2010-09-14 16:23:14

விவிலியத் தேடல்


RealAudioMP3
1499ம் ஆண்டு. 23 வயது இளைஞன் சிலை ஒன்றை வடித்துக் கொண்டிருந்தார். முழு ஈடுபாட்டுடன், கவனத்துடன் அவர் வடித்த அந்தச் சிலை கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற ஒரு சிலையாக உள்ளது. அந்த இளைஞன்... மிக்கேலாஞ்சலோ. அந்தச் சிலை "Pieta" என்ற மரியன்னையின் சிலை. மிக்கேலாஞ்சலோ வடித்த பல சிலைகளிலும் மிக அதிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், முழுமையாக உருவாக்கப்பட்ட சிலை Pieta என்று சொல்லப்படுகிறது.
இறந்து போன இயேசுவை மடியில் தாங்கி நிற்கும் தாய் மரியாவின் உருவம் அது. சிலுவையில் வீரனாய் இறந்த தன் மகனை மடியில் கிடத்திப் பெருமைப்படும் தாயை அங்கு காணலாம். இந்த உலகத்தால் பலவாறாக அலைகழிக்கப்பட்டு, அலங்கோலமாகிப் போன தன் மகனுக்கு ஓய்வை, ஆறுதலை, இளைப்பாறுதலைத் தரும் வகையில் மடியில் மகனைத் தாங்கியிருக்கும் தாயை அங்கு காணலாம். அன்பு, வேதனை, அமைதி, உறுதி என்று பல உணர்வுகளை அந்தத் தாயின் முகத்தில் காணலாம். கிறிஸ்தவம், விவிலியம் இவைகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் மனதிலும் இந்தத் தாயின் உருவம் ஒரு மரியாதையை, பக்தியை உருவாக்கும். இந்தத் தாயின் உருவத்தை நான் பார்க்கும் போதெல்லாம், சில கேள்விகள் என்னுள் எழும்.
இறந்து போன, அதுவும் இவ்வளவு அநியாயமாக, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும்? ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று இந்த அன்னையின் உருவைப் பார்க்கும் போது என் மனதில் கேள்விகள் எழுகின்றன.
இந்தக் காட்சி உண்மையில் நிகழ்ந்ததா? என்ற வேறொரு கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசும் நான்கு நற்செய்திகளிலும் அன்னை மரியா சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார் என்பதை யோவான் நற்செய்தி மட்டும் ஒரே ஒரு முறை கூறுகிறது. (யோவான் 19 : 25-27) மரியாவைப் பற்றி அதிகம் கூறும் லூக்கா நற்செய்தியில் கூட, இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும் வழியில் எருசலேம் மகளிரைச் சந்தித்ததாகவும், அவரது மரணத்தை, பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். (லூக்கா 23 : 27-31, 49) ஆனால், மரியாவைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. தூரமாய் இருந்து பார்த்த பெண்கள் என்று லூக்கா கூறியிருப்பதிலிருந்து பெண்கள் கல்வாரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இயேசுவின் தாய்க்கும் அந்த அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இயேசு சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு, புதைக்கப்பட்ட போதும் பெண்கள் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை.

எனவே, இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவமாய் Pieta அமைந்துள்ளது.

Pieta திரு உருவைப் பற்றி இன்று நான் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று... இன்று செப்டம்பர் 15 - வியாகுல அன்னை என்று நாம் வழங்கும் துயருறும் அன்னை மரியாவின் திருநாள். அன்னை மரியாவின் துயரங்களாய் பாரம்பரியம் கொண்டாடும் ஏழு துயர நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் கல்வாரியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் விவிலிய ஆதாரங்கள் தெளிவாக இல்லை. இருந்தாலும், ஒரு தாய் என்ற முறையில் அன்னை மரியா கட்டாயம் இந்தத் துயரங்களை அனுபவித்திருப்பார் என்று கிறிஸ்தவ பாரம்பரியம் நம்புகிறது. அந்தத் துயரங்களை நினைவு கூறும் நாள் செப்டம்பர் 15.

இரண்டாவது காரணம்... நாம் கடந்த சில வாரங்கள் விவிலியத் தேடலில் சிந்தித்து வரும் திருப்பாடல் 23உடன் Pieta உருவைத் தொடர்பு படுத்தி நம் சிந்தனைகளை எழுப்பலாம். Harold Kushner எழுதிய "ஆண்டவர் என் ஆயன்" என்ற புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளேன். அன்னை மரியா தன் மகனைத் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று கூறும் Kushner, தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல... மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைமையை பெண்மை, தாய்மை வடிவங்களில் பார்ப்பது நமது இந்திய, ஆசிய ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.

மிக்கேலாஞ்சலோ வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது 50 இருந்திருக்கும். ஆனால், Pieta வில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.
நன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், Pieta வில் உள்ள பெண் அதையும் சாதித்திருக்கிறார்.இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ செதுக்கியுள்ளார். இது இரண்டாவது அம்சம்.

இந்த இரு அம்சங்களும், Pieta வில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள்... Pieta வில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு அமர்ந்திருப்பது தாய்மை உருவில் இறைவன் என்று பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கவும் முடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்... நன்கு வளர்ந்துள்ள தன் மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் இறைவன் என்பதையும் உணரலாம்.

