2010-09-13 16:25:57

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


செப்.13, 2010. நாம் பாவிகளாக இருக்கின்ற போதிலும் இறைவன் நம்மைத் தொடர்ந்து அன்பு செய்துகொண்டிருக்கிறார் என்ற உண்மைக்கு நம் மனங்களைத் திறந்தவர்களாய்ச் செயல்படுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

லூக்கா நற்செய்தி 15ம் அதிகாரம் எடுத்துரைக்கும் இரக்கத்தின் 3 உவமைகள் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை, பாவத்திற்காக மனம்வருந்துதல் என்பது விசுவாசத்தின் அளவுகோல், அதன்வழி நாம் உண்மைக்குத் திரும்புகிறோம் எனக் கூறி ஊதாரி மைந்தன் உவமையை விளக்கினார்.

விசுவாத்தின் மூலமே சுயநலக்கொள்கைகளை மாற்றியமைத்து மகிழ்ச்சியைக் கொணரமுடியும், மற்றும் நம் அயலார்களுடனும் கடவுளுடனும் சரியான உறவை மீண்டும் கொணரமுடியும் என்றார் பாப்பிறை.

இவ்வாரம் வியாழனன்று ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கானத் தன் திருப்பயணத்தைத் துவக்க உள்ளது பற்றிக் குறிப்பிட்டு அதன் வெற்றிக்கான விசுவாசிகளின் ஜெபத்திற்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இம்மாதம் 16 முதல் 19 வரை ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் மேற்கொள்ளும் திருப்பயணத்தின்போது அரசி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தல், பிற மதத்தலைவர்களைச் சந்தித்தல், ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸைத் தனியாகச் சந்தித்தல், கல்வி, கலாச்சார, தொழில் உலகினரையும், பலநாட்டு அரசியல் தூதுவர் குழுவையும் சந்தித்தல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூனைச் சந்தித்தல் மற்றும் இறையடியார் கர்தினால் ஜான் ஹென்றி நியூமேனை முத்திபேறுபெற்றவராக அறிவித்தல், இளைஞர்களைச் சந்தித்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.