2010-09-13 16:27:26

பெண் குழந்தைகள் குறித்த எதிர்மறை உணர்வுகளை மாற்ற கத்தோலிக்க குரு ஒருவரின் முயற்சி


செப்.13, 2010. பெண் குழந்தைகள் குறித்த எதிர்மறை உணர்வுகளை மாற்ற வேண்டி கத்தோலிக்க குரு ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7ம் தேதி குஜராத்தில் நரோத்தம் தேவிபுசக் (Narottam Devipujak) என்பவர் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், ஆட்டுக் கிடா ஒன்றை பலியிடுவதாகவும், பெண் குழந்தை பிறந்தால், பெண் குழந்தையையே பலி இடுவதாகவும் இறைவனுக்கு உறுதிமொழி அளித்ததாகவும், பெண் குழந்தை பிறந்ததால் அந்தக் குழந்தையைச் சாக்கடையில் எறிந்தார் என்றும் இதனால், அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

குஜராத்தின் வணிக நகரமான அகமதாபாத்தில் உள்ள இயேசு சபை குரு செட்ரிக் பிரகாஷ் இது குறித்துப் பேசுகையில், "இந்தச் சம்பவம் அரிதான ஒரு சம்பவம் அல்ல, மாறாக, இதுபோல் குஜராத்தில் அடிக்கடி நடக்கிறது, ஆனால் இவை வெளிச்சத்திற்கு வருவதில்லை" என்று கூறினார்.

தந்தை இறந்ததும் இறுதிச் சடங்குகளை நடத்த ஒரு மகன் வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதால், ஆண் குழந்தைகள் பிறப்பதையே அதிகம் விரும்பும் இந்திய சமுதாயம், இன்னும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று அருள்தந்தை பிரகாஷ் கூறினார்.

பெண் குழந்தைகளைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் செப்டம்பர் 8, அன்னை மரியா பிறந்த நாளை பெண் குழந்தைகள் நாளாக இந்தியத் திருச்சபை கொண்டாடி வருவதையும் அருள்தந்தை பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.