்றிக் காட்டினார். பின்னர் அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டரில் இருக்கின்ற எடின்பர்க் பேராயர் இல்லத்திற்குக் குண்டு துளைக்காதத் திறந்த காரில் புறப்பட்டார் திருத்தந்தை. இத்திருப்பயணத்தின் போது எதிர்ப்புகள் இருக்கும் என்று பேசப்பட்ட நிலையில் எடின்பர்க் நகரில் திருத்தந்தையின் கார் சென்றவிடமெல்லாம் சாலைகளின் இருபக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நின்று அவரை வாழ்த்தியதைக் காண முடிந்தது. ஸ்காட்லாண்ட் பாரம்பரிய இசைக்கருவியானா பேக்பைப்பரின் சப்தத்தையும் மக்களின் ஆரவாரக் கைதட்டல்களையும் தொடர்ந்து கேட்க முடிந்தது. 46 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இலட்சம் மக்களைக் காண முடிந்ததாக எடின்பர்க் காவல்துறை கூறியுள்ளது

Presbyterian கிறிஸ்தவச் சபையினரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஸ்காட்லாண்டில் 13 விழுக்காட்டினரே அதாவது 6,67,000 பேரே கத்தோலிக்கர். இந்தச் சபையைத் தொடங்கிய John Knox என்பவர் பிறந்த இடமும் இதற்கு வெகு தூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க மற்றும் நவீனத் தொழிற்நுட்ப அமைப்புகளையும் கொண்ட அழகுமிக்க நகரம் எடின்பர்க். இந்த நகரின் மத்திய கால நகரமும் ஜார்ஜியன் புதிய நகரமும் உலகின் பாரம்பரிய சொத்துக்கள் என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எடின்பர்க், உலகின் முதல் யுனெஸ்கோ இலக்கிய நகரம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. இவ்வியாழனன்று எடின்பர்க் நகரின் Princes சாலை வழியாக புனித Ninian நாள் ஊர்வலமும் நடைபெற்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரிட்டனுக்கு வரும் வரலாற்றுத் தன்மை வாய்ந்த திருப்பயணத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வூர்வலத்தினர் ஏந்திச் சென்ற நீல நிறக் கொடிகளில் புனித ஆண்ட்ரூவின் சிலுவை வெண்மை நிறத்தில் பதியப்பட்டிருந்தது. இதில் பள்ளிச் சிறார் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்தப் புனிதர் ஸ்காட்லாண்டில் எல்லாக் கிறிஸ்தவச் சபையினருக்கும் பொதுவானவர். இவ்வூர்வலத்தில் முழங்கிய பேக்பைப் இசைஅப்பகுதியின் 1600 ஆண்டு கிறிஸ்தவ வரலாற்றோடு தொடர்புடையது. மதிய உணவுக்கு முன்னர் இதில் கலந்து கொண்ட சிறாரையும் மற்றவரையும் சந்தித்து மகிழ்ச்சிப்படுத்தினார் திருத்தந்தை. பின்னர் இந்நகரின் புனித ஆண்ட்ரூஸ் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை.

மாலையில் கிளாஸ்கோ பெல்லாஹவுஸ்டன் பூங்கா சென்று திருப்பலி நிகழ்த்துவது இவ்வியாழன் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் விமானப் பயணத்தின் போது சுமார் எழுபது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளையும் கேட்டார்கள். அப்போது திருத்தந்தை, திருச்சபையில் குருக்களால் செய்யப்படும் தவறானப் பாலின நடவடிக்கைகளுக்குத் திருச்சபை தவம் செய்ய வேண்டும் என்றார். இத்தனை ஆண்டுகள் நல்ல மேய்ப்பர்களாகச் செயல்பட பயிற்சி பெறும் இவர்கள் எவ்வாறு இந்தத் தவறுகளைச் செய்ய இயலும் என்ற கேள்வியையும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். மேலும், இப்பயணத்தையொட்டிய எதிர்ப்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொன்ன அவர், இவை குறித்துத் தான் பயப்படவில்லை. கத்தோலிக்கத்துக்கு எதிரான மாபெரும் எதிர்ப்புத் தன்மையும் மாபெரும் சகிப்புத்தன்மையும் நிறைந்த வரலாற்றைக் கொண்ட நாடு பிரிட்டன். பிரான்ஸ், செக் குடியரசு போன்ற நாடுகளுக்கானத் திருப்பயணத்தின் போதும் இவ்வாறு எதிர்ப்புக்களை எதிர் கொண்டேன். ஆனால் அப்பயணங்களின் போது இனிதான வரவேற்பைப் பெற்றேன் என்றார்.

அன்பர்களே, பிரிட்டனில் பல கத்தோலிக்கர் எதிர்பார்ப்பது போல திருத்தந்தையின் இப்பயணம் அம்மக்கள் விசுவாசத்தில் மேலும் ஆழப்பட உதவும் என நம்புவோம்.








All the contents on this site are copyrighted ©.