Pieta வில் காணப்படும் மற்றொரு அம்சத்தை நான் தாய்மை உருவில் அமர்ந்திருக்கும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறேன். Pieta வில் உள்ள பெண்ணின் வலது கரம் மகனைத் தாங்கியிருக்கும் போது, இடது கரம் நம்மை நோக்கி நீட்டப்பட்டிருப்பது போல், அல்லது தன் மடியில் இருப்பவரைப் பாருங்கள் என்று உலகிற்குச் சொல்வது போல் இருக்கும்... தன் ஒரே திருமகனை அளிக்கும் அளவுக்கு (யோவான் 3 : 16) இந்த உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைவன், தான் அனுப்பிய மகனை இந்த உலகம் என்ன செய்துள்ளது என்பதை மீண்டும் நமக்குக் காட்டுவது போல் இதை எண்ணிப் பார்க்கலாம்.
உயிர்களை உருவாக்குவது தாய்மை, பேணி வளர்ப்பதும் தாய்மை, அந்த உயிர்கள் சிதைந்து, அழிந்து போகும் போது, உடைந்து போவதும் தாய்மை. இந்தத் தாய்மையின் முழு இலக்கணமாக Pieta உருவத்தை உலகம் கண்டு பயனடைந்து வருகிறது. தாயாக இருக்கும் இறைவனை எண்ணிப் பார்க்கவும் இந்த உருவம் நமக்கு உதவுகிறது.
Pieta உருவத்தின் மற்றொரு அழகு... இயேசுவின் முகம். மரணமடைந்தவர் முகங்கள் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. அதுவும், மிகக் கொடிய, சொல்லொண்ணாத் துயரங்கள் பட்டு இறப்பவர் முகங்களில் அமைதி அதிகம் இருக்காது. மாறாக, Pieta வில் இயேசுவின் முகம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும். தாய் அல்லது தந்தையின் அரவணைப்பில் உலகையே மறந்து உறங்கும் சிறு குழந்தையைப் போல் இயேசுவின் முகம் ஆழ்ந்த, முழுமையான அமைதியில் இருக்கும்.
சென்ற வாரம் விவிலியத் தேடலில் தன் ஆடுகள் பயம் ஏதுமின்றி பசும் புல் வெளியில் படுத்துறங்குவதற்கு, அமைதியானச் சூழலை ஆயன் உருவாக்கித் தர வேண்டும், அப்படி செய்வதற்கு ஆயன் தனிப்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் என்பவைகளைச் சிந்தித்தோம். Pieta உருவைப் பார்க்கும் போது, இதே எண்ணம் மீண்டும் மனதில் எழுகிறது. ஆழ்ந்த அமைதியில் படுத்துறங்கும் வகையில் இயேசுவைத் தாங்கி அமர்ந்திருக்கும் அந்தத் தாய் ஆழ்ந்ததோர் அமைதியை உருவாக்கும் திறமை பெற்ற நமது ஆயனை மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

இறுதியாக, கல்லில் சிலை வடிப்பது குறித்து ஒரு சிந்தனை...
எந்த ஒரு சிலையையும் வடிக்கத் தகுதியற்றதென பல கலைஞர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பளிங்குக் கல்லிலிருந்து தாவீது என்ற உலகப் புகழ் பெற்ற சிலையை மிக்கேலாஞ்சலோ வடித்தார் என்பது வரலாறு. அவர் தாவீதை வடித்து முடித்ததும், "அந்தப் பளிங்குக் கல்லில் ஒரு வானதூதர் சிறைப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அவரை நான் விடுவித்தேன்." என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.
நாம் இன்று பிரமிப்புடன், மரியாதையுடன், பக்தியுடன் காணும் இந்த Pieta உருவமும் ஒரு பளிங்குக் கல்லில் சிறைபட்டிருந்த உருவம் தான். அந்தப் பளிங்குக் கல்லை அதற்கு முன் பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், மற்றவர்கள் அதை வெறும் கல்லாகக் கண்டனர்... மிக்கேலாஞ்சலோ அந்த பளிங்குக் கல்லை முதலில் பார்த்தபோது அதனுள் ஒரு தாய் தன் மடியில் மகனைச் சுமந்திருந்த உருவைப் பார்த்திருப்பார். அந்தக் கல்லுக்குள் சிறைபட்டிருந்த அந்த உருவங்களை உலகறியக் காட்டினார்.
ஆயனாம் இறைவனும் இது போன்ற அற்புதங்களை உருவாக்கும் திறமை கொண்டவர். கடந்த சில வாரங்கள் நாம் கற்பனையில் கண்ட நீண்ட, பரந்த புல்வெளிகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் அதிகம் இல்லை. பல இடங்கள் பாலைவனமாய், பாறைகளாய் இருக்கும் ஒரு பூமி அது. அந்த வறண்டப் பகுதிகளிலும் இறைவன் வழி நடத்தும் போது, பசும்புல் வெளிகள் நீண்டு விரியும்.பளிங்குப் பாறைகளாய் இறுகிப் போன மனங்களில் சிறைபட்டிருக்கும் நம்மை அற்புதக் கலைஞனாம் இறைவன் வெளிக் கொணரவும், அமைதியின்றி அலையும் உள்ளங்களுக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் ஆயனாம் இறைவன் வழங்கவும் நம்மைத் தொடர்ந்து பசும்புல் வெளியில் நடத்திச் செல்வாராக.







All the contents on this site are copyrighted ©.