2010-09-13 14:26:18

நம்பிக்கைதான் வாழ்க்கை


செப்.13,2010. அது இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் 4ம் தேதி மாலை. பரபரப்பான சென்னை மாநகரில் காலையில் வேலைக்குச் சென்றவர்களும் பள்ளிக்குச் சென்ற மாணவர்களும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் ஜனார்த்தனன் என்ற எட்டு வயது சுட்டிப் பையனும் வீடு திரும்பினான். மற்ற பிள்ளைகள் செய்வது போலவே இவனும் வந்த வேகத்தில் புத்தகப் பையை வீட்டின் ஒரு மூலையில் வைத்தான். காலணிகளைக் கழற்றினான். தேனீர் குடித்தான். பின்னர் நண்பர்களுடன் மொட்டை மாடிக்கு விளையாடச் சென்றான். அங்குதான் ஏழு அடி நீள இரும்புக் கம்பி வடிவத்தில் விதி அவனோடு விளையாடியது. அந்தக் கம்பியை இரசித்த ஜனார்த்தனன் அதை எடுத்து பெரிய ஹீரோ போல் சுழற்றினான். அந்தக் கம்பி அடுத்த வீட்டு மொட்டை மாடிக்குச் சென்ற மின்சார லைனில் தொட மின் அதிர்வுகள் சிறுவனின் உடலில் பாய்ந்தன. உடனே அருகிலிருந்த transformer பெரிய சப்தத்துடன் வெடிக்க அவ்விடம் நெருப்பு மயமானது. தீ சிறுவனின் பாதி உடலைச் சாப்பிட்டு விட்டது. உடனடியாகப் பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஒரு வாரத்திற்குள்ளாக சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவானது. சிறார் மருத்துவ நிபுணர் சீனிராஜூ தலைமையில் 13 மருத்துவ வல்லுனர்கள் சேர்ந்து சிகிச்சை அளித்தனர். ஒன்றும் பயனில்லை. தீயில் கருகிய அவனது உடல் பாகங்களை அகற்ற வேண்டியதாகியது. அவனது வலதுகை தோள்பட்டை வரையிலும், இடதுகை முழங்கை வரையிலும், இடதுகால் முழங்கால் வரையிலும், இடது காலிலிருந்து விரல்களும் என உறுப்புகள் அகற்றப்பட்டன. ஆயினும் மருத்துவர் சீனிராஜூ, வாயால் எழுதவும் தொடர்ந்து படிக்கவும் அவனுக்கு ஊக்கமூட்டி வந்தார்.

ஜனாவுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு அவனது தந்தை சுமார் நான்கு இலட்சம் ரூபாய்க்கு அவரது அச்சு பதிப்பகத்தையே விற்று விட்டார். பெற்றோர் அனுபவித்த வேதனைகளைப் பார்த்த அவன் தனக்குச் செயற்கைக் கால்கள் பொறுத்தப்பட்ட போது ஏற்பட்ட வேதனைகளைத் தாங்கிக் கொண்டான். ஒருநாள் அவனின் தாய் ஒரு நோட்டின் கடைசிப் பக்கத்தில் ஒரு மலரை வைப்பதைப் பார்த்தான். ஏன் அந்த மலரை நான் ஓவியமாகத் தீட்டக் கூடாது என்று சிந்தித்தான். அந்த முயற்சியில் முதலடி எடுத்து வைத்தான். ஜனா மேலும் சொல்கிறான் –

நான் வாயால் எழுதத் தொடங்கிய போது வாயைத் திறக்கவே கஷ்டமாக இருந்தது. வாய் இறுக்கமாக இருக்கும். ஆயினும் முழு நம்பிக்கையோடு கடினமாக உழைத்தேன். வெகு நேரம் தொடர்ந்து எழுதினேன். சில நாட்களில் இரவில் வெகு நேரம் கண்விழித்து எழுதப் பழகினேன். தொடக்கத்தில் எனது பள்ளி நண்பர்கள் உட்பட எல்லாருமே என்னை ஒதுக்கினர். ஆனால் இப்பொழுது அவர்கள் எனது நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் உதவி செய்கிறார்கள்.

