2010-09-16 15:40:47

காஷ்மீர் செல்கிறது அனைத்துக் கட்சிக்குழு


செப்டம்பர் 16, 2010 இதற்கிடையே, இந்தியாவின் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதிக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவேடுத்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சகமும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி குழுவினர் காஷ்மீர் பகுதிகளைப் பார்வையிடுவதற்கான தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதி வருகின்றனர். இந்த மோதல்கள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் எண்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பதட்ட நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இடது சாரிகள் கட்சி மற்றும் காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் எதிர்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகள் பங்கு பெற்றன. அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் மற்ற தலைவர்களும் வேதனையும் கவலையும் வெளியிட்டனர்.







All the contents on this site are copyrighted ©.