2010-09-15 15:10:00

கத்தோலிக்கர்கள் இந்து மதத்திற்கு வலுக்கட்டாயமாக மனமாற்றம் செய்யப்படுகின்றனர் - பேராயர் ரபேல் சீனத் முறையீடு


செப்டம்பர் 15, 2010 கத்தோலிக்கர்கள் இந்து மதத்திற்கு வலுக்கட்டாயமாக மனமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒரிசாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்துவர்கள் இந்துக்களாக மாற பலவந்தப்படுத்தப் படுகின்றனர் என்று அம்மாநில முதலமைச்சரான நவீன் பட்நாயக்கிடம் கட்டக் புபனேஸ்வர் பேராயர் ரபேல் சீனத் முறையீடு செய்துள்ளார்.
கந்தமால் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறைகளின் போது வீடுகளை விட்டு ஓடிப்போன கிறிஸ்தவர்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமெனில் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர்.
இப்பகுதியில் இன்னும் 3500 மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்றும் இம்மக்கள் இழந்துள்ள வீடுகளுக்கும் பொருள்களுக்கும் தகுந்த, முறையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளதாக பேராயர் சீனத் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்து மதத்திற்கு மாறும்படி இம்மக்கள் வற்புறுத்தப்படுவது மக்களாட்சி முறைகளுக்கும், மத சார்பற்ற அரசு கோட்பாடுகளுக்கும் முரணானவை என்று பேராயர் ரபேல் சீனத் மேலும் கூறினார்.கிறிஸ்தவர்களுக்கு எதிரான இவ்வன்முறைக் குற்றங்களில் ஒரு சிலரே இது வரை தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும், வன்முறைகளில் ஈடுபட்ட பெரும்பாலானோர் இன்னும் தண்டனை எதுவும் பெறாமல் சுதந்திரமாய் இருக்கின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.