வாயால் அரசுத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றுள்ள ஜனா, மாற்றுத்திறனாளிகளுக்கானத் தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளான். பள்ளியிலும் மற்றும்பிற இடங்களிலும் ஓராண்டுக்குள் சுமார் 15, முதல் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளான். இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர் அப்துல்கலாமிடமிருந்தே இரண்டு விருதுகளை வாங்கியிருக்கிறான். ஒன்பது வயதிலிருந்து வாயால் எழுதவும் ஓவியங்கள் வரையவும் ஜனாவுக்கு அடிப்படையாக இருந்தது நம்பிக்கை. மருத்துவரும் பெற்றோரும் ஆசிரியரும் ஊட்டிய அந்த நம்பிக்கையே தன்னை இந்நிலைக்கு உயர்த்தியதாக ஜனா சொல்கிறான். ஆம். ஜனாவுக்கு தன்னம்பிக்கைதான் வாழ்க்கை.

பேப்பர் கப் தயாரிப்புத் தொழிலைத் திறம்பட நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்டக் கண்டியூர் மும்தாஜ் பேகமும் “எனக்கு நானே நம்பிக்கை, நம்பிக்கைதான் என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது” என்று சொல்கிறார். நான்கு பிள்ளைகளுக்குத் தாயான மும்தாஜ் மேலும் சொல்கிறார் – எனக்குத் திருமணமான 15 நாட்களில் என் கணவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். எனக்கு நானே கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தேன். கடன்வாங்கி வெளிநாடு சென்று வேலை பார்த்த அவரின் வேலையும் போய்விட ஊருக்கும் திரும்பி விட்டார். வாங்கியிருந்த கடனும் வட்டியும் பசியும் விரட்ட, அதுவரை வீட்டு வாசல்படியைத் தாண்டாத நான் எங்கள் பிள்ளைகளுக்காக வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மகளிர் சுயஉதவிக் குழுவில் சேர்ந்தேன். அங்கு பேப்பர் கப் தயாரிப்பதற்குப் பயிற்சி கொடுத்தார்கள். அதில் நல்ல அனுபவம் கிடைத்தது. சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தேன். வங்கியில் கடன் வாங்க எனக்கு நானே நம்பிக்கை கொடுத்தேன். எல்லா வங்கிகளிலும் ஏறி இறங்கி இப்பொழுது தொழிலில் கால் ஊன்றி இரண்டு ஆண்டுகளுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் கண்டுள்ளேன் என்று. மும்தாஜூன் வாழ்வில் ஒளியேற்றியிருப்பதும் இந்த நம்பிக்கைதான்.

தென் அமெரிக்க நாடான சிலேயில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கனிமவளச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 2300 அடி ஆழத்தில் 33 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மூன்று இடங்களில் டிரில் போட்டு அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. 600 சதுரஅடி அறையில் 90 டிகிரி வெப்பத்தில் இருட்டில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரேயொரு நான்கு அங்குல குழாய்தான் அவர்களுக்கும் வெளி உலகுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி வரும் கருவி. இந்த நம்பிக்கையை நாம் எந்த வார்த்தையால் விவரிப்பது? 1972ம் ஆண்டில் அந்நாட்டின் ஆண்டெஸ் மலைப்பகுதியில் ஒரு விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் உயிர்பிழைத்தவர்கள் இரண்டு மாதங்கள்வரை உலகத் தொடர்பே இல்லாமல் இருந்து பின்னர் மீட்கப்பட்டனர். இப்படி மீட்கப்பட்டவர்களில் நான்கு பேர், தற்சமயம் பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக இந்தச் சுரங்கத் தொழிலாளிகளுக்கு நம்பிக்கைகளை ஊட்டி வருகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், “சிலே அரசுத் தலைவர் முதல் சாதாரணக் குடிமகன் வரை ஒரு நாடே இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து வருகின்றது, நிச்சயம் இவர்களை மீட்டு விடுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

உங்கள் இலட்சியங்களைத் தைரியமாக வெளியிடுங்கள். யார் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சாதீர்கள் என்று கிரேக்கத் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் சொன்னார்.

வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விடயங்களிலும் நாம் உண்மையைப் பார்க்க முயல வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி என்றார் ஷேக்ஸ்பியர்.

திரைப்பட பாடல் ஆசிரியர் பா.விஜய் நம்பிக்கை பற்றிப் பல கூற்றுக்களை எழுதியிருக்கிறார்.

கைப் பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை, நம்பிக்கையை வீட்டிலே வைத்துவிட்டுப் போகாதே.

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும். நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்.

உன் வலிமைகளையும், திறமைகளையும் முயற்சிகளையும் உன்னை நீயே நம்பாவிட்டால் யார் உன்னை நம்புவார்கள்?. நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால். அதைத் துப்பி விடாதே.

ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள ஒவ்வோர் இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ.

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.

தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது. உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது.

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே. நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அகதி முகாமில் தங்கியிருந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட 174 பேர், 1990 ம் ஆண்டு செப்டம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் இராணுவத்தினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தமது உறவுகளை நினைவுகூர்ந்து சிலரும், காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் சிலரும் ஆலயங்களிலும் வீடுகளிலும் நடை பெற்ற சிறப்பு வழிபாடுகளில் இம்மாதத்தில் கலந்து கொண்டார்கள். காணாமல் போனவர்களைப் பொறுத்தவரை உயிருடன் இருக்கலாம் என உறவினர்களில் ஒரு சாரார் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. நேயர்களே, இந்த நம்பிக்கைதானே வாழ்க்கையை முன்னோக்கி நடக்க வைக்கின்றது. நம்பிக்கையே சிறந்த வெற்றியாளர்களை உருவாக்கி இருக்கிறது. பிறந்த மண்ணைப் பிறிதொரு நாள் பார்ப்போம் என்ற நம்பிக்கைதான் சோகத்தின் உள்ளே சுகத்தை வைத்து வாழ வைத்துள்ளது. எனவே எந்திர மனிதனாக ஒருவித இறுக்கத்துடன் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் நம்பிக்கை மனிதர்களாக, இந்தப் பூமியை சிரிப்பவர் சொர்க்கமாக மாற்ற வேண்டும். இதற்கு இன்னொன்றும் தேவைப்படுகின்றது. அதுதான் இறைநம்பிக்கை.

பிரிந்த கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியவருள் ஒருவரான மார்ட்டின் லூத்தர் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நிகழ்வு சொல்லப்படுகின்றது. இவரது வாழ்க்கை ஒரு கட்டத்தில் போர்க்களமாக இருந்தது. அவரும் தளராமல் போராடி வந்தார். ஆயினும் ஒருநாள் சோர்ந்து போய்க் காணப்பட்டார். அவரது முகம் இருளடைந்திருந்தது. ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்ட அவரது மனைவி இவரை இந்த நிலையில் பார்த்ததும் உள்ளே அறைக்குச் சென்று கறுப்பு ஆடை உடுத்தி அவர் முன் வந்து நின்றார். கறுப்புப் பொதுவாகத் துக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவது அல்லவா. அந்த உடையில் மனைவியைப் பார்த்த லூத்தருக்கு அதிர்ச்சி. அவர் இறந்து விட்டார், அதனால்தான் கறுப்பு உடை என்றாள் அவரது மனைவி. அவர் என்றால்... என்று லூத்தர் கேட்க, அவர் இறைவன்தான் என்றாள் அவரது மனைவி. லூத்தருக்குக் கடும் கோபம். இறைவன் எப்படி இறப்பார் என்று கேட்கவும், சரி, அவர் இறக்கவில்லையென்றால் நீங்கள் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று பதிலுக்குக் கேட்டாள்.

ஆம். எந்தவொரு நம்பிக்கையும் பேச்சளவில் இருக்கக்கூடாது. அது செயலோடு ஒத்துச் செல்வதாக இருப்பதே வெற்றியை அள்ளித்தரும். ஒருவரிடம் நம்பிக்கை இருக்கும்வரை அவரிடம் இழப்பு என்பதே இருக்காது.








All the contents on this site are copyrighted ©.