2010-09-15 15:11:57

கர்தினால் நியூமன் தொடர்பான இரண்டாவது புதுமை குறித்து விசாரணைகள்


செப்டம்பர் 15, 2010 உருக்குலைந்து பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு குழந்தை, முழுமையாக, குறையின்றி பிறந்ததற்கு, கர்தினால் நியூமனிடம் எழுப்பிய வேண்டுதல்களே காரணம் என்று அக்குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
கர்தினால் நியூமனை வருகிற ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முத்திபேறு பெற்றவராக உயர்த்தவுள்ளார். அமெரிக்காவில் தியாக்கோன் பணிபுரியும் Jack Sullivan என்பவரின் தண்டுவடத்தில் ஏற்பட்ட குறை, 2001ம் ஆண்டு குணமானதை ஒரு புதுமை என்று திருச்சபை ஏற்றுக் கொண்டதால், கர்தினால் நியூமன் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படுகிறார்.
கர்தினால் நியூமன் ஒரு புனிதர் என்று அறிவிக்கப்பட இன்னும் ஒரு புதுமை தேவைப்படுகிறது என்று திருச்சபை கருதி வரும் இவ்வேளையில், மெக்சிகோவில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இக்குழந்தை குறித்த மற்றொரு புதுமை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, வத்திக்கான் வழக்கறிஞர் Andrea Ambrosi மெக்சிகோ செல்லவிருப்பதாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி வருகிற சனிக்கிழமை ஒளிபரப்பப்படும் என்று அத்தொலைகாட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.முத்திபேறு பெற்றவர்களுக்கான சடங்குகளில் தான் கலந்து கொள்வதில்லை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வகுத்த விதிமுறைக்கு ஒரு விதிவிலக்காக, திருத்தந்தை வருகிற ஞாயிறன்று கர்தினால் நியூமன் முத்திபேறுபெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.