2010-09-11 16:22:32

திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பயணத்தின் போது இடம்பெறக்கூடிய எதிர்ப்புகள் குறித்து வத்திக்கான் கவலைப்படவில்லை - திருப்பீடப் பேச்சாளர்


செப்.11,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பிரிட்டனுக்கானத் திருப்பயணத்தின் போது இடம்பெறக்கூடிய எதிர்ப்புகள் குறித்து வத்திக்கான் கவலைப்படவில்லை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

இம்மாதம் 18ம் தேதி இலண்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஊர்வலம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.

அதிகமான சுதந்திரம் இருக்கின்ற மற்றும் கத்தோலிக்கர் சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு சமுதாயத்தில் எதிர்ப்புகள் என்பது அச்சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

வருகிற வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் திருத்தந்தையின் பிரிட்டனுக்கான நான்கு நாள் திருப்பயணம் பற்றி நிருபர்களுக்கு விளக்கிய அருள்தந்தை லொம்பார்தி, குருக்களின் தவறானப் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்தந்தையைச் சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்பதையும் தெரிவித்தார்.

இம்மாதம் 19ம் தேதி கர்தினால் ஜான் ஹென்றி நியுமேனு்க்கு முத்திப்பேறு பட்டம் வழங்கும் திருப்பலி திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முத்தாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் வாழும் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் மக்களில் ஐம்பது இலட்சம் பேர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.