2010-09-16 15:39:57

காஷ்மீரில் தீவைத்து அழிக்கப்பட்ட கிறிஸ்தவப் பள்ளியில் படித்து வந்த அனைவருமே இஸ்லாமிய மாணவர்களே - தலைமை ஆசிரியர்


செப்டம்பர் 16, 2010 காஷ்மீரில் நான்கு நாட்களுக்கு முன் தீவைத்து அழிக்கப்பட்ட கிறிஸ்தவப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் அனைவருமே இஸ்லாமிய மாணவர்களே என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார்.
ஆங்கலிக்கன் சபையைச் சேர்ந்தவரும், தலைமை ஆசிரியருமான Pravez Samuel Kaul ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறி, தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
குரான் எரிக்கப்படும் என்று வெளியான செய்திகளின் பேரில், தீவைத்து எரிக்கப்பட்ட இப்பள்ளியின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்குரானின் பல பதிப்புகளும் எரிந்து விட்டன என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
ஸ்ரீநகரின் Tanmarg பகுதியில் வட இந்திய கிறிஸ்தவ சபையினரால் நடத்தப்படும் இப்பள்ளி, அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு கடந்த 150 ஆண்டுகள் பணிபரிந்து வந்துள்ளதேனவும், தலைமை ஆசிரியரான Samuel அப்பள்ளியில் 26 ஆண்டுகள் பணி புரிந்து வருகிறார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மூன்றடுடுக்கு கொண்ட இப்பள்ளியின் கட்டிடம் பெரும்பாலும் மரப் பலகைகளால் ஆன கட்டிடம் என்பதால், ஞாயிறு இரவு நடந்த இச்சம்பவத்தில் முழுவதும் எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகிகள் பள்ளியைப் பாதுகாக்க வேண்டுமென்று காவல்துறைக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு காவல் துறையினர் உடனடியாகச் செயல் பட்டிருந்தால், இந்த அழிவை ஓரளவாகிலும் தடுத்திருக்க முடியும் என்று தலைமை ஆசிரியர் வலியுறுத்தினார்.இப்பள்ளியின் அழிவினால் மிக அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது இஸ்லாமிய மாணவர்களும் அவர்களது குடும்பங்களுமே என்று தலைமை ஆசிரியர் சாமுவேல் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.